பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

நின்று வென்ற நீதி!

நின்று வென்ற நீதி!
பிரீமியம் ஸ்டோரி
News
நின்று வென்ற நீதி!

நின்று வென்ற நீதி!

‘`நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே நான். அப்படியே என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்!” - ஜெர்மன் தத்துவவியலாளர் ஜோஹன் வோல்ஃப்கேங்கின் இந்தக் கூற்றே பிரதிபலிக்கிறது அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில்.

நின்று வென்ற நீதி!

1861-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377-ன் கீழ், தன்பாலின ஈர்ப்போ, தன் பாலுறவோ சட்டப்படி குற்றம். இந்தச் சட்டப்பிரிவு செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம், தன்பாலின ஈர்ப்பைச் சட்டப்படி அங்கீகரிக்கும் நாடுகளுடன் இந்தியா 25-வது நாடாக இணைந்துள்ளது.

“இந்தத் தீர்ப்பு பொதுச்சமூகத்தில் நடைமுறைக்கு வர, மக்கள் தன்பாலினத்தவர்களைப் புரிந்துகொள்வது மிக முக்கியம்’’ என்று சொல்கிறார், மனநல ஆலோசகர் டாக்டர். ஆர்.மங்களா, உதவி இயக்குநர், ஸ்சிஸோஃப்ரினியா ரிசர்ச் ஃபவுண்டேஷன் (Schizophrenia Research Foundation), சென்னை.

நின்று வென்ற நீதி!

சட்டப்பிரிவு 377-ஐ எதிர்த்து மனுத்தாக்கல் செய்தவர்களில் முக்கியமானவர், மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர், தன்பாலினத்தவர் அசோக் ரொவ் கவி.  “இது வரவேற்கத்தக்க  தீர்ப்பு. ஆனால், முதல் படி மட்டுமே ஏறி வந்திருக்கிறோம். உண்மையான சவால்கள் இனிதான் ஆரம்பமாகும். ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமண முறைகள், அவர்களுக்கான குழந்தை தத்தெடுப்பு வழிமுறைகள், வேலைவாய்ப்பு உரிமைகள் என வழிமுறைப்படுத்தவேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன” என்கிறார்.

கர்நாடகாவில் தன் திருமணத்தைப் பதிவு செய்த முதல் திருநங்கையும், சட்டப்பிரிவு 377-க்கு எதிராக மனுத்தாக்கல் செய்தவர்களுள் ஒருவருமான அக்காய் பத்மஷாலி “இந்தத் தீர்ப்பில், உச்சநீதிமன்றம் எழுதிய வார்த்தைகள் முக்கியமானவை, மாண்புமிக்கவை. ‘கிட்டத்தட்ட 150  ஆண்டுகள் நடப்பிலிருந்த இந்தச் சட்டப்பிரிவு, தன்பாலின  சமூகத்துக்குப் பெரும் கொடூரத்தையும் அழிவையும் தந்ததற்கு மன்னிப்பு கேட்கிறோம்’ என்று வாசிக்கப்பட்டது தீர்ப்பு.  புரிந்துணர்வுமிக்க அந்த வார்த்தைகள், மக்கள் மனங்களைச் சென்றடைய வேண்டும்’’ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

நின்று வென்ற நீதி!

தமிழ்நாடு திருநங்கைகள் நலவாழ்வு அமைப்பைச் சேர்ந்த சுதா, “ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த இந்தச் சட்டத்துக்கு பலியாகி,  இதுவரை குற்றவாளிகளாகப் பார்க்கப்பட்டு வந்த தன்பாலினத்தவர்களின் ரணத்தை வார்த்தைகளால் புரியவைக்க முடியாது. அதை இந்தத் தீர்ப்பு உணர்ந்்திருக்கிறது’’ என்கிறார் நூற்றாண்டுகளின் கண்ணீரைத் துடைத்தபடி.

உடல் அரசியல் பற்றியும், ஓரினச் சேர்க்கை பற்றியும் பேசிய ‘லேடீஸ் அண்டு ஜென்டில்விமன்’  என்ற ஆவணப்படத்தின் இயக்குநர் மாலினி ஜீவரத்தினம்,  “ ‘நீங்க என்ன சும்மா இப்படி ஒரு படம் பண்ணிக்கிட்டு, எங்க போனாலும் குரல் கொடுத்துக்கிட்டுத் திரியுறீங்க? நீங்க வாழுறது இந்தியா, அமெரிக்கா இல்லை’ என்று சொன்னவர்களுக்கான பதில்தான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம்’’ என்கிறார் உற்சாகத்துடன்.

நின்று வென்ற நீதி!

இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான ஐ.ஐ.டி மாணவச் சமூகத்துக்குத் தலைமை தாங்கி, ஆணித்தரமான  கேள்விகளை முன்வைத்தவர், டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் மேனகா குருசாமி.  தீர்ப்பு வந்த நாளன்று மற்ற மனுதாரர்களுடன் அவர் நின்றிருந்த அந்த மகிழ்ச்சித் தருணப் புகைப்படம், சமூகவலைதளங்களில் வைரலானது.  “இது 500 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பு. அடுத்த கட்டத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன், தற்போது இந்தத் தீர்ப்பில் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு முக்கியக் குறிப்பையும் அலசி, அதன் அடிப்படையில் இனி கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் குறித்துச் சிந்திப்பதும் செயல்படுவதுமே எங்களின் அடுத்தகட்ட நகர்வுகள்’’ என்கிறார் மேனகா குருசாமி.

‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்பார்கள். ஆனால் தன்பாலினத்தவரைப் பொறுத்தவரைக்கும் இது தாமதமாக வந்த நீதி என்றாலும் அவர்கள் உரிமைகளை உறுதிசெய்த நீதி.

எம்.ஆர்.ஷோபனா

“நேர்மையான விழிப்பு உணர்வை மக்களுக்கு அளிக்க வேண்டும்!”

நமீதா, உறுப்பினர், தமிழ்நாடு வானவில் கூட்டமைப்பு, சென்னை:

“இனி மதத்தலைவர்களும் அரசியல் தலைவர்களும் எங்களைக் குற்றவாளிகளாகச் சித்திரித்து ஒதுக்க முடியாது. நாங்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு இந்தச் சட்டம் நிச்சயம் உதவும். குறிப்பாக, திருநங்கை/திருநம்பி குழந்தைகள் பள்ளியில் சக மாணவர்களுடன் படிக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தச் செய்யவேண்டும்.’’

ஷரண் கார்த்திக் ராஜ், (Moderator), தமிழ்நாடு எல்.ஜி.பி.டி.ஐ.க்யூ இயக்கம் (Tamilnadu LGBTIQ movement) சென்னை

“ரோமாபுரி தலைநகரம் ஒரே நாளில் கட்டிமுடிக்கப்படவில்லை என்று கூறுவதுபோல, இந்த மாற்றம் ஒரு நாளில் நடந்ததல்ல. இப்போது கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறோம். இனி எங்களைப் பற்றிய நேர்மறையான விழிப்பு உணர்வைப் பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும்.’’

வழக்கின் வரலாறு!

*377 சட்டப்பிரிவுக்கு எதிராக, முதன்முதலாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் 1994-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

*2001-ம் ஆண்டு, டெல்லியைச் சேர்ந்த, மூன்றாம் பாலினத்தவர்களின் நலனுக்காக இயங்கி வரும் ‘நாஸ்’ என்ற தொண்டு அமைப்பு, 377 சட்டப்பிரிவை எதிர்த்து வழக்கு தொடர, அதையும் தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்.

*டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, ‘நாஸ்’ அமைப்பு, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்குமாறு கோரியது. 

*டெல்லி உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

*வழக்கைப் பரிசீலித்த  டெல்லி உயர் நீதிமன்றம் 2009-ம் ஆண்டு, ‘தன்பாலின உறவு சட்டப்படி குற்றமாகாது’ எனத்  தீர்ப்பளித்தது.

*தீர்ப்பை எதிர்த்து, டெல்லியைச் சேர்ந்த ஜோதிடர் சுரேஷ் குமார் கெளஷல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார்.

*2013-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றம்  டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒத்திவைத்தது.  இதனைத் தொடர்ந்து,  ‘நாஸ்’ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனு  தாக்கல் செய்தது.

*2014-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் 377 சட்டப்பிரிவை எதிர்த்துக் கூட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

*வழக்கை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் குழுவை உச்ச நீதிமன்றம் அமைக்க, இதற்கிடையே, பிரபலங்களும் ஐ.ஐ.டி மாணவர்களும், இந்தச்  சட்டத்துக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தனர்.

*2018 செப்டம்பர் 6-ம் தேதி, ‘தன்பாலின ஈர்ப்பு குற்றமில்லை’ என்று தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இந்த வழக்கில் பல கட்டங்களையும், சோதனைகளையும் தாண்டி வந்துள்ளது ‘நாஸ்’ அமைப்பு. அதன் நிறுவனர் அஞ்சலி கோபாலனிடம் பேசினேன். ‘’இனி எல்ஜிபிடி (LGBT - Lesbian, Gay, Bisexual, and Transgender) சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான பணிகளில்  ஈடுபடவிருக்கிறோம். சக மனிதர்களைப்போல அவர்களுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கச் செய்வதே அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதாகும்” என்கிறார்.