அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

தீ... தீ... தீர்ப்புகள் 2018

தீ... தீ... தீர்ப்புகள் 2018
பிரீமியம் ஸ்டோரி
News
தீ... தீ... தீர்ப்புகள் 2018

தீ... தீ... தீர்ப்புகள் 2018

தீ... தீ... தீர்ப்புகள் 2018

2018-ம் ஆண்டில் நீதிமன்றங்கள் வழங்கிய சில தீர்ப்புகள் கருவறைமுதல் கல்லறைவரையிலான பொது வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் திருத்தங்களைச் செய்துள்ளன. ஆன்மிக நம்பிக்கை, தனி மனித ஒழுக்கம் சார்ந்து, சில நீதிபதிகள் அளித்த உத்தரவுகள் பொதுச் சமூகத்தின் கட்டமைப்பை அசைத்துப்போட்டதில் அதிகமாய் ஆடிப்போனது, நடுத்தட்டு வர்க்கம்தான். ‘இருக்கிற இடமே தெரியக்கூடாதுப்பா...’ என்றிருந்த மக்களை வீதியில் இறங்கிப் போராடவைத்த சில தீர்ப்புகள், இன்றும் விவாதப் பொருளாக உள்ளன.

அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்...

மல்லுக்கட்டு... சபரிமலைக்கு!

செப்டம்பர் 28, 2018: பத்து வயதிலிருந்து 50 வயது வரையிலான பெண்களை, சபரிமலை சன்னிதானத்துக்கு அனுமதிக்க மறுக்கும் ஆன்மிக மரபை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா என ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இறுதியில், ‘அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம்’ எனத் தீர்ப்பளித்தது. சட்டப் பிரிவு 25-ன்கீழ் (மதப் பின்பற்றுதல் உரிமை) இந்த உரிமையை வழங்கியது, நீதிமன்றம். தீர்ப்பைத் தொடர்ந்து, சபரிமலைக்கு நுழைய முற்பட்டனர், பெண்ணியப் போராளிகள். வெடித்தது போராட்டம். காங்கிரஸும், பி.ஜே.பி-யும் ஓரணியில் போராட, கலவர பூமியானது, கடவுளின் தேசம். பல லட்சம் பெண்கள் சேர்ந்து 620 கிலோ மீட்டர் நீளத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் எழுப்பிய ‘வனிதா மதில்’, தீர்ப்புக்கு வலு சேர்த்தது. இந்தத் தீர்ப்பு மீதான மறுசீராய்வு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

தீ... தீ... தீர்ப்புகள் 2018

அதாரு உதாரு... ஆதார்!

செப்டம்பர் 26, 2018: ஆதார், அரசியலமைப்புக்கு உட்பட்டதுதானா என்று தொடரப்பட்ட வழக்கில், ‘தனி மனித உரிமையும் அடிப்படை உரிமையே; அதே சமயம், ஆதார் அரசியல் சாசனப்படி செல்லும் எனவும், ஆதார் அவசியமானது. ஆனால், அது எல்லா இடங்களிலும் கட்டாயம் இல்லை’ என்றும் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். பான் அட்டை பெறவும், வருமானவரி தாக்கல் செய்யவும் தவிர, மற்றவற்றுக்கு ஆதார் கேட்பது சட்டவிரோதம் என்று சாட்டையால் அடித்தது இந்தத் தீர்ப்பு.

தீ... தீ... தீர்ப்புகள் 2018

தவறில்லை தன்பாலின உறவு!

செப்டம்பர் 6, 2018: தன் பாலின உறவைக் குற்றமெனக் கூறி தண்டனை வழங்கிய 377-வது சட்டப்பிரிவை ரத்துசெய்து வரலாற்று முக்கியத்துவமான தீர்ப்பை வழங்கியது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு. மிகவும் பிற்போக்கான மனநிலையும், கலாசார கட்டுப்பாடுகளும் நிறைந்ததாகவே இந்தியாவை நோக்கும் உலகத்துக்குத் தரமான பதிலடியாக வந்தது இந்தத் தீர்ப்பு. நாகரிக வளர்ச்சியில் உச்சம் கண்டவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பல மேலைநாடுகளே இன்னும் திணறிக்கொண்டிருக்கும்போது, மனித மனங்களுக்கும், அளப்பரிய அன்புக்கும் தலைவணங்குவோமே தவிர, தடை விதிக்க மாட்டோம் என்று கூறி, `வரலாறு, தன் பாலின ஈர்ப்பாளர்களிடம் பெரும் மன்னிப்பு கேட்கிறது’ என்ற ஒற்றை வரி உதிர்த்து மார்தட்டிக்கொண்டது இந்திய தேசம்.

உன்னைச் சொல்லி குற்றமில்லை!

செப்டம்பர் 27, 2018: திருமணமான பெண்ணுடன், கணவனன்றி வேறு ஓர் ஆண் உறவுகொண்டால், அந்த நபர் குற்றம் செய்தவராகவும், பெண் பாதிக்கப்பட்டவராகவும் சொல்கிறது, இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு. இது, பாலியல் சமத்துவத்துக்கு எதிரானது என்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ‘மனைவி என்பவள் கணவனின் சொத்து அல்ல; கணவன் என்பவன் மனைவிக்கு எஜமானனும் அல்ல’ என்ற கூற்றின்வழி ஆணாதிக்கச் சமூகத்தின்மீது காட்டம் காட்டியது. திருமணம் தாண்டிய பாலியல் உறவை, உரிமையியல் (Civil) வழக்காகப் பதிவுசெய்து விவாகரத்து கோரலாமே தவிர, கிரிமினல் குற்றமாகக் கருதக்கூடாது என்று சொன்னது, இந்தத் தீர்ப்பு. பெண்களின் சுதந்திரத்தை, நம் தேசம் மிகச்சரியாக அணுகிய விதங்களில் இது மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஆனால், பலதரப்பட்ட மக்களால் மிகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தீர்ப்பும் இதுவே.

இருக்கலாம்... இறக்கலாம்!

மார்ச் 09,  2018: “இந்திய அரசியல் சாசனம் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையாக வாழ்வுரிமையை வழங்கி இருக்கிறது. வாழ்வதற்கான உரிமை என்பது ஒரு மனிதன் கண்ணியமாக மரணிப்பதற்கான உரிமையையும் உள்ளடக்கியதே” என்ற வரலாற்று முக்கியமான தீர்ப்பை வழங்கி, இந்தியாவில் கருணைக் கொலைக்கு அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றம். தீராத நோய் தாக்கியவர்கள், மருத்துவச் சிகிச்சையால் காப்பாற்ற இயலாத, மீளமுடியாத நோயினால் தவிப்பவர்களைக் கருணைக்கொலை செய்ய அனுமதிக்கலாம். எனினும், கருணைக் கொலைக்கான தனிச்சட்டம் உருவாக்கப்படும்வரை, தற்போது வகுக்கப்பட்டிருக்கும் நெறிமுறைகளின்படி தொடரவேண்டும் என்றும் விளக்கியது, இந்தத் தீர்ப்பு.

    தீபாவளிக்கே வேட்டு!

அக்டோபர் 31, 2018: சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, தீபாவளி பண்டிகை நாளில், இரவு எட்டு மணிமுதல் பத்து மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது, உச்ச நீதிமன்றம். தமிழகத்தின் மறு சீராய்வு மனுவினாலும் பலனில்லை. வெடிக்க வேண்டிய நேரத்தை நிர்ணயிக்கும் உரிமையை மாநில அரசுகளுக்குத் தந்த உச்ச நீதிமன்றம், ஆன்லைனில் பட்டாசு விற்பனையையும் தடை செய்தது. தீர்ப்புக்கு எதிராக, விதியை மீறி பட்டாசு வெடித்ததாகத் தமிழகத்தில் 2,372 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காவிரி... தமிழகத்துக்குக் கைவிரி!

பிப்ரவரி 16,  2018: காவிரியில், தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரின் அளவை 192 டி.எம்.சி-யில் இருந்து 177.25 டி.எம்.சி ஆகக் குறைத்து உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தச் செயல்திட்டம் உருவாக்கவும் அறிவுறுத்திய தீர்ப்பு, நீர்ப் பங்கீடு, அணை திறப்பது, ஆய்வு செய்வது என அனைத்து இறுதி முடிவை எடுக்கும் அதிகாரமும் ஆணையத்துக்கே இருக்க வேண்டுமென்றும் தெளிவுபடுத்தியது.

யானைகளுக்கும் நீதி!

ஆகஸ்ட் 9, 2018: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில், காட்டு யானைகளின் வழித்தடத்தில், முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டுவரும் 27 உல்லாச விடுதிகளை மூடி ‘சீல்’ வைக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, வன உயிரின ஆர்வலர்களை மனம் குளிரவைத்தது.

இவற்றைத் தவிர்த்து, உச்ச நீதிமன்றம் கூறிய சில தீர்ப்புகள், அன்றாடப் பரபரப்புக்கும், அரசியல் விவாதங்களுக்கும் தீனி போட்டன. திரையரங்குகளில் திரைப்படம் தொடங்கும் முன்னர் தேசிய கீதம் ஒளிபரப்புவது கட்டாயமில்லை; தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான வழக்குகள் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களைப் பத்திரிகை மற்றும் ஊடகத்தில் விளம்பரம் செய்ய வேண்டும் என்பன போன்றவை வரவேற்பைப் பெற்றன.

ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறை

கேடுகள், நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணைகள் கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்தது, எதிர்க்கட்சியினரை ஏமாற்றமடைய வைத்தது. நீட் தேர்வில், தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கிய மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவை மறுத்து, ‘முடியாது’ என்றும் தீர்ப்பளித்தது.

பல தீர்ப்புகள், உச்ச நீதிமன்றத்தின் நடுநிலைத்தன்மையை விவாதத்துக்கு உள்ளாக்கிய நிலையில், உச்ச நீதிமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி கொடுத்து, நம்பிக்கை அளித்தது உச்ச நீதிமன்றம். அடுத்து சில உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பார்ப்போம்

  அண்ணாவுக்கு அருகில் கருணாநிதி!

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தார். வழக்குகளைக் காரணம் காட்டி, மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி மறுத்தது, எடப்பாடி பழனிசாமியின் தமிழக அரசு. நள்ளிரவில் நீதி கேட்டு, நீதிபதியின் வீட்டுக் கதவைத் தட்டியது தி.மு.க. அதே இரவில், ஐந்து வழக்குகள் திரும்பப் பெறப்பட்டதும், ‘எந்தச் சட்டச் சிக்கல்களும் இல்லை’ என்பதைச் சுட்டிக்காட்டி, மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கி உத்தரவிட்டது, உயர் நீதிமன்றம்.

தீ... தீ... தீர்ப்புகள் 2018

பறிபோனது 18 பேர் பதவி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, கவர்னரிடம் 18 எம்.எல்.ஏ-க்கள் புகார் அளித்ததால், அவர்களைத் தகுதி நீக்கம் செய்தார், பேரவைத் தலைவர் தனபால். இதை எதிர்த்துத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு, இரு வேறு தீர்ப்பை வழங்கியது. மூன்றாவது நீதிபதி சத்யநாராயணா விசாரணைக்குப் பின், ‘தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும்’ என்று தீர்ப்பு  வழங்கப்பட்டது. அந்த 18 பேர், இப்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்.

தீ... தீ... தீர்ப்புகள் 2018

எல்லாம் ஒரு விளம்பரம்தான்!

தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு பரிசோதனை செய்ய வேண்டும் என்று, பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இறந்தபின்னும் ஒருவருக்கு ‘அந்தரங்க உரிமை வழங்கப்படும்’ என்று கூறிய உயர் நீதிமன்றம், ‘இது விளம்பரத்துக்காகப் போடப்பட்ட மனு’ என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தது.

- சேவியர் செல்வக்குமார், ஜெனிஃபர் ம.ஆ

தீ... தீ... தீர்ப்புகள் 2018

அங்கும் இங்கும்!

• மெரினா புரட்சியால், ஜல்லிக்கட்டு எழுந்த அச்சத்தில், மெரினாவில் போராட்டம் நடத்த தமிழக அரசு தடை விதிக்க... அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது; உச்ச நீதிமன்றமும் அதையே வழிமொழிந்தது.

• தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தல் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், பார் கவுன்சில் தேர்தலில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க வருமானவரிச் சோதனைக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம். தேர்தலில் போட்டியிடுவோர்க்குத் தகுதிகளை வகுத்தது. அந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

• இரண்டாம் வகுப்புவரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது, குழந்தைகளின் எடையில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே புத்தகச் சுமை இருக்க வேண்டும் என்று ஒரு வழக்கில் தீர்ப்பளித்து, பெற்றோ
ரின் மனச்சுமையை இறக்கிவைத்தார், உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்.

• புதிய சட்டமன்றக் கட்டடம் கட்டப்பட்டதில், முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில், அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தைக் கலைத்து உத்தரவிட்டது, உயர் நீதிமன்றம்.

• சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரித்த, ‘கோயில் சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தது, உயர் நீதிமன்றம். மேலும், ஓய்வுபெற்றபின்னும், பொன்.மாணிக்கவேலை பணியில் நீட்டிக்கவும் உத்தரவிட்டது.

• சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தும்கூட வேலையைத் தொடர்ந்தது தமிழக அரசு. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திட்ட அறிக்கையின் முரண்பாட்டைச் சொல்லி, எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தத் தடை விதித்தது.