Published:Updated:

சிலை வழக்கு - சி.பி.ஐ சிக்கல் - ஆர்ப்பரிக்கும் ஐ.ஜி... ஆடிப்போன ஆட்சி!

சிலை வழக்கு - சி.பி.ஐ சிக்கல் - ஆர்ப்பரிக்கும் ஐ.ஜி... ஆடிப்போன ஆட்சி!
பிரீமியம் ஸ்டோரி
சிலை வழக்கு - சி.பி.ஐ சிக்கல் - ஆர்ப்பரிக்கும் ஐ.ஜி... ஆடிப்போன ஆட்சி!

சிலை வழக்கு - சி.பி.ஐ சிக்கல் - ஆர்ப்பரிக்கும் ஐ.ஜி... ஆடிப்போன ஆட்சி!

சிலை வழக்கு - சி.பி.ஐ சிக்கல் - ஆர்ப்பரிக்கும் ஐ.ஜி... ஆடிப்போன ஆட்சி!

சிலை வழக்கு - சி.பி.ஐ சிக்கல் - ஆர்ப்பரிக்கும் ஐ.ஜி... ஆடிப்போன ஆட்சி!

Published:Updated:
சிலை வழக்கு - சி.பி.ஐ சிக்கல் - ஆர்ப்பரிக்கும் ஐ.ஜி... ஆடிப்போன ஆட்சி!
பிரீமியம் ஸ்டோரி
சிலை வழக்கு - சி.பி.ஐ சிக்கல் - ஆர்ப்பரிக்கும் ஐ.ஜி... ஆடிப்போன ஆட்சி!

ந்த விஷயத்திலும், ‘சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடலாம்’ என கோர்ட் சொன்னால், அதைத் தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும். ஆனால், ‘சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்போகிறோம்’ என்று தமிழக அரசே கோர்ட்டில் தெரிவித்த விநோதம் நிகழ்ந்திருக்கிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி இப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் சொல்லிவிட்டு, மறுநாளே இதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை, தமிழகம் முழுக்க பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியாகக் கிசுகிசுக்கப்படும் தகவல், இந்த அதிர்ச்சியைக் கூட்டுகிறது. ‘ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், சிலைக்கடத்தல் தொடர்பான விசாரணையை மிகக்கறாராக நடத்திக்கொண்டிருக்கிறார். ஆர்ப்பரிக்கும் இவரின் விசாரணை, கடைசியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியையே ஆட்டம்காணச் செய்யும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது என்று உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில்தான், சி.பி.ஐ விசாரணை என்கிற பெயரில் விசாரணையையே மொத்தமாகக் குழிதோண்டிப் புதைக்கத் தீர்மானித்துவிட்டனர்’ என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

சிலை வழக்கு - சி.பி.ஐ சிக்கல் - ஆர்ப்பரிக்கும் ஐ.ஜி... ஆடிப்போன ஆட்சி!

தமிழகக் கோயில்களில் நடந்த சிலைக்கடத்தல்கள் மற்றும் புதிய சிலைகள் உருவாக்கப்பட்டதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் வேகமெடுத்து வருகின்றன. அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் தனபால், தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா, கூடுதல் கமிஷனர் கவிதா... என்று அடுத்தடுத்து பலர் கைதாகிவருகிறார்கள். இந்த லிஸ்ட்டில், மேலும் சில முக்கிய அதிகாரிகளின் பெயர்களும் உள்ளன. ‘சிலைகள் திருடுபோனதற்கு உடந்தை; கோயில் திருப்பணிகளில் ஊழல்; சிலைசெய்யும் பணிகளுக்காக நன்கொடை என்கிற பெயரில் தங்கம் வாங்கியதில் முறைகேடு...’ என்று விதம்விதமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் ஒவ்வொருவரும் கைதாகிவருகின்றனர்.
அடுத்தகட்டமாக முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என்று 67 பேரின் லிஸ்ட் தயாராக இருக்கிறது. இவர்கள் அனைவரையும் அடுத்தடுத்து கைது செய்யவும் பொன்.மாணிக்கவேல் ரெடி. வரும் நவம்பர் மாதத்தில்தான் ஓய்வுபெறுவதற்கு முன்பாகவே இந்த லிஸ்டில் உள்ள அத்தனை பேரையும் கைது செய்து, சிலைக்கடத்தல் மற்றும் முறைகேடுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார் பொன்.மாணிக்கவேல். அதை மோப்பம்பிடித்த உளவுத்துறை, ‘சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவரான பொன்.மாணிக்கவேல், அந்தக் குடும்பத்துக்கும் நெருக்கம். சிலைக்கடத்தல் வழக்கைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்சியையே கவிழ்க்க அவர் ரகசியத் திட்டம் தீட்டுகிறார்’ என்று தகவல் தர, அனைவரும் மிரண்டுவிட்டனர். இதையடுத்து, சீனியர் அமைச்சர்கள் சிலர் ஆட்சி மேலிடத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கவே, சி.பி.ஐ வசம் வழக்கை ஒப்படைக்கும் கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

முதலில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் சிலை வழக்கைத்தான் கையில் எடுத்தார் பொன்.மாணிக்கவேல். 2015-ல் இந்த சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை பழுதடைந்ததால், புதிய சிலை செய்ய உத்தரவு பெறப்பட்டது. 50 கிலோ எடையில், ரூ.2.12 கோடி செலவில் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு டிசம்பரில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ‘இதில், 5 சதவிகிதத் தங்கம்கூட கலக்கப்படவில்லை. மொத்தத்தையும் சுருட்டிவிட்டனர்’ என்று அண்ணாமலை என்பவர், காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றப் படியேறியதுதான் இதற்கு அடிப்படை. தமிழக அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், சிலர் முன்ஜாமீன் பெற்றனர்.

இதையடுத்து, பழனியில் முருகனுக்கு ஐம்பொன் சிலை செய்யப்பட்டதிலும் தங்க மோசடி நடந்திருக்கும் விஷயத்தைக் கையில் எடுத்த பொன்.மாணிக்கவேல், ஓய்வுபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், ஸ்தபதி முத்தையா, கோயில் முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா, முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி, தங்க நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் உள்ளிட்டோரைக் கைது செய்தார். இதில் முத்தையா, முன்னாள் கமிஷனர் தனபால் உள்ளிட்ட சிலர் ஜாமீனில் வெளியே இருக்கிறார்கள். ஆனால், கிட்டத்தட்ட போலீஸ் காவலுடன் ஹவுஸ் அரஸ்ட் என்கிற நிலையில்தான் உள்ளனர்.

அடுத்தகட்டமாக திருத்தணி கோயிலிலும் தங்க மோசடி என்று பகீர் கிளம்பவே, அதையும் துருவ ஆரம்பித்தார் பொன்.மாணிக்கவேல். உடனே, பழனி சிலை முறைகேடு தொடர்பான விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார் தமிழக டி.ஜி.பி-யான ராஜேந்திரன். ‘சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் சரியான கோணத்தில் விசாரித்து வருகிறார்கள். ஆனால், யார் யாரையோ தப்பிக்க வைப்பதற்காக சில சக்திகள் வெளிப்படையாகவே வேலை செய்கின்றன’ என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக டி.ஜி.பி-க்கும் பொன்.மாணிக்கவேலுக்கும் இடையே கடித வாயிலாகக்கூட மோதல் நடந்ததாகக் கேள்வி. நீதிமன்றத் தலையீட்டின் பேரில், பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து பழனி கோயில் வழக்கையும் விசாரித்துவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிலை வழக்கு - சி.பி.ஐ சிக்கல் - ஆர்ப்பரிக்கும் ஐ.ஜி... ஆடிப்போன ஆட்சி!

இந்நிலையில், அறநிலையத் துறை திருப்பணிகள் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா, ஜூலை 31-ம் தேதியன்று கைது செய்யப்பட்ட நிலையில், அதிரடியாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவிடமிருந்து ஒட்டுமொத்த வழக்குகளையும் சி.பி.ஐ வசம் மாற்றி அரசாணையை வெளியிட்டு விட்டது தமிழக அரசு.

இதுதொடர்பாக பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், “சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் ஒரு வழக்கு பதிவாகிறது. அதை விசாரிக்கும் பொறுப்பு ஓர் அதிகாரியிடம் ஒப்படைக்கப் படுகிறது. அப்படியிருக்க, குற்றம் சாட்டப்பட்டவர்களை, வழக்குக்கு சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் வந்து, ஐ.ஜி முன்னிலையில் விசாரிக்கிறார்கள். இதையெல்லாம் ஒரு விசாரணை அதிகாரி எப்படி அனுமதிக்க முடியும்? ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிட்டால் யார் பதில் சொல்வது? இப்படி விசாரிக்க அனுமதிக்க மறுத்த காரணத்தால், ஒரு டி.எஸ்.பி மிரட்டப்பட்டுள்ளார். பின்னர் அவர், கோவை மின்திருட்டுப் பிரிவுக்கு உயர் அதிகாரிகளால் மாற்றப்பட்டார். இது ஓர் உதாரணம்தான். இப்படி பல அதிகாரிகளை வளைந்துகொடுக்கச்சொல்லி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் பொன்.மாணிக்கவேல். இப்படிப் பல பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், நீதிமன்ற உத்தரவின்பேரில் பொன்.மாணிக்கவேல் செயல்படுவதால், உயர் அதிகாரிகளே மிரண்டு கிடக்கிறார்கள்” என்றார்.

இதுதொடர்பாகப் பேசிய மற்றொரு போலீஸ் அதிகாரி, “ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, உளவுத்துறை உயர் அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் சில நாள்கள் இருந்தார். ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் மோதல் வந்து போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியேற்றப்பட்ட சமயத்தில், இருவருக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டவர்களில் பொன்.மாணிக்கவேலும் ஒருவர் என்ற பேச்சு உண்டு. ஜெயலலிதா இறந்தபிறகு சமூகரீதியாக இணைந்து செயல்பட்ட பலருடன், பொன்.மாணிக்கவேலுக்கு நட்பு உண்டு. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, எடப்பாடி அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் எண்ணத்தில், திரைமறைவில் அவர் காய் நகர்த்துவதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஒருவர், தற்போதைய அமைச்சர், சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்று பலரையும் ‘விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை’ என்று சொல்லி, கைதுசெய்ய அவர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. ஒட்டுமொத்தமாக 60, 70 பேரைக் கைது செய்தால், அரசுமீதான நம்பிக்கை சுத்தமாகக் குலைந்துவிடும். நாடு முழுக்கப் பரபரப்பாகிவிடும். இது, ஆட்சிக்கே சிக்கலை ஏற்படுத்தவும் கூடும். இதையெல்லாம் கணக்குப்போட்டுத்தான், அவர் காய் நகர்த்துகிறார்.

ஈரோடு மாவட்டத்தில், ரூ.1,600 மதிப்புள்ள ஒரு சிலையை பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலை என்று ஜோடனை செய்து ஏமாற்றுக்கும்பல் ஒன்று விலை பேசியது. அவர்களை வளைத்த சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார், அந்தச் சிலையின் மதிப்பை கோடி ரூபாய் என்று மிகைப்படுத்திச் சொல்லியிருக்கிறார்கள். இதுமாதிரி பல விவரங்களை நாங்கள் சேகரித்துள்ளோம். இனி பொன்.மணிக்கவேலின் பாச்சா பலிக்காது. பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.

ஆரம்பத்திலிருந்தே துறை அதிகாரிகளுக்கு எந்தவிதத் தகவல்களையும் தராமல், நீதிமன்றத்துக்கு மட்டுமே தந்துகொண்டிருந்தார். உயர் அதிகாரிகள் கேட்டபோதும் தரமறுத்துவிட்டார். இந்தக் கடுப்பில்தான், அவருக்கு அரசுத் தரப்பிலிருந்து முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. வழக்கு விசாரணையை அவரிடமிருந்தும் பறிக்கும் வேலையும் நடந்தது. ஆனால், தொடர்ந்து நீதிமன்ற நிழலில் இருந்துகொண்டு, ஓயாமல் குடைச்சல் கொடுக்கவே, பொன்.மாணிக்கவேல் என்னென்ன தவறுகள் செய்கிறார் என்பதைக் கண்டறிய உயர் அதிகாரிகள் சிலர் களத்தில் இறங்கினர்.

மதுரையைச் சேர்ந்த ஆன்மிகப் பிரமுகர் இதுபற்றிக் கூறும்போது, “தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளின் மீடியேட்டர் என்று அழைக்கப்படும் ஒரு பிரமுகர், இந்த விஷயத்தில் உளவு வேலை பார்த்திருக்கிறார். அதாவது, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளைச் சந்தித்து, அவர்களின் ரகசியத் திட்டங்கள் மற்றம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் முன்பு பணிபுரிந்துவிட்டு மாறுதலாகிச்சென்றிருக்கும் போலீஸ் அதிகாரிகளையும் தனியாகச் சந்தித்திருக்கிறார். விசாரணை என்கிற பெயரில் கெடுபிடிகள் காட்டுவது, சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொள்வது என்று பொன்.மாணிக்கவேல் செய்த விதிமீறல்களைக் கண்டறிவதுதான் நோக்கம். பொன்.மாணிக்கவேல் மீது அதிருப்தியிலிருந்த அதிகாரிகள் சிலர் கொடுத்த தகவல்களையெல்லாம் மேலிடத்துக்குக் கொண்டுபோயிருக்கிறார் அந்த புரோக்கர். இதையெல்லாம் வைத்து தான், சிபி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடும் முடிவு எடுக்கப்பட்டிருக் கிறது” என்று சொன்னார்.

பொன்.மாணிக்கவேலுக்கு எதிராகத் திரட்டப்பட்டிருக்கும் ஆதாரங்கள் அத்தனை வலிமையானதாக இல்லையென்றாலும், அதிரடியாக இப்படியொரு முடிவை அரசு எடுப்பதற்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. அதனால்தான், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆகஸ்ட் 1 அன்று சிலைக் கடத்தல் வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, ‘‘இந்த வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாரின் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. விசாரணையில் வெளிப்படைத் தன்மையும் இல்லை. அரசுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதில்லை’’ என்று தெரிவித்தார், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன். உண்மையில், கடந்த ஓராண்டில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை, ராஜராஜன் மற்றும் உலகமாதேவி சிலைகள். இருபதுக்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளார்கள்.

சிலை வழக்கு - சி.பி.ஐ சிக்கல் - ஆர்ப்பரிக்கும் ஐ.ஜி... ஆடிப்போன ஆட்சி!

இந்த விவகாரம் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேச மறுத்துவிட்டார். சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகளிடம் பேசியபோது, ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பொன்.மாணிக்கவேல் பற்றி நன்றாகத் தெரியும். ஆனால், இந்த ஊழலில் கைதாகப்போகும் அதிகாரிகள், சென்னையைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையின் உரிமையாளர்களில் ஒருவர், இந்த வழக்கில் சிக்கியிருக்கும் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களின் உதவியுடன் முதல்வருக்குத் தவறான தகவல்களைத் தந்துள்ளனர். சசிகலாவுக்கு ஆதரவாக, ஆட்சி கவிழும் அளவுக்கான நிலையை பொன்.மாணிக்கவேல் உருவாக்கிக்கொண்டிருக்கிறார் என்கிற தோற்றத் தையும் ஏற்படுத்திவிட்டனர். இதைப்பற்றியெல்லாம் முதல்வரே நேரடியாக பொன்.மாணிக்கவேலிடம் விசாரித்திருந்தால், உண்மை தெரிந்திருக்கும். ஆனால், அதைச் செய்யாமல் அவசரப்பட்டு விட்டனர்’’ என்கிறார்கள்.

இந்த வழக்கில் ஆரம்பம்தொட்டே கறார் காட்டிவரும் நீதிபதி மகாதேவன், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி-யான பொன்.மாணிக்கவேலின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். தமிழக அரசு இப்படிச் செய்வதை அவர் ஏற்றுக்கொள்வாரா, அல்லது ஏற்கெனவே இடியாப்பச் சிக்கலில் இருக்கும் இந்த வழக்கு சி.பி.ஐ கைக்குப் போவதை நிராகரிப்பாரா? விரைவில் விடை தெரியும்.

- கனிஷ்கா, இ.லோகேஸ்வரி
அட்டை ஓவியம்: ஹாசிப்கான்
படங்கள்: கே.ஜெரோம்

ஆதாரம் இல்லை!

கா
ஞ்சிபுரம் சிலை மோசடி வழக்கு ஆரம்பகட்டத்தில் பரபரக்கப்பட்டபோதே, கவிதாவிடம் இதுகுறித்துக் கேட்டிருந்தோம். ‘‘இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. இந்த வழக்கைத் தொடுத்திருக்கும் அண்ணாமலை, அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் மாத வாடகைக்குக் கடை வைத்து நடத்திவந்தார். முறையாக வாடகைப் பணம் தராததால், கடையைக் காலி செய்ய உத்தரவிட்டது அறநிலையத் துறை. அதற்குப் பழிவாங்கவே ஆதாரமே இல்லாமல் இதுபோன்ற வழக்கைத் தொடர்ந்திருக்கிறார்’’ என்று சொன்னார்.

எப்போது ரெய்டு?

தி
ருடப்பட்ட சிலைகளின் பின்னணி தொடர்பான தகவல்களைக் கேட்டு, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை கமிஷனர் ஆபீஸுக்கு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் பலமுறை அலைந்துள்ளனர். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆனால், முன்னாள் ஆணையர் தனபாலுக்காக முக்கிய ஆவணங்களின் நகல்களை எல்லாம் விடுமுறை தினத்தன்றுகூட ஒருசில அதிகாரிகள் எடுத்துச் சென்றனராம். பொன்.மாணிக்கவேலுக்கு இது தெரிந்ததும் கடுப்பாகிவிட்டார். இதையெல்லாம் நீதிமன்றத்தில் விரிவாக எடுத்துச்சொல்லி, அறநிலையத்துறை கமிஷனர் ஆபீஸில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றும் நோக்கில் ரெய்டு நடத்த அனுமதிபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

கவிதா கைதுசெய்யப்பட்ட அன்றே இந்த ரெய்டும் அரங்கேறுமே என்கிற பதற்றமும், மேற்கொண்டு அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்கிற பயமும் கமிஷனர் ஆபீஸில் பரவியது. அறநிலையத் துறை அதிகாரிகள் சுமார் நாற்பது பேர் வரை 59 நாள் வரை விடுப்பு எடுக்க விண்ணப்பங்களுடன் ஆணையர் ஜெயாவைச் சந்தித்தனர். வாங்க மறுத்துத் திருப்பி அனுப்பிவிட்டார் ஜெயா. அதேசமயம், ‘‘இனி எந்தப் பிரச்னையும் இருக்காது. முதல்வர் அலுவலகம் வரை பேசியாகிவிட்டது. யாரும் பயப்படவேண்டாம்’’ என்று கமிஷனர் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

பிறகு நடைபெற்ற அறநிலையத்துறை அலுவலர்கள் கூட்டமைப்புச் சங்கத்தின் கலந்தாலோசனைக் கூட்டத்தில், இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் கலந்துகொண்டார்கள். ‘தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் சி.பி.ஐ விசாரணைக்கு நன்றி. அதிகாரிகள்மீது பொய் வழக்கு போடுவது இனி தவிர்க்கப்படும். சி.பி.ஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கப்படும்’ என்றெல்லாம் கூட்டத்தில் பேசியுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism