Published:Updated:

‘வாரியத்தைவிட ஆணையத்துக்கே அதிக அதிகாரம்!’

‘வாரியத்தைவிட ஆணையத்துக்கே அதிக அதிகாரம்!’
பிரீமியம் ஸ்டோரி
News
‘வாரியத்தைவிட ஆணையத்துக்கே அதிக அதிகாரம்!’

மத்திய அரசு பல்டி

காவிரி வழக்கை இத்தனை நாள்கள் தள்ளிப்போட்டது மத்திய அரசு என்றால், மே 16 மற்றும் 17-ம் தேதிகளில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின்போது இந்த விவகாரத்தை ஒரு மாதத்துக்குத் தள்ளிப் போட முயன்றது கர்நாடகா. அம்மாநில வழக்கறிஞரான ஷ்யாம் திவான், ‘‘கர்நாடகாவில் அரசு அமைக்கும் முயற்சிகள் இப்போதுதான் நடக்கின்றன. நான் இந்த வழக்கு தொடர்பாக மாநில அமைச்சரவையின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டியுள்ளது. கர்நாடகாவில் அரசியல் வெற்றிடம் நிலவுகிறது. எனவே இந்த வழக்கு விசாரணையை ஜூலைக்குத் தள்ளிவைக்க வேண்டும்’’ என்றார்.

நீதிபதிகள் தீபக் மிஸ்‌ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய், சந்திரசூட் அடங்கிய அமர்வு இதை நிராகரித்துவிட்டது. ‘‘தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை என்றாலும், ஏதோ ஓர் அரசு அங்கு செயல்படுகிறது. இந்த வழக்கை ஜூலைக்குத் தள்ளிப்போட்டால் தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்தில் எப்படித் தண்ணீர் கிடைக்கும்?’’ என்று சொல்லி, ஷ்யாம் தவானின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.

‘வாரியத்தைவிட ஆணையத்துக்கே அதிக அதிகாரம்!’

மே 16-ம் தேதி தமிழக வழக்கறிஞர் சேகர் நாப்டே, ‘‘கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா நதி நீர்ப் பங்கீட்டு வாரியங்கள் போன்று எங்களுக்கும் காவிரி மேலாண்மை வாரியம்தான் வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதிதான் இதன் தலைவராக நியமிக்கப்பட வேண்டும். இதன் தலைமையகம் பெங்களூரில் இருக்கக்கூடாது. அது டெல்லிக்கு மாற்றப்பட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். ‘‘ஏன் காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயர் வைக்கக்கூடாது?’’ என்று நீதிபதிகள் கேட்டனர். ‘‘நீதிமன்றம் என்ன உத்தரவிட்டாலும் அதனை ஏற்கத் தயார்’’ என்றார் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்.

புதுவை சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஏ.எஸ்.நம்பியார், ‘‘இந்த வரைவு அறிக்கையில் ‘தண்ணீர் திறக்க உத்தரவிட்ட பின்பும் கர்நாடகா செயல்பட மறுத்தால் மத்திய அரசின் உதவியை நாடலாம். அப்போது மத்திய அரசு எடுக்கும் முடிவே இறுதியானது’ என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் முடிவுக்கு மீண்டும் பிரச்னை சென்றால், மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் முடிவுக்கு அது மாறிவிடும். வீண் சிக்கல்கள் மீண்டும் உருவாகும்’’ என்றார். சேகர் நாப்டேவும் இதையே சொன்னார்.

நீதிபதிகளும் இதை ஏற்றனர். ‘மத்திய அரசுக்கு இறுதி அதிகாரம் வழங்கும் பிரிவை நீக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயர் வைக்க வேண்டும், தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற வேண்டும்’ ஆகிய மூன்று திருத்தங்களை மேற்கொள்ள நீதிபதிகள் பரிந்துரைத்தனர். புதிய திருத்தங்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மறுநாள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

வியாழன் மதியம் 12.40 மணியளவில் வழக்கு விசாரணை தொடங்கியது. முத்திரை இடப்பட்ட அடர்மஞ்சள் நிற உறையில் கொண்டுவந்த திருத்திய வரைவு அறிக்கையை கே.கே.வேணுகோபால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். சீல் செய்த கவரிலேயே நான்கு மாநில வழக்கறிஞர்களுக்கும் அது வழங்கப்பட்டது. அதைப் பிரித்துப் பார்த்த தமிழக வழக்கறிஞர்களுக்கு அதிர்ச்சி. ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்று பெயர் வைக்க முதல் நாள் ஒப்புக்கொண்ட மத்திய அரசு மீண்டும் பல்டியடித்திருந்ததுதான் அதிர்ச்சிக்கான காரணம். ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ (Cauvery Water Management Authority) என்று திருத்திய வரைவு அறிக்கையில் பெயர் மாற்றப்பட்டிருந்தது. இதுகுறித்து தமிழக வழக்கறிஞர் கேள்வி எழுப்பியபோது, ‘‘வாரியத்தைவிட இந்த ஆணையத்துக்குக் கூடுதலாகவே அதிகாரம் உள்ளது’’ என்றார் கே.கே.வேணுகோபால். ஆனால், அது என்ன அதிகாரம் என்று அவர் விளக்கவில்லை.

‘கர்நாடக அணைகளிலிருந்தும், மேட்டூர் அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க மேலாண்மை ஆணையம்தான் உத்தரவிடும். ஒருங்கிணைந்த முடிவின் அடிப்படையில் இரு மாநிலங்களும் தண்ணீரைத் திறக்க வேண்டும்’ என்று இந்த வரைவு அறிக்கை சொல்கிறது. திருத்திய வரைவு அறிக்கையில் உள்ள அனைத்து அம்சங்களையும் ஆராயும் உச்ச நீதிமன்றம், ‘எதைச் சேர்க்க வேண்டும், எதை நீக்க வேண்டும்’ என்று உத்தரவிடும். பிறகு மத்திய அரசிதழில் அது வெளியிடப்படும். அதன்பிறகுதான் இந்த ஆணையம் செயல்படத் தொடங்கும். 

- டெல்லி பாலா