
காவிரி ஷாக்: மேலாண்மை இல்லை... மேற்பார்வைதான்!
‘‘வரைவுத் திட்டம் ரெடியாக இருக்கிறது. பிரதமரும் மத்திய அமைச்சர்களும் கர்நாடகா தேர்தலில் பிஸியாக இருப்பதால் அமைச்சரவையின் ஒப்புதல் பெற முடியவில்லை’’ என்ற காரணத்தைக் காவிரி விஷயத்தில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் சொல்லிவந்தார். ஒருவழியாகக் கர்நாடகா தேர்தல் முடிந்துவிட்டது. அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமலே, காவிரி வரைவுத் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டது மத்திய அரசு. உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவைத் தொடர்ந்து, சீல் வைக்கப்பட்ட கவரில் காவிரி வரைவுத் திட்டத்துடன் மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் உ.பி.சிங் மே 14-ம் தேதி காலை 10.25 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
11.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவுடன், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், 15 பக்கங்கள் கொண்ட வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார். பின்னர், ‘‘மேலாண்மை வாரியமோ, அத்தாரிட்டியோ, கமிட்டியோ... ஏதேனும் ஒரு பெயரை வைத்துக்கொள்ளலாம். நான்கு மாநிலங்களின் கருத்தையும் கேட்டு நீதிமன்றமே ஒரு முடிவை எடுத்து அறிவிக்கலாம்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘‘மீண்டும் ஒரு சுற்று வாதம், விசாரணை தேவையா..?” என்று கேட்டார். தமிழக அரசு வழக்கறிஞர் சேகர் நாப்டேவும், ‘‘தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டு, அவர்கள் பதிலளித்து, பின்னர் ஒரு முடிவுக்கு வருவதால் மீண்டும் காலதாமதமாகும்’’ என்றார்.

நீதிபதிகள் உடனே வரைவு அறிக்கையை நான்கு மாநில வழக்கறிஞர்களுக்கும் வழங்க உத்தரவிட்டனர். பின்னர், ‘‘உச்ச நீதிமன்றத்தின் பிப்ரவரி 16-ம் தேதி உத்தரவைச் செயல்படுத்து வதற்கான அனைத்தும் வரைவு அறிக்கையில் இருக்கிறதா என்பது குறித்து மூன்று நாள்களில் பதிலளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். 15 பக்க வரைவுத் திட்டம் கையில் கிடைத்தவுடன் தமிழக வழக்கறிஞர்கள் அதனை உடனே சென்னைக்கு அனுப்புவதில் பரபரப்பானார்கள். சிலர், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அதன் அம்சங்களை விளக்கினர். பின்னர் உச்ச நீதிமன்றப் புல்வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ‘‘இது தமிழக அரசின் தொடர் சட்டப் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி’’ என்றார்.
ஆனால், சில நிமிடங்களிலேயே வரைவுத் திட்டத்தைப் படித்துவிட்டு எதிர்க்கட்சிகள் கொந்தளிக்க ஆரம்பித்தன. ‘காவிரி நீர் மேலாண்மை செயல்திட்டம் 2018’ என்பதுதான் இந்த ஸ்கீமுக்கு மத்திய அரசு வைத்திருக்கும் பெயர். விரைவில் இதற்கு உச்ச நீதிமன்றம் வேறு நல்ல பெயரைச் சூட்டும். ‘இது அரசிதழில் வெளியானவுடன் நடைமுறைக்கு வரும்’ என்று மத்திய அரசு கூறியுள்ளது. காவிரி நடுவர் மன்றம் சொன்ன மேலாண்மை வாரியம் போன்ற எந்த அதிகாரமும் இல்லாத, வெறும் மேற்பார்வை வாரியமாக இது இருக்கும். அணைகள் எதுவும் இந்த ஆணையத்தின் கட்டுப்பாட்டில் போகாது. கர்நாடகா தண்ணீர் திறக்காவிட்டாலும், இந்த ஆணையத்தால் எதுவும் செய்யமுடியாது. ஆணையம், மத்திய அரசிடம் உதவி கேட்கும். மத்திய அரசு எடுக்கும் முடிவே இறுதியானது.
‘கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும்’ என்ற தமிழகத்தின் கோரிக்கை வரம்புகளுக்கு அப்பால் சென்று, என்னென்ன பயிர் செய்யலாம், என்னென்ன பயிர் செய்யக்கூடாது, சொட்டு நீர்ப் பாசனம், தொழிற்சாலைகளுக்கு எவ்வளவு தண்ணீர் தருவது உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் இந்த ஆணையம் தலையிடுமாம். இந்த ஆணையத்தின்கீழ் ‘காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு’ ஒன்றும் அமையும். ஒன்பது பேர் கொண்ட அந்தக் குழுவுக்கு மத்திய அரசே ஐந்து பேரை நியமிக்கிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சார்பில் தலா ஓர் உறுப்பினர் நியமித்துக்கொள்ளலாம். இந்த ஆணையத்தின் தலைமையகம் பெங்களூருவில் நிறுவப்படும் என்பதிலிருந்தே ‘இது என்ன செய்யும்’ என்பது புரிந்துவிடுகிறது.
மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் உ.பி.சிங், ‘‘இனிமேல் ஸ்கீமில் மாற்றம் செய்ய முடியாது’’ என்று கூறியுள்ளார். அதிகாரம் இல்லாத இந்த ஆணையம் அவசியமா என்பதைத் தமிழகம் முடிவு செய்யவேண்டும். ஏனெனில், மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க முடியாது!
- டெல்லி பாலா
அதிகாரம் குறைந்த ஆணையம்!
‘உச்ச நீதிமன்றம் சொன்ன ஸ்கீம் என்பது எப்படி இருக்க வேண்டும்’ என விளக்கம் கேட்டு மத்திய அரசு மார்ச் மாத இறுதியில் தாக்கல் செய்த மனுவில், ‘பக்ரா - பியாஸ் மேலாண்மை வாரியம் போன்ற அமைப்பை அமைக்கவேண்டுமா... அல்லது நர்மதா அத்தாரிட்டி போன்று செயல்படுத்த வேண்டுமா?’ என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்டிருந்தது. உச்ச நீதிமன்றமோ, ‘‘மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டம் 1956-ன்படி எதுவானாலும் மத்திய அரசே முடிவு செய்துகொள்ளலாம்’’ என்று கூறியிருந்தது. இதைத் தனக்குச் சாதகமாக எடுத்துக்கொண்ட மத்திய அரசு, காவிரி நடுவர் மன்றம் சொன்னதுபோல சகல அதிகாரங்களும் கொண்டதாக இதை உருவாக்கவில்லை. அதாவது, பக்ரா - பியாஸ் மேலாண்மை வாரியத்திடம் இருப்பதுபோன்று ‘அணைகளின் கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு உரிமை’ ஆகிய முக்கிய அதிகாரங்கள் சேர்க்கப்படவில்லை. மாறாக, நர்மதா நதிநீர் ஆணையம் போல நீரைத் தேக்குவது, முறைப்படுத்துவது, பகிர்வது, நீர்க் கட்டுப்பாடு ஆகியவை மட்டுமே மத்திய அரசு முன்மொழிந்துள்ள இந்த அத்தாரிட்டியின் கீழ் வருகிறது. அணைகளின் உரிமை, பராமரிப்பு, செயல்பாடு ஆகியவை மாநிலங்களிடமே இருக்கும். உச்ச நீதிமன்றத்தின் ஆணையையே மதிக்காத கர்நாடக அரசு, எந்த அதிகாரமும் இல்லாத இந்த ஆணையத்தை எப்படி ‘டீல்’ செய்யும் என்பதை நினைத்துப்பார்த்தாலே நடுக்கமாக இருக்கிறது.