Published:Updated:

``ரிப்பன் மாளிகையை நீதிமன்றத்துக்கு மாற்றிவிடலாம்’’ - வேலுமணி ஊழல் வழக்கில் விளாசிய நீதிபதி!

``ரிப்பன் மாளிகையை நீதிமன்றத்துக்கு மாற்றிவிடலாம்’’ - வேலுமணி ஊழல் வழக்கில் விளாசிய நீதிபதி!
``ரிப்பன் மாளிகையை நீதிமன்றத்துக்கு மாற்றிவிடலாம்’’ - வேலுமணி ஊழல் வழக்கில் விளாசிய நீதிபதி!

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு மாற்றிவிடலாம் என்று அமைச்சர் வேலுமணி தொடர்பான ஊழல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் தெரிவித்துள்ளார்.

``உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் பினாமி நிறுவனங்களுக்குக் கோவை மற்றும் சென்னை மாநகராட்சியில் அதிக டெண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வேலுமணிக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு அதிக டெண்டர்கள் கிடைப்பதற்காக, விதிமுறைகளைத் தங்கள் வசதிக்காக மாற்றியமைத்து பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதன் மூலம் கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் எஸ்.பி.வேலுமணியின் பினாமி நிறுவனங்களுக்குக் சென்றுள்ளன" என்று ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அறப்போர் இயக்கத்தினர் புகாரளித்தனர். ஆனால், அந்தப் புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, ``ஆளுநரிடம் உரிய அனுமதி பெற்று வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து நீதிமன்றம் விசாரணை நடத்தி, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அறப்போர் இயக்கத்தின் நிர்வாக அறங்காவலர் ஜெயராம் வெங்கடேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சத்யநாராயணன், ``மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைக்குட்பட்டு செயல்பட வேண்டும். ஆனால், அதிகாரிகள் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. சென்னையில், பல இடங்களில் சாலைக்கு மேல் சாலை போட்டு, சாலைகள் அதிக உயரமாகிவிட்டன. சென்னை மாநகராட்சி ஆணையாளர் தினமும் ஏதாவது ஒரு வழக்குக்காக, நீதிமன்றம் வந்துகொண்டே இருக்கிறார். பேசாமல், ரிப்பன் மாளிகையைச் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு மாற்றிவிடலாம்" என்று கூறினார்.


இதைத்தொடர்ந்து, அமைச்சர் வேலுமணி, சி.பி.ஐ, லஞ்ச ஒழிப்புத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை மற்றும் கோவை மாநகராட்சி நிர்வாகங்கள் பதிலளிக்க, உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. வழக்கு விசாரணை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.