மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விவாகரத்துச் சட்டம்... விளக்கங்கள்! - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி - 06

சட்டம் பெண் கையில்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில் ( யாழ் ஶ்ரீதேவி )

சட்டம் பெண் கையில் எழுத்து வடிவம்: யாழ் ஸ்ரீதேவி, ஓவியம் : கோ.ராமமூர்த்தி

ரு மனங்கள் ஒரு பொதுவான உடன்பாட்டின் பேரில் இணைந்து நடத்துவதே இல்லறம். அதில் மேலெழும்பும் அனைத்துக் குறைகளையும் அன்பு சரிகட்டி விடுகிறது. அந்த அன்பு தேய்ந்து வற்றும்போதோ, பிற காரணங்களாலோ வாழ்க்கையில் கசப்பு மட்டுமே எஞ்சி நிற்கும் நிலைப்புள்ளியில், ‘இதோடு முடித்துக்கொள்ளலாம்’ என விவாகரத்து நாடப்படுகிறது.

இந்து திருமணச் சட்டத்தில் ஆணும் பெண்ணும் எந்தக் காரணங்களுக்காக விவாகரத்து கேட்கலாம் என ஒரு பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. இந்து திருமணச் சட்டம் 1955 பிரிவு 13 இது குறித்து விவரிக்கிறது.

விவாகரத்துச் சட்டம்... விளக்கங்கள்! - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி - 06

விவாகரத்துக்கு ஆண்கள் அனுமதிக்கப்படும் காரணங்கள்:

* இரண்டு வருடங்களுக்கு மேல் பிரிந்து வாழ்ந்தால்...

இந்து மதத்தைவிட்டு வேறு மதத்துக்கு மாறியிருந்தால்...

புத்திசுவாதீனம் இல்லாதிருந்தால், மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால்...

குணப்படுத்த முடியாத தொழுநோய் அல்லது  பால் வினை நோய்கள் இருந்தால்...

திருமணத்துக்கு மீறிய உறவு இருந்தால்...

கொடுமைப்படுத்தினால்...

மனைவி ஏழு ஆண்டுகளாகக் காணாமல்போனவராக இருந்தால் (கணவர் ஏழு ஆண்டுகளாகக் காணாமல் போனவராக இருந்தாலும் விவாகரத்து கேட்கலாம்)...

இவற்றோடு, விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வந்த வழக்குகளின் தீர்ப்பில் இன்னும் பலதரப்பட்ட காரணங்களை நீதிமன்றம் முன்வைக்கிறது. ஓர் உதாரணம்...  பூனம் குப்தா - கன்ஷ்யாம் குப்தா தம்பதி வழக்கில், கணவன் மற்றும் அவர் குடும்பத்தினரின் மீது மனைவி கிரிமினல் புகார் கொடுக்கிறார். அதனால் கணவன் 63 நாள்களும், அவரின் தந்தை மற்றும் சகோதரர் இருவரும் 25 நாள்களும் சிறைத்தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். இச்செயல் கொடுமைப்பட்டியலில் இல்லை. ஆனாலும், இந்தத் தம்பதி மீண்டும் சேர்ந்து வாழ்வது கடினம்; இவர்களுக்கு விவாகரத்து வழங்குவதே சரியாக இருக்கும் என நீதிமன்றம் தெரிவித்தது. மற்றொரு வழக்கில்  கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்று பொய்ப்புகார் கொடுத்து, கணவனுக்கு மன உளைச்சலை உண்டாக்கியது நிரூபணமானதால் விவாக ரத்து வழங்கப்பட்டது.

பெண் விவாகரத்து கோர அனுமதிக்கப்படும் காரணங்கள்:

திருமணத்துக்கு முன்போ, பின்போ வேறொரு பெண்ணுடன் கணவனுக்குத் திருமணம் நடந்திருந்தால்...

வேறொரு பெண்ணுடன் வல்லுறவு கொண்டிருந்தால்...

சட்டப்படியான திருமண வயதுக்கு முன்பாகத் திருமணம் நடந்திருந்தால்...

மனரீதியாகத் துன்புறுத்தியிருந்தால்...

அடித்துத் துன்புறுத்துவது மட்டுமல்ல; மனரீதியாக உண்டாக்கும் காயங்களும் கொடுமையாகவே எடுத்துக்கொள்ளப்படும். தம்பதியில் ஒருவர் அந்நியருடன் உறவில் இருக்கிறார் என்று பொய்க்குற்றம் சாட்டுவதும் மனரீதியான கொடுமையே. மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பாத கணவன், தன் தாய் தந்தை உறவுகளுடன் மனைவி சேர்ந்து வசிக்க வேண்டும் என்று  கட்டாயப்படுத்துவதும் மனக்கொடுமைதான் என்று யுதிஷ்டர் சிங், சரிதா தம்பதி வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்து திருமணச் சட்டத்தில், மேற்குறிப்பிட்ட காரணங்களுடன், அந்தந்த வழக்கின் தன்மையைக்கொண்டும் அதில் முன்வைக்கப்படும் காரணங்களைக் கருத்தில்கொண்டும் நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது. அதே சூழலில் வரும் வேறொரு வழக்குக்கு, முந்தைய தீர்ப்பின் காரணங்களை மேற்கோள்காட்டி விவாகரத்து கோரப்படுகிறது.

விவாகரத்துச் சட்டம்... விளக்கங்கள்! - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி - 06

பரஸ்பர விவாகரத்து

இந்து தம்பதியில் ஒருவர் சட்டபூர்வமாக பிரிய விரும்பினால், அவர்களுக்குத் திருமணமாகி ஓர் ஆண்டுக்குப் பின்னரே விவாகரத்து கேட்டு வழக்கு தொடர முடியும். வழக்கு முடிவுக்கு வருவதற்கான கால அவகாசமும் அதிகமாகவே இருக்கும். தம்பதி இருவரும் பரஸ்பரமாக முடிவெடுத்து, குடும்பநல நீதிமன்றத்தில் மனு செய்தால் இந்து திருமணச் சட்டம் 1955 பிரிவு 13(b) படி ஆறு மாத அவகாசத்துக்குப் பிறகு அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்படும்.

விவாகரத்துச் சட்டம்... விளக்கங்கள்! - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி - 06

காத்திருப்புக் காலம்

சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் நடந்த அமர்தீப் சிங் - ஹர்வீன் கௌர் தம்பதி விவாகரத்து மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் யு.யு.லலித் ஆகியோர் கொண்ட அமர்வு, ஆச்சர்யப்படும் வகையில் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. எட்டு வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்த தம்பதி, பரஸ்பர விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். அதில் அவர்கள் முன்வைத்த கோரிக்கை இதுதான்: ‘நாங்கள் ஏற்கெனவே எட்டு வருடங்களாகப் பிரிந்துதான் வாழ்கிறோம். அதனால் நீதிமன்றம் அவகாசமாகக் கொடுக்கும் காத்திருப்புக் காலமான ஆறுமாத காலத்தைக் குறைக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டனர்.

தம்பதி இருவரும் பரஸ்பரமாகப் பிரிந்து விடச் சம்மதித்தாலும் பிரிவு 13 பி (2)-ன் படி ஆறுமாத காலம் காத்திருக்க வேண்டியது கட்டாயம் எனச் சட்டம் சொல்கிறது. அந்த ஆறுமாத கால அவகாசம் அவர்களுக்குள் விழுந்த விரிசலைச் சீர்படுத்தக்கூடியதாக இருந்தால், அவர்கள் சேர்ந்து வாழ ஒரு வாய்ப்பாக அமையும் என்பதே இதன் நோக்கம். ஆனால், ஆண்டாண்டு காலமாகப் பிரிந்து வாழும் தம்பதிக்கு ஆறுமாத கால அவகாசம் அர்த்தமற்றதாகவே இருக்கும். எனவே, அமர்தீப் - ஹர்வீன் தம்பதி ஆறுமாத காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டது.

பரஸ்பரமாகப் பிரிய முடிவெடுக்கும் தம்பதிகள், தங்களுக்கு ஆறு மாதகால அவகாசம் தேவையில்லை என்று கருதினால் விவாகரத்து வழக்கு நடக்கும் நீதிமன்றத்திலேயே, விவாகரத்து மனு செய்த ஒரு வாரத்துக்குப் பிறகு காத்திருப்பு கால அவகாசத்தைக் குறைக்கத் தனியாக மனு கொடுக்கலாம். வழக்கின் தன்மையைப் பொறுத்து முடிவெடுக்கும் அதிகாரம் நீதிபதிக்கு உண்டு. அமர்தீப் - ஹர்வீன் தம்பதி வழக்கின் தீர்ப்புக்குப் பின், பரஸ்பர விவாகரத்துக்கு மனு செய்பவர்கள் ஆறுமாத காலம் காத்திருக்கத் தேவையில்லை என்ற மாற்றம் நிகழ்ந்துள்ளது.

அடுத்த இதழில், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மத விவாகரத்துச் சட்டங்கள் பற்றிப் பார்ப்போம்.

ஒரு வழக்கு... ஒரு தீர்ப்பு...

பெற்றோரை விட்டுப் பிரிந்து தனிக்குடித்தனம் வர வேண்டும் என மனைவி வற்புறுத்தினார் என்பதற்காகக் கணவர் விவாகரத்து பெற்ற வழக்கு இது.

மனைவி தன்னைக் கொடுமைப்படுத்துவதால் விவாகரத்து கேட்டு இந்து திருமணச் சட்டம் 1955 பிரிவு 13(1)(ia) பிரிவின் கீழ் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்தார் கணவர். குடும்பநல நீதிமன்றம் கணவனுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது. மனைவி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மனைவி கொடுமை செய்தது நிரூபணமாகவில்லை. அதனால், குடும்பநல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து செல்லாது என்று உயர் நீதிமன்றம் மனைவிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை மறு விசாரணை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்தார்.  திருமணத்துக்குப் பின் ஒரு மாதம்கூட கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்ததில்லை. இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. மனைவிக்குச் சந்தேக குணம். வீட்டு வேலைக்கு வரும் பெண்ணுடன் தன் கணவருக்குத் தொடர்பு இருப்பதால், கணவருடன் சண்டை போட்டதாகக் குறிப்பிட்டார். ஆனால், வீட்டு வேலைக்கு அப்படி யாரும் வரவில்லை என்பது விசாரித்தபோது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கணவருடன் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என வற்புறுத்தியவர், இல்லையெனில் தற்கொலை செய்துகொள்வதாகக் கணவரை மிரட்டி வந்துள்ளார். ஒருநாள் குளியலறைக்குள் சென்று மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கணவனின் அண்ணன் மற்றும் பக்கத்து வீட்டினரின் உதவியுடன் கதவை உடைத்து மனைவியை மீட்டுள்ளார் கணவர். இந்தச் சம்பவத்தை உறுதிபடுத்தப் பக்கத்து வீட்டுக்காரர் நீதிமன்றம் வந்து சாட்சியம் அளித்துள்ளார்.

இல்லாத ஒருவருடன் கள்ள உறவு இருப்பதாகச் சொல்வது கொடுமையானது. அதை மெய்ப்பிப்பதும் கடினமே. கணவனின் வருமானத்தில் அவரது குடும்பம் வாழ்ந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு கணவனின் பெற்றோரைக் கைவிடுவது நியாயமற்றது. அழுத்தமான காரணங்கள் எதுவுமில்லாமல் கணவனின் வயதான பெற்றோரைத் தனித்துவிட்டு வரச்சொல்லி மனைவி தனிக்குடித்தனத்துக்கு அழைத்தால், அது மனைவி, கணவனுக்குச் செய்யும் கொடுமையாகவே கருதப்பட்டு, அதன் அடிப்படையில் விவாகரத்து வழங்கப்பட்டது. மனைவியின் பொய்க்குற்றச்சாட்டு, கணவருக்கு மன உளைச்சல் தந்தது என இந்த விவாகரத்து தீர்ப்பு வழங்குவதற்கான பிற காரணங்கள் இருந்தும், மனைவி தனிக்குடித்தனம் அழைத்ததன் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது பலருக்கும் ஏற்புடையதாக இல்லை. எனவேதான் இந்தத் தீர்ப்புப் பெரிய அளவில் விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டது.