மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சட்டம் பெண் கையில்: பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டங்கள் - 15

சட்டம் பெண் கையில்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில் ( யாழ் ஶ்ரீதேவி )

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி, ஓவியம் : கோ.ராமமூர்த்தி

பெண்கள்மீது காலம் காலமாக நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள், அவளது மனதுக்குள்ளேயே புதைக்கப்பட்டுவந்தன. அவற்றை வெளியில் சொன்னால் தனது நடத்தையை உலகம் கேள்விக்குள்ளாக்கும் என்கிற பயம்தான் அதற்குக் காரணம். இன்று காலம் மாறியுள்ளது. ‘எனக்கு, இது நடந்தது; இவரால் நடந்தது’ எனப் பெண்கள் பலர் தைரியமாகப் பகிர்ந்துகொள்கின்றனர், புகார் அளிக்கின்றனர். இந்தப் புகார்களுக்கான சட்ட நடவடிக்கை, குற்றவாளிக்கான தண்டனைகள் மற்றும் புகார் அளிக்கும் பெண்ணுக்கான சட்டப் பாதுகாப்பு பற்றிய தகவல்களைத் தருகிறார், வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

எவையெல்லாம் பாலியல் குற்றங்கள்?

• பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக அவளை உடலளவிலும் மனதளவிலும் காயப்படுத்தும் அனைத்துமே பாலியல் குற்றங்களே.

• ஒரு பெண்ணின் விருப்பமின்றி, அவளின் சம்மதமில்லாமல் வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது, பாலியல் குற்றங்களில் உச்சபட்ச குற்றமாகும். தனக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாத மனநலம் பாதிக்கப்பட்ட பெண், விவரம் அறியாத சிறுமி ஆகியோர் எதிராளிக்கு மறுப்பு தெரிவிக்காமல் சம்மதித்திருந்தாலும் அவர்கள்மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் உறவு, பாலியல் வன்கொடுமைக் குற்றமாகவே கருதப்படும்.

• ஒரு பெண்ணைக் கேலி பேசுவது, அவள் பின்னால் பாட்டுப் பாடிக்கொண்டு சுற்றுவது, தெரியாமல் நடந்துவிட்டதைப்போல அவளை உரசிக்கொண்டு செல்வது போன்ற அனைத்தும் பாலியல் குற்றங்களே.

சட்டம் பெண் கையில்: பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டங்கள் - 15

சாட்சியளிக்கும் மனத்திடம் வேண்டும்

தனக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததை நிரூபிக்கும் பொறுப்பும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கே என்பது வேதனைக்குரியது. என்றாலும், இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்டப்படி நீதி கிடைக்கவும், குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்கவும், சம்பந்தப்பட்ட பெண் மனதிடத்துடன் அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தான் புகார் அளிக்க முன்வரும்பட்சத்தில், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையிலேயே, எந்தத் தடயமும் அழிந்துவிடாமல் தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும், அதை நிரூபிக்கவும் இந்த மருத்துவப் பரிசோதனை அவசியம். நடந்த சம்பவங்கள் அனைத்தும் மருத்துவப் பரிசோதனை, காவல் நிலையப் புகார், நீதிமன்ற விசாரணை என அனைத்து இடங்களிலும் எழுத்தில் பதிவு செய்யப்படும்.

சட்டங்கள்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் புகார் கொடுத்து வழக்கு பதிவான பின்னர் வழக்காட, தண்டனைகள் பெற்றுத்தர இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, இந்திய சாட்சிய சட்டம் 1872, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 என பலதரப்புச் சட்டங்கள் துணை நிற்கின்றன.

பலியாக்கப்பட்ட பெண்களின் உயிரில் எழுதப்பட்ட சட்டங்களும் சட்டத் திருத்தங் களும்

நம் நாட்டின் கடந்த கால குற்றப்பட்டியலை அலசும்போது பெண் களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்த உருவாக் கப்பட்ட சட்டங்களின் மறுபக்கத்தில், அதற்கான தூண்டுகோலாகப் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உயிர் தேவைப்பட்டிருக்கிறது என்பதும் தெரியவருகிறது.

பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் தடுப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம்

விசாகா எதிர் ராஜஸ்தான் மாநிலம் (Vishaka & Ors Vs State of Rajesthan & Ors) வழக்கு 1997-ல் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகி ஒருவர், ராஜஸ்தான் அரசின் பெண்கள் முன்னேற்றத் திட்டத்தில் பணியில் அமர்த்தப்பட்டார். குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையிடம் அவர் புகார் அளித்ததன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட உயர்குலத்தைச் சேர்ந்த ஆண்கள் அவரைப் பழிவாங்க, அவரை கூட்டு வன்கொடுமை செய்தனர். சமூக சேவகி நீதிமன்றத்தை நாடினார். ‘உயர்ந்த சாதியினர் தாழ்ந்த சாதிப் பெண்ணைத் தொட மாட்டார்கள்’, ‘குற்றவாளி நால்வரில் மாமனும் மருமகனும் அடங்குவர்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இப்படியான செயலைச் செய்ய மாட்டார்கள்’,  ‘குற்றவாளி களில் வயதானவர்களும் உள்ளனர். வயதானவர்கள் வன்கொடுமை செய்தார்கள் என்பதை ஏற்க முடியாது’ என்பது போன்ற காரணங்களை முன்வைத்து குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.

பணியிடத்தில் இப்படிப்பட்ட பாலியல் வன்கொடுமை இன்னொரு பெண்ணுக்கு நிகழ்ந்துவிடக் கூடாது என்கிற அக்கறையில் ‘விசாகா’ என்ற பெயரில் தன்னார்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ‘விசாகா’ வழக்கின் தீர்ப்பின் மூலமாக ‘பணியிடத்தில் பாலியல் தொல்லைகள் தடுப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2013’ என்ற புதிய சட்டம் உருவானது.

குற்றவியல் நடைமுறை திருத்தச் சட்டம் 2013

டெல்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தபோது நாடே கொதித்தெழுந்தது. விசாரணையும் வழக்கும் தீவிரப்படுத்தப்பட்டன. விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அவர்கள் தண்டனையைக் குறைக்க உச்ச நீதிமன்றத்தை நாடினர். அவர்களுக்கு மரண தண்டனையை உறுதிப்படுத்தியது உச்ச நீதிமன்றம். இதைத் தொடர்ந்து, நீதிபதி வர்மா கமிட்டியின் பரிந்துரையில் ‘குற்றவியல் நடைமுறை திருத்தச் சட்டம் 2013’ கொண்டுவரப்பட்டது.  பெண்கள்மீது  ஆசிட் வீசும் குற்றமும் இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

கிரிமினல் லா திருத்தச் சட்டம் 2018

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளைக் கடுமையாக்கினால் மட்டுமே அதைத் தடுக்க முடியும் என்ற கட்டாயம் உருவானதன் பின்னணியில் உள்ளதும், ஒரு பிஞ்சுக் குழந்தையின் உயிர்தான். காஷ்மீரில் கத்துவா பகுதியைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுமி கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாள். பாலியல் குற்றங்கள் தொடர்பான இந்தியச் சட்டங்களில் 2018-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அவசரச் சட்டமாக வெளிவந்ததற்கு முக்கியக் காரணம், அந்த எட்டு வயது சிறுமிக்கு நடந்த கொடூரமே. இந்திய தண்டனைச் சட்டம் 354-ல் ஏ.பி.சி.டி என நான்கு உட்பிரிவுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டன. எவை எவையெல்லாம் பாலியல் குற்றங்களாகக் கருதப்படும் என்ற விளக்கத்தோடு, அதற்கான தண்டனைகளையும் தெளிவுபடுத்தியது. இதற்கு முன்பு பாலியல் குற்றத்துக்காகக் கொடுக்கப்பட்டுவந்த தண்டனைகளின் கால அளவை நீட்டிக்க இந்த திருத்தச் சட்டம் வழிவகுத்தது. குழந்தைகளைக் கடத்தி, அவர்களை அடிமைப்படுத்தி, ஆள் கடத்தல் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் ஆகியவற்றுக்கான தண்டனைகளையும் திருத்தச் சட்டம் அழுத்தமாகப் பதிவுசெய்தது.

பாலியல் குற்றவாளிக்கான தண்டனைகள்

இந்திய தண்டனைச் சட்டப்படி பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்குத் தண்டனையாக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்றிருந்தது. இப்போது அந்தக் குற்றத்துக்கு குறைந்தது பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக ஆயுட்கால தண்டனை எனவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

•   16 வயதுக்குட்பட்ட சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்குக் குறைந்தபட்ச தண்டனையாக இருபது வருட சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும்.

• இந்திய தண்டனை திருத்தச் சட்டம் பிரிவு 376 AB என்ற பிரிவுதான், திருத்தச் சட்டத்தில் அதிக கவனத்தைப் பெறுகிறது.

• 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்தால், குறைந்தபட்சமாக இருபது வருட சிறைத் தண்டனையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும், குற்றத்தின் தீவிரத்தையும் கணக்கில்கொண்டு உச்சபட்சமாக மரண தண்டனையும் விதிக்கப்படும்.

• பிரிவு 376 DB: 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு, அவர்களின் ஆயுட்காலம் முடியும் வரையிலும் சிறைத் தண்டனை அல்லது அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும்.

• 13 வயதுக்குட்பட்ட சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி முன் ஜாமீன் பெற முடியாது.

• குற்றவாளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அந்தத் தொகை பாதிக்கப்பட்ட வர்களின் மருத்துவச் செலவை ஈடுகட்ட அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

• புலன் விசாரணையை இரண்டு மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும்.

• இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354: பெண்ணுக்குப் பாலியல்ரீதியான தொந்தரவுகளை உண்டாக்குபவருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும். இதில், பெண்ணின் உடலைத் தொடுவது, ஆபாசமாகக் கூப்பிடுவது, ஆபாசப்படங்களை அவளிடம் காட்சிப்படுத்துவது போன்ற பாலியல் தொந்தரவுகளும் அடங்கும்.

• ஒரு பெண் அறியாதிருக்கும் போது அவருக்குத் தெரியாமல் அவரின் அந்தரங்கங்களைப் படமாக்குதல், செல்லும் இடமெல்லாம் அவரைப் பின்தொடர்தல், அவரின் இ-மெயில், சமூக வலைதளப் பக்கங்கள் போன்ற தொழில்நுட்பத் தொடர்புகள் மூலம் அவரைத் தொந்தரவு செய்தல் போன்றவையும் குற்றச்செயல்கள் ஆகும். இவற்றை முதல் முறை செய்பவராக இருந்தால், அபராதத்துடன் ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதே குற்றத்தை மீண்டும் செய்தால், குறைந்தது மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

• இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 B: மனைவி என்பவள் தன்னுடைய அந்தரங்க அடிமை என்ற மனநிலை பல ஆண்களுக்கு உண்டு. கணவனை விட்டுப் பிரிந்து வாழும் சூழலில், உடன்படாத மனைவியுடன் உறவுகொள்ளும் ஆணுக்குத் தண்டனையாக அபராதமும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்படும். அது ஏழு ஆண்டுகள் வரையும் நீடிக்கும்.

• இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 509: ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தும் விதமாகப் பேசுதல், அவள் தன்னை கவனிக்க வேண்டும் என்று ஆபாசமாக ஒலி எழுப்புதல், ஏதேனும் பொருளைக் காண்பித்தல், அவளது அந்தரங்கத்தில் அத்துமீறித் தலையிடுதல் போன்றவற்றுக்குத் தண்டனையாக, மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், தீவிரமாக்கப்பட்டிருக்கும் இந்த சட்டத் தண்டனைகளுக்குப் பயந்தாவது குறையுமா?

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

• குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 160-ன்படி பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரணை செய்யும் அதிகாரிகள், அவர் வசிக்கும் இருப்பிடத்துக்குச் சென்று விசாரிக்க வேண்டும். விசாரணைக்காகக் காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. விசாரணையின்போது பெண் காவலர்கள் உடனிருக்க வேண்டும்.

• பாதிக்கப்பட்ட பெண், தனது பாலியல் புகாரைத் தான் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. எந்தக் காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கலாம். இது ஜீரோ முதல் தகவல் அறிக்கையாக (Zero FIR) பதியப்படும்.   

• பாலியல் தொடர்பான புகார்களைப் பெண் காவல்துறை அதிகாரிகளிடமே பதிவு செய்யலாம்.

• பாதிக்கப்பட்ட பெண் விருப்பம் தெரிவிக்கும்பட்சத்தில்தான் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய முடியும்.