அலசல்
Published:Updated:

நீதிமன்றம் மீதான நம்பிக்கை சிதைகிறதா?

நீதிமன்றம் மீதான நம்பிக்கை சிதைகிறதா?
பிரீமியம் ஸ்டோரி
News
நீதிமன்றம் மீதான நம்பிக்கை சிதைகிறதா?

நீதிமன்றம் மீதான நம்பிக்கை சிதைகிறதா?

நீதிமன்றம் மீதான நம்பிக்கை சிதைகிறதா?

ச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, தலைமை நீதிபதிக்கு எதிரான பதவிநீக்கத் தீர்மான நோட்டீஸ் என்ற ஆயுதத்தைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தது, ஒட்டுமொத்த நீதித்துறையையும் உலுக்கியது. அந்த நோட்டீஸை மாநிலங்களவைத் தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்ய நாயுடு தள்ளுபடி செய்துவிட்டார். இதனால் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், பல புதிய பிரச்னைகளுக்கு இது காரணமாகியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் லோகூர் ஆகியோர் 2018 ஜனவரி மாதம் செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, ‘‘தலைமை நீதிபதியின் நிர்வாகம் சரியில்லை’’ என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு, ‘தலைமை நீதிபதியைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுக்கும் அளவுக்குப் பிரச்னை சென்றது.

‘பிரசாத் மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கை அவசரகதியில் விசாரித்து, குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவான உத்தரவைப் பிறப்பித்தார்’ என்பது தீபக் மிஸ்ராமீதான குற்றச்சாட்டு. இதை, மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷன், அவரின் மகன் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்காகப் பதிவுசெய்தனர். இதே மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் உதவிய ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி ஐ.எம்.கொடிசியை சி.பி.ஐ கைது செய்தது. இப்போது, அவர் ஜாமீனில் வந்துள்ளார். அவர் பற்றிய புதிய செய்திகளை வெளியிட டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த வாரம் பத்திரிகைகளுக்குத் தடை விதித்தது.

நீதிமன்றம் மீதான நம்பிக்கை சிதைகிறதா?

ஊழல் தவிர, நீதித் துறையைத் தவறாகப் பயன்படுத்தியது, நீதித் துறையின் சுதந்திரத் தன்மையைப் பாதுகாக்கத் தவறியது உள்பட ஐந்து முக்கியக் குற்றச்சாட்டுகள் தீபக் மிஸ்ரா மீது வைக்கப்பட்டுள்ளன. ‘‘தலைமை நீதிபதி, தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதிகளுடன் ஆலோசனை செய்து, அதன் பின்னர் வழக்குகளை முறையாக அனைத்து நீதிபதிகளுக்கும் ஒதுக்க வேண்டும்’’ என்று கேட்டுத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், “தலைமை நீதிபதி பதவி என்பது அரசியல் சாசனப் பதவி. வழக்குகள் ஒதுக்குவது உள்ளிட்ட அனைத்தையும் அவரே முடிவு செய்யலாம்” என்று தமக்குத்தாமே ஒரு தீர்ப்பை வழங்கியதும், நீதித் துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இரு வாரங்களுக்கு முன்புகூட, தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதத்தை நீதிபதி குரியன் ஜோசப் எழுதினார். உத்தரகாண்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப், உச்ச நீதிமன்ற சீனியர் பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்து மூன்று மாதங்கள் கடந்த பின்னரும், மத்திய அரசு அமைதி காக்கிறது. எனவே, ‘மத்திய அரசு மீது நீதிமன்றம் தாமாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் குரியன் ஜோசப் கூறியிருந்தார். அருணாசலப் பிரதேச மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வந்ததை ரத்து செய்து உத்தரவிட்டவர் நீதிபதி ஜோசப் என்பதால், அவரை உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்காமல் இழுத்தடிப்பதாக மத்திய அரசுமீது குற்றச்சாட்டு நிலவுகிறது. ‘தலைமை நீதிபதி, மத்திய அரசு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வரலாறு மன்னிக்காது’ என்று அந்தக் கடிதத்தில் குரியன் ஜோசப் கடுமையாகக் கூறியிருந்தார். அமித் ஷா வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியான மறுநாள், தலைமை நீதிபதியைப் பதவிநீக்கம் செய்யக் கோரும் நோட்டீஸை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் எதிர்க்கட்சிகள் வழங்கின.

“உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் எழுப்பப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டுகளுக்கு இன்னும் தலைமை நீதிபதி தீர்வு காணவில்லை. நீதித் துறையைக் காப்பது நாடாளுமன்றத்தின் கடமை. இதனை அரசியலாகப் பார்க்கக் கூடாது. இரண்டையும் அரசியல் சாசன அமைப்புகளாகத் தான் பார்க்க வேண்டும். ஒன்றுக்கு ஆபத்து என்றால், மற்றொன்றின் தலையீடு அவசியம்” என்கிறார் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல். “பதவிநீக்கத் தீர்மான நோட்டீஸ் தவிர்க்க முடியாத முடிவு” என்கிறார்கள், மூத்த வழக்கறிஞர் களான கே.டி.எஸ்.துளசி மற்றும் விவேக் தங்கா. மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமனோ, “அரசியல் சாசனத்தைக் காக்கும் உயரிய இடம் உச்ச நீதிமன்றம்தான். நாடாளுமன்றம் அல்ல. எனவே, தலைமை நீதிபதிக்கு எதிரான பதவிநீக்கத் தீர்மானம் என்பது, அரசியல் சாசன அமைப்பைச் சீர்குலைக்கும்’’ என்கிறார். மூத்த வழக்கறிஞர் களான ஹரீஷ் சால்வே, அரியமா சுந்தரம், முகுல் ரோத்தகி ஆகியோர், “புகார்கள் எதுவாக இருந்தாலும், அதனை உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்துக்குப் பாதிப்பு வராத வகையில் கையாள வேண்டும். தலைமை நீதிபதி மீதான பதவி நீக்க நடவடிக்கை, நீதிமன்றம்மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிடும்” என்கிறார்கள்.

நீதிமன்றம் மீதான நம்பிக்கை சிதைகிறதா?

பொதுவாக, இப்படிப் பதவிநீக்கத் தீர்மானம் வரும்போது, அதை மூன்று நீதிபதி குழுவின் விசாரணைக்குப் பரிந்துரைப்பது மரபு. வெங்கய்ய நாயுடு அதைச் செய்திருக்கலாம். வரும் அக்டோபரில் தீபக் மிஸ்‌ரா ஓய்வுபெறுகிறார். விசாரணைக்குழு அதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லையென்றால், சங்கடமே இல்லாமல் தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால், அப்படிச் செய்வதில் ஒரு சங்கடம் இருந்தது. அந்த விசாரணை நடக்கும் நேரத்தில் நிர்வாக விஷயங்கள் எதையும் தீபக் மிஸ்‌ரா செய்ய முடியாது.

எனவே, தன் வெளியூர்ப் பயணத்தை ரத்துசெய்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமையான ஏப்ரல் 22-ம் தேதி டெல்லி திரும்பிய வெங்கய்ய நாயுடு, முன்னாள் இந்நாள் அரசு சட்ட அதிகாரிகள், நாடாளுமன்றச் செயலாளர்கள் எனப் பலரிடமும் தீவிர ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, தலைமை நீதிபதிக்கு எதிரான பதவிநீக்கத் தீர்மான நோட்டீஸைத் தள்ளுபடி செய்தார். ‘இப்படி அவர் தள்ளுபடி செய்யலாமா?’ என்ற புதிய சர்ச்சை இப்போது எழுந்துள்ளது.

- டெல்லி பாலா