அலசல்
Published:Updated:

அமித் ஷா முதல் மாயா கோட்னானி வரை! - வரிசை கட்டும் அதிர்ச்சித் தீர்ப்புகள்

அமித் ஷா முதல் மாயா கோட்னானி வரை! - வரிசை கட்டும் அதிர்ச்சித் தீர்ப்புகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அமித் ஷா முதல் மாயா கோட்னானி வரை! - வரிசை கட்டும் அதிர்ச்சித் தீர்ப்புகள்

அமித் ஷா முதல் மாயா கோட்னானி வரை! - வரிசை கட்டும் அதிர்ச்சித் தீர்ப்புகள்

குஜராத்தில் 2002-ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பான வழக்குகள் தொடங்கி, பல வழக்குகளில் பி.ஜே.பி தலைவர் அமித் ஷா உள்பட பி.ஜே.பி மற்றும் இந்துத்வா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக விடுதலை செய்யப்படுவது பல கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு, நரோடா பாட்டியா படுகொலை வழக்கு ஆகியவற்றில் கடந்த வாரம் அடுத்தடுத்து வெளியான தீர்ப்புகள் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளன.

2007 மே 18-ம் தேதி. ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, திடீரென குண்டுவெடித்தது. அதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். 58 பேர் படுகாய மடைந்தனர். அதைத்தொடர்ந்து, மசூதிக்கு வெளியே போராடியவர்கள்மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர். இந்த வழக்கில், சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட இந்துத்வா அமைப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அமித் ஷா முதல் மாயா கோட்னானி வரை! - வரிசை கட்டும் அதிர்ச்சித் தீர்ப்புகள்

நீண்ட விசாரணைக்குப் பிறகு 2018 ஏப்ரல் 16-ம் தேதி தேசியப் புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அசீமானந்தா உள்ளிட்ட 5 பேரை, ‘போதிய ஆதாரம் இல்லை’ என்று கூறி நீதிபதி ரவீந்திர ரெட்டி விடுதலை செய்தார். தீர்ப்பை வழங்கிய கையோடு, தனது பதவியை நீதிபதி ராஜினாமா செய்தது பல சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. “தனிப்பட்ட காரணங்களுக்காகவே ராஜினாமா செய்கிறேன். இந்தத் தீர்ப்புக்கும், ராஜினாமாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று குறிப்பிட்டார் நீதிபதி. அவர் மீண்டும் பணியில் சேர்ந்து, ‘விருப்ப ஓய்வு’ கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். ‘வரும் ஜூன் மாதம் ஓய்வுபெற உள்ள நிலையில், ஏன் அவர் இப்படி மாறி மாறி முடிவெடுக்க வேண்டும்’ என சந்தேகம் எழுகிறது. மேலும், இந்த வழக்கை விசாரித்து வந்த தேசியப் புலனாய்வு முகமையின் பொறுப்பு அதிகாரியான பிரதிபா அம்பேத்கர், இரு வாரங்களுக்கு முன்பு திடீரென மாற்றப்பட்டதும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு வெளியான மூன்று நாள்களுக்குப் பிறகு, குஜராத் உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு, பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. 2002-ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு கொடூரத்துக்குப்பிறகு முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை சம்பவங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டது நரோடா பாட்டியா என்ற பகுதி. ஏழை முஸ்லிம் குடும்பங்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தப் பகுதியில், 2002 பிப்ரவரி 28-ம் தேதி மிகமோசமான வன்முறை நிகழ்த்தப்பட்டது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட 97 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். சுமார் 800 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இந்த வழக்கில், அப்போதைய முதல்வர் மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மாயா கோட்னானி கைது செய்யப்பட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் 32 பேருக்கு அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கிக்கு வாழ்நாள் முழுக்க சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டன. மற்ற 30 பேரில் ஏழு பேருக்கு 31 ஆண்டுகள், 22 பேருக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த ஏப்ரல் 20-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதில், மாயா கோட்னானி உள்பட 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பாபு பஜ்ரங்கிக்கு 21 ஆண்டுகளாக சிறைத்தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

அமித் ஷா முதல் மாயா கோட்னானி வரை! - வரிசை கட்டும் அதிர்ச்சித் தீர்ப்புகள்

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜிடம் கேட்டோம். “மெக்கா மசூதி வழக்கையும், நரோடியா பாட்டியா வழக்கையும் தனித்துப் பார்க்க முடியாது. மெக்கா மசூதி வழக்கில், முதலில் 70 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சுமார் ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்தனர். பிறகு,  மாலேகான் குண்டுவெடிப்புகள் தொடர்பாக என்.ஐ.ஏ-க்கு புதிதாக சில ஆதாரங்கள் கிடைத்தன. ‘அபினவ் பாரத்’ உள்ளிட்ட இந்துத்வ அமைப்புகள் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்த பிறகுதான், அந்த 70 இளைஞர்கள் விடுவிக்கப்பட்டனர். மெக்கா மசூதி, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில், மாலேகான், ராஜஸ்தானில் அஜ்மீர் உள்ளிட்ட பல குண்டுவெடிப்பு வழக்குகளில் சுவாமி அசீமானந்தாவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.

சொராபுதீன் என்கவுன்டர் வழக்கு, பிரஜாபதி என்கவுன்டர் வழக்கு என ஒவ்வொரு வழக்காகப் பார்த்தால்... இந்துத்வா அமைப்புகளுக்கு இவற்றில் எந்தளவுக்குத் தொடர்பு உள்ளது என்பது தெளிவாகும். அக்சார்தம் கோயில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. ஆனால், ‘உண்மையான குற்றவாளிகளைத் தப்பவைக்க இவர்கள்மீது இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தினீர்கள். உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் கடைசியாக உத்தரவிட்டது. அதன்மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

அமித் ஷா முதல் மாயா கோட்னானி வரை! - வரிசை கட்டும் அதிர்ச்சித் தீர்ப்புகள்

அமித் ஷா மீதான வழக்கில் நீதிபதி லோயாவுக்கு முன்பிருந்தவரை மாற்றியது, லோயா மரணம், இப்போது லோயா மரணத்தில் மர்மம் எதுவுமில்லை என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருப்பது, மெக்கா மசூதி வழக்கை முடித்து வைத்துவிட்டு நீதிபதி ரவீந்திர ரெட்டி ராஜினாமா செய்தது, அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அரசு அடம்பிடிப்பது என இவை எல்லாமே ஒரு புள்ளியில் வந்து சேரும். இந்துத்வ அமைப்பினர் சம்பந்தப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒன்றுமில்லாமல் செய்வதே இவர்களின் நோக்கம்.  இது ஜனநாயகத்துக்கும், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் கிடைத்துள்ள பலத்த அடி’’ என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், “காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியில்தான், என்.ஐ.ஏ எனப்படுகிற தேசியப் புலனாய்வு முகமை ஏற்படுத்தப்பட்டது. ஏற்கெனவே மத்திய அரசின் கையில் உள்ள சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்றவையெல்லாம், அரசியல் நோக்கத்துடன் பழிவாங்கப் பயன்படுத்தப்படுகின்றன. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இதுதான் நடந்தது. தற்போதைய பி.ஜே.பி ஆட்சியில் மிக அதிகமாக நடக்கிறது. மெக்கா மசூதி குண்டுவெடிப்பு உள்பட பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்வா அமைப்பினருக்குத் தொடர்பு இருப்பதாக சுவாமி அசீமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட எல்லோரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஏற்கெனவே, சொராபுதீன் என்கவுன்டர் வழக்கில் எத்தனை பேர் பலியாகி வருகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். நீதிபதி லோயா வரை சர்ச்சையாகிறது. இந்துத்வ அமைப்புகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள் என்பதை மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. நீதி பரிபாலனம் செய்யும் அமைப்புகளின் மாண்பு சிதைக்கப்படுகிறது. ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலான காலமாக இது இருக்கிறது” என்றார்.

அமித் ஷா முதல் மாயா கோட்னானி வரை! - வரிசை கட்டும் அதிர்ச்சித் தீர்ப்புகள்

தீவிரவாதிகளுக்கு எந்த அடையாளம் இருந்தாலும், வழக்குகள் என்பவை சரிவர விசாரிக்கப்பட்டு, தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும். ஆனால், தற்போது வரிசையாகக் கலவர வழக்குகளிலிருந்து, அதுவும் மிகமிகக் கொடூரமான செயல்களைச் செய்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு, தண்டனையும் விதிக்கப்பட்டவர்களே கூட விடுதலையாவது, விசாரணை அமைப்புகளின் மீது சந்தேகத்தை விதைக்கிறது. இவர்கள் உண்மையிலேயே நியாயமாக விசாரணை நடத்திதான் குற்றவாளிகளைக் கைது செய்தார்களா... அல்லது அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ்காரர்களைத் திருப்திப்படுத்துவதற்காக வழக்குகளைப் போட்டார்களா என்று கேள்வி தற்போது எழுகிறது. அன்றைக்கு நியாயமாக விசாரணை நடத்தி வழக்கைப் பதிந்தவர்கள், இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி-யைத் திருப்திப்படுத்துவதற்காக சட்டத்தின் ஓட்டைகளைக் குற்றவாளிகள் பயன்படுத்துவதற்கு அனுமதித்தார்களா என்கிற கேள்வியும் எழுகிறது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட வழக்குகள் எல்லாம், இப்போது பி.ஜே.பி ஆட்சிக் காலத்தில் ஒன்றுமில்லாமல் போவதற்கு என்ன காரணம்? ஆட்சி மாறும்போது அரசின் கொள்கைகள் மாறலாம். குற்றங்களும் தண்டனைகளும்கூட மாறிவிடுமா? இத்தகைய போக்கு நீடிப்பது... நாளைக்கு நாட்டில் வன்முறையைத்தான் வளர்த்தெடுக்குமே தவிர, ஒருபோதும் அமைதியை நிலைநாட்டாது என்பதே நிதர்சனம்!

- ஆ.பழனியப்பன்