Published:Updated:

காவிரிமுதல் சபரிமலைவரை... 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்! #2018Rewind

காவிரிமுதல் சபரிமலைவரை... 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்!  #2018Rewind
காவிரிமுதல் சபரிமலைவரை... 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்! #2018Rewind

2018-ம் ஆண்டு பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத ஆண்டாக இருந்திருக்கிறது. குறிப்பாக, நீதித்துறைக்கு முக்கியமானதொரு ஆண்டாகும். இந்தாண்டில் பல முக்கியத் தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கியது. மாற்றுப் பாலினத்தவர்களை அங்கீகரித்ததுமுதல், சபரிமலைக்குப் பெண்கள் செல்லலாம்வரை அதில் அடக்கம். இந்த நிலையில், இன்னும் இரண்டு தினங்களில் 2018-ம் ஆண்டு நிறைவுற இருக்கிறது. இதையடுத்து, இந்த ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய சில முக்கியமான தீர்ப்புகளை இங்கே பார்ப்போம்... 

காவிரி இறுதித் தீர்ப்பு: 

தமிழ்நாடு - கர்நாடகா இடையில் நடைபெற்ற காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம்  இறுதித் தீர்ப்பு வழங்கியது. "காவிரி நதி நீரை யாரும் உரிமை கொண்டாட முடியாது; எந்த மாநிலத்துக்கும் அது உரிமையில்லை; காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்கவேண்டும்; கர்நாடகா  14.75 டி.எம்.சி அளவு தண்ணீரைக் கூடுதலாக எடுத்துக்கொள்ளலாம்; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்" எனத் தீர்ப்பு வழங்கியதுடன்,  "இதுவே இறுதித்தீர்ப்பு... இந்தத் தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்குச் செல்லும். மேல்முறையீடு செய்ய முடியாது" எனவும் உச்ச நீதிமன்றம் உறுதியாகத் தெரிவித்தது. "தமிழகத்தின் நிலத்தடிநீரைக் கருத்தில்கொண்டு, தமிழகத்துக்கான நீரின் அளவைக் குறைத்தாகக் கூறிய நீதிமன்றம், கர்நாடகத்தின் நிலத்தடிநீரைக் கருத்தில்கொள்ளாமல் வஞ்சித்துவிட்டது" எனத் தமிழக விவசாயிகள் கருத்து தெரிவித்தனர். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பெரும்போராட்டம் நடந்தது தனிக்கதை. 

தன் பாலின உறவு: 

தன் பாலின உறவை அங்கீகரிப்பதா... இல்லை, அது குற்றமா என்ற விவாதம் நெடுங்காலமாக நடைபெற்றுவந்தது. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377, தன் பாலின உறவைக் குற்றமெனக் கூறி தண்டனை வழங்குகிறது. இந்த ஆண்டு தன் பாலின ஆதரவாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் முதலில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் விசாரித்தனர். அதன் பின்னர், ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. இந்த நிலையில், தன் பாலின உறவு குற்றம் எனச் சொல்லும் 377 சட்டப்பிரிவை ரத்துசெய்து வரலாற்று முக்கியத்துவமான தீர்ப்பைக் கடந்த செப்டம்பர் மாதம் நீதிபதிகள் வழங்கினர். "தன் பாலின உறவு மனநோய் அல்ல; பெரும்பான்மை மக்களின் கருத்தைவிட அரசமைப்புச் சட்டமே உயர்ந்தது; தனி மனிதச் சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது" எனத் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. 

சபரிமலை வழக்கு:

இந்தத் தீர்ப்புதான், உண்மையில் அதிக சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புக்கும் உள்ளான தீர்ப்பாகும். இன்றுவரை இந்தத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்த இயலாமல் இருக்கிறது, கேரள அரசு.  28, செப்டம்பர் 2018 அன்று உச்ச நீதிமன்றம் சபரிமலைக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டித் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்தது. 10 வயதுமுதல் 50 வயதுவரை உள்ள பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முடியாது. இதையடுத்து, "எங்கெல்லாம் ஆண்கள் போகலாமோ, அங்கெல்லாம் பெண்களும் போகலாம்; ஆண்களுக்கு என்ன விதிகள் பொருந்துமோ, அது பெண்களுக்கும் பொருத்தும்" எனத் தீர்ப்பு வழங்கியது. ஏனெனில் , அரசமைப்புச் சட்டம் சாதி, மதம், இனம் போன்ற எதன் அடிப்படையிலான பாகுபாட்டையும் எதிர்க்கிறது. அரசமைப்புச் சட்டத்தில் இதுபோன்ற பாகுபாடு இருக்கும் இடங்களில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அனுமதியளிக்கிறது. பெண்ணியச் சிந்தனையாளர்கள், முற்போக்குவாதிகள் உள்ளிட்ட பலராலும் இத்தீர்ப்பு வரவேற்கப்பட்டது. அதுபோலவே, ''இது சபரிமலை ஐயப்பன் கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் வகையிலான தீர்ப்பு'' என எதிர்த்ததுடன், கோயிலுக்கு வழிபாடு நடத்த முயன்ற 10-லிருந்து 50 வயதுக்குட்பட்ட பெண்களைச் செல்லவிடாமல்  இந்துத்துவ அமைப்புகள் போராட்டமும் நடத்திவருகின்றன. "பெண்ணின் மாதவிடாயைக் காரணம் காட்டி கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது அபத்தம்" என்பது சமூகச் சிந்தனையாளர்களின் கருத்து.        

திருமணத்துக்கு வெளியிலான உறவு: 

இந்திய தண்டனை சட்டப் பிரிவு 497-ன் செல்லும் தன்மையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றமானது, இந்தத் தீர்ப்பை வழங்கியது. "திருமணத்துக்கு வெளியில் உறவில் வைத்துக்கொள்வது, மகிழ்ச்சியற்ற திருமணத்தைக் குறிப்பிடுவதாகும். மகிழ்ச்சியற்றவர்களைத் தண்டிப்பது முறையாகாது. திருமணத்துக்கு வெளியிலான பாலியல் உறவில் யாருக்கும் பாதிப்பு இல்லாதபட்சத்தில் ஈடுபடும்போது, அது சட்டப்படி குற்றமாகாது". ஆனால், இதன் காரணமாக தம்பதி இருவரில் ஒருவர் தற்கொலைவரை செல்ல நேர்ந்தால், மற்றவர் தற்கொலைக்குத் தூண்டியவர் என்ற வகையில் தண்டிக்கப்படுவார்கள்'' என்று குறிப்பிடப்பட்டு அப்பிரிவை ரத்து செய்தது. இந்தத் தீர்ப்பு இந்தியா முழுமையும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒருபுறம், இது பெண்களைப் போகப்பொருளாக, கணவனின் உடையாகக் கருதிய காலனிய மனநிலையை மாற்றும் என்றும், மற்றொருபுறம் இந்தியாவின் கலாசாரத்துக்கே அசைத்துப் பார்க்கக்கூடிய இழுக்காக இது அமையும் எனவும் விவாதிக்கப்பட்டது.

ஆதார் அட்டைத் தீர்ப்பு: 

ஆதார், தனி மனித உரிமையை மீறுகிறது. எனவே, அது அவசியமா... இல்லையா...  அரசியலமைப்புக்குட்பட்டதுதானா என்று தொடரப்பட்ட வழக்கில், "தனி மனித உரிமையும் அடிப்படை உரிமையே" என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும், அரசியலமைப்பு சாசனப்படி அது செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது.  "ஆதார், பிற அடையாள அட்டைகளைப்போல இல்லாமல் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆதார் எண்ணைப் போலியாக உருவாக்க முடியாது. அது, ஒரு தனி நபரின் அடையாளம். எனவே, அடையாளத்துக்கு ஆதார் கட்டாயம்" எனத் தீர்ப்புக் கூறிய அதே நேரத்தில், "அரசின் நலத் திட்டங்கள், வங்கி, தொலைபேசி எண், உள்ளிட்டவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை" எனவும் தீர்ப்பளிப்பது. மேலும், அது, எங்கெல்லாம் அவசியம் எனவும் தீர்ப்பு வழங்கியது.

நேரலை மூலம் நீதிமன்ற நடவடிக்கைகள்: 

நீதித்துறையின் வெளிப்படைத் தன்மையை இன்னும் அதிகரிக்கும் நோக்கில், அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதியளித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பதவி உயர்வில் இடஒதுக்கீடு இல்லை: 

சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலைமை என்பது அரசு வேலையில் சேர்ந்த பிறகு இல்லாமல் ஆகிவிடுகிறது. எனவே, அரசு வேலையில் உள்ள பட்டியல் இனத்தவருக்கு உயர்பதவிகளில் செல்ல வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இதற்கு முன்னதாக அரசியல் சாசன உறுப்பு 16 (4 -ஏ) ஆனது, அரசுப் பணிகளில் போதுமான பிரதிநிதித்துவம் அளிக்கப்படாத அட்டவணைப் பிரிவினருக்குச் சாதகமாக அரசுப் பணிகளில் பதவி உயர்வு அளிப்பதற்கு உண்டான விஷயங்களில் இடஒதுக்கீடு செய்யும் பொருட்டு, சட்டமியற்ற அரசுக்கு அதிகாரம் வழங்கியிருந்தது. இதன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தைத்தான் இந்தத் தீர்ப்பின்மூலம் உச்ச நீதிமன்றம் நீக்கியிருந்தது.

இப்படி, இந்த ஆண்டில் மட்டும் சில முக்கியமான அதிரடித் தீர்ப்புகளை வழங்கியிருந்தது, உச்ச நீதிமன்றம்.