Published:Updated:

வழக்கறிஞர்மீதே பாய்ந்த ‘உபா’ சட்டம்! - போலீஸ் போட்டது பொய் வழக்கா?

வழக்கறிஞர்மீதே பாய்ந்த ‘உபா’ சட்டம்! - போலீஸ் போட்டது பொய் வழக்கா?
பிரீமியம் ஸ்டோரி
News
வழக்கறிஞர்மீதே பாய்ந்த ‘உபா’ சட்டம்! - போலீஸ் போட்டது பொய் வழக்கா?

வழக்கறிஞர்மீதே பாய்ந்த ‘உபா’ சட்டம்! - போலீஸ் போட்டது பொய் வழக்கா?

‘தமிழகத்தில் ‘உபா’ (UAPA) சட்டத்தில் கைது செய்யப்பட்ட முதல் நபர்’ என்ற அடையாளம் பெருமைக்குரியதா எனத் தெரியவில்லை. அந்த அடையாளத்துக்குரியவர், வழக்கறிஞர் முருகன். அது என்ன உபா, யார் இந்த முருகன் என்பவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு.

மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற புகாரில் கடந்த வருடம் கைது செய்யப் பட்டவர் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகன். 480 நாள்களுக்கும் மேலாக திருச்சி சிறையில் இருந்துவரும் நிலையில், தொடர் சட்டப் போராட்டத்துக்குப் பின் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. ஆனாலும், வெளியில்வர முடியாத வகையில், இன்னொரு வழக்கும் அவர்மீது பதிவு செய்யப்பட்டு, அதற்காகப் போடப்பட்ட ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளது.

வழக்கறிஞர்மீதே பாய்ந்த ‘உபா’ சட்டம்! - போலீஸ் போட்டது பொய் வழக்கா?

அவர் மீது ஏன் இந்த வழக்கு? பிணை கொடுக் காமல் நீண்ட சிறைவாசம் ஏன்? ‘குடியுரிமைப் பாதுகாப்பு நடுவ’த்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜாவிடம் பேசினோம். ‘‘எங்கள் அமைப்பின் (CPCL) மாநிலச் செயலாளராக இருந்தவர் வழக்கறிஞர் முருகன். பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மாவோயிஸ்ட்கள் என்று குற்றம்சாட்டி சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்காகவும் வழக்காடி வந்தார். 2017-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி, மதுரை எஸ்.ஆலங்குளத்திலுள்ள அவர் வீட்டுக்குள் கரூர் க்யூ பிரிவு துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் சீருடை அணியாத 20 போலீஸார் அதிகாலையில் நுழைந்தனர். வயதான தாயார், மனைவி, ஐந்து வயதுக் குழந்தை ஆகியோரை, காலை 5.30 முதல் பகல் 12.30 வரை எங்கேயும் நகரவிடாமல் சோதனை செய்தனர். தகவல் கேள்விப்பட்டு நாங்கள் சென்றபோதும் எங்களை அங்கே அனுமதிக்கவில்லை. வழக்கறிஞரான அவர் மனைவி அழகுதேவியையும் போலீஸார் ஆபாசமாகத் திட்டியுள்ளனர். வீட்டில் படிப்பதற்காக முருகன் வைத்திருந்த நீதிமன்றத் தீர்ப்புகள், புத்தகங்கள், அவர் ஆஜராகிக் கொண்டிருக்கும் வழக்குகளின் ஆவணங்கள், அவர் மனைவி பயன்படுத்திவந்த ஹோமியோபதி மருந்துகள் போன்றவற்றை போலீஸார் எடுத்துக்கொண்டனர். கடைசியில், மாவோயிஸ்ட் களுடன் இணைந்து முருகன் செயல்பட்டதாக, ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட’த்தில் (UAPA) கைது செய்யப்பட்டு கரூர் கொண்டு செல்லப்பட்டார்.

வழக்கறிஞர்மீதே பாய்ந்த ‘உபா’ சட்டம்! - போலீஸ் போட்டது பொய் வழக்கா?

இதற்கு உண்மையான காரணம், அவர் தொடர்ந்து மாவோயிஸ்ட்களுக்காக வழக்கறி ஞராகப் பணியாற்றியதுதான். மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு உறுப்பினர் சேர்த்ததாகக் கூறி சந்திரா, கலா ஆகியோர் கடந்த ஆண்டு கரூரில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்காக வழக்கில் ஆஜராகி வந்தவரையே அந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்துவிட்டார்கள். இதைவிடக் கொடுமை எங்கும் நடக்காது.

வழக்கறிஞர்மீதே பாய்ந்த ‘உபா’ சட்டம்! - போலீஸ் போட்டது பொய் வழக்கா?

முருகன் தமிழகம் முழுவதும் நடக்கும் மனித உரிமை மீறல் வழக்குகள், அரசியல் வழக்குகளில் ஆஜராகி வருபவர். பெரியகுளம், கோவை, தர்மபுரி, கரூர் போன்ற இடங்களில் நடைபெறும் மாவோயிஸ்ட்கள் தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். காஷ்மீர் உள்பட பல வட மாநிலங்களில் ‘உபா’ சட்டத்தை அதிகமாகப் பயன்படுத்தி வந்தாலும், தமிழகத்தில் வழக்கறிஞர் முருகன் மீதுதான் முதலாவதாகப் போடப்பட்டது. இது தடா, பொடா போன்றவற்றை விட கொடூரமான சட்டம். 180 நாள்கள் வரையிலும் ஜாமீன் கேட்க முடியாது. இப்படியே நிலைமை தொடர்ந்தால், பாதிக்கப்பட்ட யாருக்காகவும் எந்த வழக்கறிஞரும் வாதாட வரமாட்டார்கள். 

முருகனுக்கு ஜாமீன் வேண்டிப் போராடி வந்தோம். அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற பயத்தில் சம்பந்தமே இல்லாமல் தர்மபுரியில் 2017 ஜனவரி 1-ம் தேதி பதிவு செய்யப்பட்ட மாவோயிஸ்ட் சீனிவாசன் என்பவரின் வழக்கில், ஏழு மாதங்கள் கழித்து முருகனையும் இணைத்துள்ளார்கள். சீனிவாசனை 2016-ல் மதுரை பேருந்து நிலையம் அருகில் முருகன் சந்தித்து எலெக்ட்ரானிக் பொருள்கள், புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள், உடைகள், பணம் ஆகியவற்றைக் கொடுத்ததாகவும் அதை இரு சாட்சிகள் பார்த்ததாகவும் கதை சொன்னார்கள். ஆனால், சிவா, ரமேஷ் என்ற அந்த இரண்டு சாட்சிகளும், ‘நாங்கள் முருகனையோ, சீனிவாசனையோ பார்த்ததே இல்லை. முருகன்மீது பொய் வழக்கு போட்டுள்ளார்கள்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலமே போலீஸின் திட்டம் அம்பலமாகிவிட்டது. கரூர் வழக்கில் முருகனுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. தர்மபுரி வழக்கை டிஸ்சார்ஜ் செய்யச் சொல்லிய மனுவும், இந்த வழக்கில் முருகனின் ஜாமீன் மனுவும் கடந்த ஆறு மாத காலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவில்லை. நீதிபதிகளைத்தான் நம்பியிருக்கிறோம்’’ என்றார்.

க்யூ பிரிவினரிடம் பேசியபோது, ‘‘குற்றம்சாட்டப் பட்ட கலா, வழக்கறிஞர் முருகன் வீட்டிலும் அலுவலகத்திலும் தங்கியுள்ளார். மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு நிதி திரட்டுவது, எதிர்காலச் செயல் பாடுகள் பற்றி முருகன் உரையாடியுள்ளார். குறிப் பிட்ட சிம் கார்டிலிருந்து சம்பந்தப்பட்டவர்களுடன் பேசியுள்ளார். மாவோயிஸ்ட்களுக்கும் தலைமைக்கும் இடையில் தகவலைப் பரிமாறுபவராக அவர் செயல்பட்டார். அவர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஹோமியோபதி மருந்துகள், மாவோயிஸ்ட்களுக்கு வழங்குவதற்காக அவர் வைத்திருந்தவை’’ எனக் கூறுகிறார்கள்.

உபா போன்ற கொடுமையான சட்டங்களை அரசுக்கு எதிராகப் போராடக் கூடிய யார் மீதும் பாய்ச்சலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

- செ.சல்மான் பாரிஸ்

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்