அலசல்
Published:Updated:

தண்ணீரைக் கர்நாடகா திறக்காவிட்டால், மத்தியப்படை அழைக்கப்படுமா?

தண்ணீரைக் கர்நாடகா திறக்காவிட்டால், மத்தியப்படை அழைக்கப்படுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
தண்ணீரைக் கர்நாடகா திறக்காவிட்டால், மத்தியப்படை அழைக்கப்படுமா?

தண்ணீரைக் கர்நாடகா திறக்காவிட்டால், மத்தியப்படை அழைக்கப்படுமா?

காவிரி வழக்கில் மத்திய அரசு மாற்றியமைத்த வரைவுச் செயல்திட்ட அறிக்கையை ஏற்றுத் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், ‘தண்ணீரைத் திறக்க கர்நாடகா மறுத்தால் மத்திய அரசின் உதவியை நாடலாம்’ என்று கூறியுள்ளது. அது எத்தகைய உதவி? மத்தியப் படையைக் கோரும் உதவியா... இல்லை, வேறு ஏதேனும் உதவியா என்பது குறித்துத் தீர்ப்பில் விளக்கப்படவில்லை.

காவிரியில் தமிழகத்துக்கு 192 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று 2007-ல் காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்துத் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மேல்முறையீடு செய்தன. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி., கர்நாடகத்துக்கு 284 டி.எம்.சி., கேரளாவுக்கு 30 டி.எம்.சி., புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி வழங்க வேண்டும், இதைச் செயல்படுத்த ‘ஸ்கீம்’ என்ற வரைவுச் செயல்திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பளித்தது. வரைவுச் செயல் திட்டத்தைத் தாக்கல் செய்யாமல் இழுத்தடித்துவந்த மத்திய அரசு, 14 பக்க வரைவுச் செயல்திட்ட அறிக்கையை மே 14-ம் தேதி தாக்கல் செய்தது. பிறகு, மாற்றியமைக்கப்பட்ட வரைவுச் செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு மே 17-ம் தேதி தாக்கல் செய்தது. அன்றைய தினம் தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், மறுநாள் மாலை 4 மணிக்கு அல்லது 22, 23 தேதிகளில் தீர்ப்பு அளிப்பதாகக் கூறியது. மே 17-ம் தேதி நள்ளிரவு வரை வழக்கைப் பட்டியலிடாத உச்ச நீதிமன்றம், மே 18-ம் தேதி காலை 11 மணிக்கு திடீரென வழக்கின் தீர்ப்பைப் பிற்பகல் இரண்டு மணிக்கு வெளியிடுவதாக அறிவித்தது. மறுநாள் முதல் உச்ச நீதிமன்றத்துக்குக் கோடைவிடுமுறை என்பதால் இந்தத் திடீர் மாற்றம்.

தண்ணீரைக் கர்நாடகா திறக்காவிட்டால், மத்தியப்படை அழைக்கப்படுமா?

தீர்ப்பை வாசித்த நீதிபதி கான்வில்கர், மத்திய அரசின் திருத்திய வரைவு அறிக்கையை அப்படியே ஏற்பதாக அறிவித்தார். வரைவுத் திட்டமானது, நடுவர்மன்ற உத்தரவு மற்றும் நீதிமன்றத்தின் பிப்ரவரி மாதத் தீர்ப்புக்கு உட்பட்டதாக இருப்பதால், அதனை ஏற்பதாகக் கூறி, தீர்ப்பிலும் அதனை அப்படியே சேர்த்துள்ளனர்.

தண்ணீர் திறப்பதற்கான இறுதி அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கக்கூடாது; ஆணையத்திடமே அந்த அதிகாரம் இருக்க வேண்டும் என்ற தமிழ்நாடு, கேரள அரசுகளின் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் ஏற்கப்பட்டது.

மாதா மாதம் எவ்வளவு தண்ணீரைத் திறக்க வேண்டும் என்கிற உத்தரவை இயந்திரத்தனமாகப் பிறப்பிக்காமல், உத்தரவை முழுவீச்சில் திறம்படச் செயல்படுத்தும் ஆணையமாக இருக்க வேண்டும் என வாதிட்ட புதுவை வழக்கறிஞர் ஏ.எஸ்.நம்பியாருக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைய வேண்டும் என்ற தமிழக அரசு வழக்கறிஞரின் கோரிக்கைக்கு பதில் கிடைக்க வில்லை. தற்போது அமையவிருக்கும் இந்த ஆணையம், நடுவர் மன்றம் கூறியதுபோல் நீர்வளத்துறை நிபுணர்களை அதிக உறுப்பினர்களாக நியமிக்காமல், அதிகாரிகளை அதிக உறுப்பினர்களாக நியமிக்கும் அமைப்பாக மத்திய அரசு மாற்றியுள்ளது.

தண்ணீரைக் கர்நாடகா திறக்காவிட்டால், மத்தியப்படை அழைக்கப்படுமா?

ஆணையத்தின் தலைவர் உட்பட ஆறு பேர் மத்தியிலிருந்தும், நான்கு மாநில நீர்வளத்துறைச் செயலாளர்கள் மாநில உறுப்பினர்களாகவும் இடம்பெறுவர். பெங்களூரில் அமையும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவிலும் இதேபோல் ஒன்பது பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். கர்நாடகா பயன்படுத்தும் நீரின் அளவையோ, பயிரிடப்படும் பரப்பளவையோ இந்த ஆணையத்துக்குத் தெரிவிக்கத் தேவையில்லை என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை நீதிமன்றம் முழுமையாக நிராகரித்துவிட்டது. அப்படி அணைகளின் நீர் இருப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கேட்டுப் பெற்று நீரை முறையாகப் பகிர்ந்தளிப்பது என்பது மாநில உரிமையில் தலையிடுவது ஆகாது என்றும் உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளது.

இறுதியாக, ‘தமிழ்நாட்டில் தற்போது நிலவும் தண்ணீர்ப் பற்றாக் குறையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக இந்த வரைவு அறிக்கையை அரசிதழில் வெளியிட வேண்டும். தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் ஜூன் 1-ம் தேதிக்கு முன்னதாக ஆணையத்தை டெல்லியில் அமைக்க வேண்டும்’ என்றும் உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் காரணமாக மூன்று மாதங்களை மத்திய அரசு கடத்தியது. கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் உரிமையை பி.ஜே.பி பறிகொடுத்துள்ள நிலையில், இந்த உத்தரவையாவது காலதாமதம் செய்யாமல் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

- டெல்லி பாலா
படம்: என்.ஜி.மணிகண்டன்