
அத்துமீறினாரா போலீஸ் இன்ஸ்பெக்டர்? - வனத்துறை - காவல்துறை மோதல்
வனத்துறைக்கும், காவல்துறைக்கும் ஏற்பட்டிருக்கும் மோதலால் தகித்துக்கிடக்கிறது, மேற்குத் தொடர்ச்சி மலை. கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத்துறையினர் மீது காவல்துறை வழக்குப் பதிவுசெய்ய, பதிலுக்கு தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி காவல்துறையினர் மீது வனத்துறை வழக்குப் பதிவு செய்ய... இரு தரப்பினருக்குமான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார வனப்பகுதிகளில், 48 மலைக் கிராமங்கள் உள்ளன. ஜனவரி 13-ம் தேதி இரவு பொங்கல் விழா கொண்டாடுவதாகக் கூறி, டைசன் என்பவர் உட்பட எட்டுப் பேர், ஜீப்பில் பேச்சிப்பாறை அருகே வனத்துக்குள் செல்ல முயன்றுள்ளனர். அவர்களுக்கு வழிகாட்ட, தச்சமலை கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் காணி என்பவரும் உடன் சென்றுள்ளார். இவர்கள் வனத்துக்குள் செல்வதற்காக வனத்துறையின் அனுமதியைப் பெற்றிருக்கவில்லை. அதனால், பேச்சிப்பாறை ஸீரோ பாயின்ட் செக்போஸ்டில் இவர்களை வனத்துறை ஊழியர்கள் தடுத்து நிறுத்தி, சோதனை செய்தனர். அப்போது, ‘நக்ஸல் தடுப்புப் பிரிவு சிறப்பு இன்ஸ்பெக்டர் சாம்சனின் வழிகாட்டுதலின்பேரில், பொங்கல் விழா நடத்த மலைக் கிராமத்துக்குச் செல்கிறோம்’ என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், முறையான அனுமதி பெறவில்லை என்று கூறி, வேளிமலை வனத்துறை அலுவலகத்துக்கு அவர்களை வனத்துறையினர் அழைத்துச்சென்றனர். பிறகு, ‘அத்துமீறி வனத்துக்குள் நுழைந்தது தவறு’ என்று, தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர். மறுநாள் காலை அவர்களை விடுவித்த வனத்துறை, அவர்கள் வந்த ஜீப்பை விடுவிக்கவில்லை.

அன்றைக்கு, வேளிமலை வனத்துறை அலுவலகத்துக்கு கோபத்துடன் வந்த நக்ஸல் தடுப்புப்பிரிவு சிறப்பு இன்ஸ்பெக்டர் சாம்சன், அந்த ஜீப் தனக்குச் சொந்தமானது எனக் கூறி, அதை எடுத்துச்செல்ல முயன்றுள்ளார். ஜீப் தொடர்பான ஆவணங்களை அவரிடம் வனத்துறையினர் கேட்டுள்ளனர். அப்போது வனத்துறை அதிகாரிகளுக்கும், சாம்சனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட் டுள்ளது. குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வதங்கமும், தக்கலை டி.எஸ்.பி கார்த்தி கேயனும் அங்கு வந்து சமாதானப்படுத்தி, அந்த ஜீப்பை வாங்கிக் கொடுத்துள்ளனர். அதற்கு மறுநாளே கொலை மிரட்டல், அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட ஏழு பிரிவு களில் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் ஷாநவாஸ்கான், வனச்சரகர்கள் சில்வெஸ்டர், கலையரசன் உள்பட 14 பேர் மீது குலசேகரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதையடுத்து, வேளிமலை வனத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து வனத்துறையினர் பிடித்து வைத்திருந்த ஜீப்பை எடுத்துச்சென்றதாக இன்ஸ்பெக்டர்கள் சாம்சன், செல்வதங்கம் ஆகியோர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். இந்த மோதல், குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அ.தி.மு.க-வின் மேல்புறம் ஒன்றியச் செயலாளராக இருந்த உதயக்குமார், களியக்காவிளையில் ஜெயலலிதாவின் கட்அவுட்டை வைத்திருந்தார். அனுமதியின்றி வைத்ததாக, அதை அகற்றினார் களியக்காவிளை இன்ஸ்பெக்டராக இருந்த சாம்சன். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்து, பெரும் பிரச்னையானது. அதில், சாம்சன் பணியிடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய விவகாரம் குறித்துப் பேசிய இயற்கை ஆர்வலர்கள், “வன கிராமங்களில் பள்ளிகளைச் சீரமைத்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற சில வேலைகளை இன்ஸ்பெக்டர் சாம்சன் செய்துவருகிறார். அதற்காக, சில குழுக்களைத் தன்னுடன் வைத்திருக்கிறார். அதெல்லாம் சரி. ஆனால், அவருடன் செல்வோரும் காப்புக்காடுகளில் அத்துமீறுவதுடன், அங்கெல்லாம் புகைப்படங்கள் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவும் செய்கிறார்கள். இதைப் பார்க்கும் மக்களும் கூட்டம் கூட்டமாக வனப்பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைகின்றனர். சாம்சன் குழுவினர் பேச்சிப்பாறை அணை நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தீவுகளுக்குப் படகுகளில் சென்று, அங்கு தீயை மூட்டிச் சமையல் செய்கிறார்கள். அங்கு இரவில் தங்கி ‘கேம்ப் ஃபயர்’ உருவாக்கி, குத்தாட்டம் போடுகிறார்கள். சாம்சனின் பெயரைக் கூறிக்கொண்டு, மலைக் கிராமங்களுக்குப் பெண்களுடன் சிலர் செல்கிறார்கள். இயற்கை ஆர்வலர்கள் என்ற போர்வையில், வனச்சட்ட விதிகளை மீறுவோருக்கு அவர் துணைபோவது தவறு” என்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை அலுவலர் ஆனந்திடம் பேசினோம். “கன்னியாகுமரி மாவட்ட வனச் சரணாலயத்தில், அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் சிலர், இன்ஸ்பெக்டர் சாம்சனின் பெயரைக் கூறிக்கொண்டு வனத்துக்குள் நுழைந்ததால் அவர்களைத் தடுத்தோம். சமத்துவப் பொங்கல் கொண்டாடப் போவதாகச் சொன்ன அவர்கள், அனுமதியின்றி இறைச்சி, கத்தி ஆகியவற்றைக் கொண்டுசென்றதால் அபராதம் விதித்தோம். வனத்தில் பிடிபடும் பொருள்களைத் திரும்ப ஒப்படைக்க, அதற்கென வழிமுறைகள் உள்ளன. அவர்கள் சென்ற வாகனம் சாம்சனின் பெயரில் இல்லாததால், அதை அவரிடம் தர மறுத்தோம். அந்த ஜீப் அவருடையது என்றால், எஸ்.பி மூலம் எங்களிடம் கூறி வாங்கியிருக்கலாமே. சட்ட வழிமுறைகளை மீறி, ஜீப்பை அவர் எடுத்துச்சென்றுள்ளார். அதற்காக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் எனப் பயந்து, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் சாம்சன், வனத்துக்குள் இருக்கும் காளிகேசம் கோயில் வளாகத்தில் தன் நண்பர்களுடன் சேர்ந்து மது போதையில் தகராறு செய்த வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. அதுபோல, பெண்களை அழைத்துக்கொண்டு வந்த இன்ஸ்பெக்டரை வனத்திலிருந்து வெளியேற்றிய சம்பவங்களும் நடந்துள்ளன. நக்ஸல் தடுப்புப்பிரிவு ஆய்வாளராக இருந்தாலும், வனத்துறை அனுமதி பெற்றுதான் வனத்துக்குள் நுழைய வேண்டும். ஆனால், அவர்களின் கேளிக்கை கொண்டாட்டங்களுக்காக வனத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கிறார்கள். குரங்கனி வனத்தில் ஏற்பட்டது போன்ற நிலை இங்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்றுதான் நாங்கள் நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்றார்.
நக்ஸல் தடுப்புப் பிரிவு சிறப்பு இன்ஸ்பெக்டர் சாம்சனிடம் பேசினோம். “நான் கிராமங்களில் பாம்புகளைப் பிடித்து, வனத்தில் விடுவது, காட்டுக்குள் பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுகிறேன். ஆனால், வனத்துறையினர் வனத்தில் எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார்கள். களப்பணிகளுக்காகப் பெண்களை வனத்துக்குள் அழைத்துச்சென்றதை, அவர்கள் தவறான கண்ணோட்டத்தில் சித்திரிக்கிறார்கள். நான் வன கிராமங்களில் செய்யும் சமூகப் பணிகள் பிடிக்காததால், வனத்துறையினர் இதுபோன்று செயல்படுகிறார்கள். நடந்த சம்பவத்தில்கூட நான் என் ஆட்களை அனுப்புவதாக ரேஞ்சரிடம் போனில் கூறினேன். ஆனால், அனுமதிக்காக அவர்களிடம் கடிதம் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். வனத்துக்குச் செல்ல நான் வனத்துறையினரின் அனுமதி வாங்கவேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
காட்டையும், நாட்டையும் பாதுகாக்க வேண்டியவர்கள் இப்படி மோதிக்கொள்வது அழகல்ல!
- ஆர்.சிந்து
அடுக்கடுக்கான ஆதாரங்கள்!
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி-யிடம் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை வனத்துறையினர் அளித்துள்ளனர். மேலும், இன்ஸ்பெக்டர் சாம்சன் மற்றும் அவரின் நண்பர்கள் தங்கள் முகநூல் பக்கங்களில் ஏராளமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். இந்த ஆதாரங்கள் அனைத்தும் சாம்சன் உள்ளிட்டோர், வனச் சட்டத்தை மீறியிருப்பதை உறுதிசெய்கின்றன என்கிறார்கள் வனத்துறை வட்டாரத்தில். மேலும், வனத்துறைக்குச் சொந்தமான விடுதியை வாடகைக்கு விட, ‘வெஸ்டர்ன் காட்ஸ் டிரெக்கிங் கிளப்’ என்ற பெயரில், இவர்கள் விளம்பரம் செய்திருப்பதும் வனச் சட்டத்தை மீறிய செயல் என்கிறார்கள்.
காளிகேசம் கோவில் அருகில் காட்டுக்குள் வாகனத்தை நிறுத்தி, இன்ஸ்பெக்டரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து மது அருந்துவது போன்ற வீடியோ பதிவு ஒன்று வனத்துறையினரிடம் உள்ளது. அந்த ஓர் ஆதாரத்தை வைத்தே, இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிலையில், அதைச் செய்யாமல், இன்ஸ்பெக்டரின் புகாரின் பேரில் 14 வனத்துறையினர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
அனுமதியின்றிக் காட்டுக்குள் போனதற்காக வனத்துறையினரால் பிடித்துவைக்கப்பட்ட ஜீப், தன்னுடைய என்று இன்ஸ்பெக்டர் சாம்சன் சொன்னாலும், அதன் ஆர்.சி புக், வேறு ஒருவரின் பெயரில் உள்ளதாம். அந்த ஜீப்பைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்ட இன்ஸ்பெக்டரிடம், ஜீப்பை வாங்கிக் கொண்டதாக எழுதிக்கொடுக்குமாறு வனத்துறையினர் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் தக்கலை டி.எஸ்.பி-யும், குலசேகரம் இன்ஸ்பெக்டரும் தாங்கள் எழுதி வாங்கித்தருவதாகக் கூறி, ஜீப்பை வாங்கிக் கொடுத்துள்ளனர் என்றும் கூறும் வனத்துறையினர், சொன்னபடி அவர்கள் எழுதி வாங்கித்தராததுடன் வனத்துறையினர் மீது பொய் வழக்கும் போட்டுள்ளனர் என்று குமுறுகிறார்கள்.
– சே.சேவியர் செல்வக்குமார்