மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சட்டம் பெண் கையில்! - பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள்! - 17

சட்டம் பெண் கையில்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில் ( யாழ் ஶ்ரீதேவி )

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

குழந்தைகள்மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள், சட்டங்கள், தண்டனைகள் பற்றிச் சென்ற இதழில் பார்த்தோம். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களின் நோக்கம், வரையறை மற்றும் நடைமுறை பற்றி, இந்த இதழில் பேசுகிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

சட்டம் பெண் கையில்! - பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள்! - 17

போக்ஸோ சட்டத்தின்படி சிறப்பு நீதிமன்றம்

குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உருவாகக் காரணம், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டமான போக்ஸோ சட்டம் 2012-தான் (POCSO - The Protection of Children from Sexual Offences). குழந்தைகள் என்பது 18 வயது நிரம்பாத சிறுவர்கள், சிறுமிகள் இருபாலரையும் குறிக்கும். பாலியல்கொடுமையால் பாதிக்கப்பட்டு நீதிபெற வேண்டி நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும் குழந்தைகளுக்கு நீதிமன்றச் சூழ்நிலை அவர்களின் அச்சத்தை இரட்டிப்பாக்கும். நீதிமன்ற அறை, கறுப்பு உடையில் வழக்கறிஞர்கள், சீருடையில் காவலர்கள், விசாரணைக் கூண்டு, சாட்சியம், விசாரணை, பாலியல் கொடுமை செய்தவனை நேரில் பார்க்க வேண்டிய சூழ்நிலை, சுற்றிலும் வேற்று மனிதர்கள் என்று வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தின் தோற்றத்தால் அவர்களின் மனம் மேலும் அச்சப்படுவதைத் தவிர்க்க வேண்டும்; பாதிக்கப்பட்டவர்கள் பயமில்லாமல் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் நோக்கம்.

சட்டம் பெண் கையில்! - பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள்! - 17குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று போக்ஸோ சட்டத்தின் பிரிவு 28-ல் விளக்கப்பட்டுள்ளது. பொதுவாக, நீதிமன்ற சூழலைக் கண்டு குழந்தைகள் பயப்படுவார்கள். அதுவே, சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குக்கு அவசியமான சிலர் முன்னிலையில் மட்டுமே நடத்தப்படும் சூழலில் குழந்தையின் அச்சம் விலகும். மேலும் இதுதொடர்பான வழக்குகள் துரிதமாக நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு விரைவாக தண்டனை பெற்றுத்தர முடியும்.

நீதிமன்ற விசாரணையின்போது குழந்தை யின் அடையாளத்தை வெளிப்படுத்தாத வகையில் கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும். குழந்தை சாட்சியம் அளிக்கும்போது அடுத்த நிகழ்ச்சியைத் தெரிவிக்க அவகாசம் தேவைப் பட்டால் இடைவெளி எடுத்துக்கொள்ளலாம். ஏழு வருட அனுபவம் வாய்ந்த ஒருவர்தான் பிராசிக்யூட்டராக இந்த வழக்கைக் கையாள வேண்டும். சாட்சியக் கூண்டு இருக்கக் கூடாது. இவையெல்லாம் இந்த நீதிமன்றத்தின் சிறப்பு அம்சங்கள்.

தமிழகத்தின் முதல் குழந்தைகள் நீதிமன்றம் (Child-friendly courtroom in Chennai)

இந்தியாவில் இதுவரை கோவா, தெலங்கானா, டெல்லி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நான்காவது இடமாகவும், தமிழகத்தில் முதன்முறையாகவும் சென்னை உயர் நீதிமன்றக் கட்டட வளாகத்தில் குடும்பநல நீதிமன்றத்தின் மூன்றாவது மாடியில் 2017 ஜூலை 18-ல், குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றத் திறப்பு விழா நடந்தது. இதை வடிவமைத்து ஸ்பான்சர் செய்தது `யுனைடெட் வே' என்கிற தொண்டு நிறுவனம். இந்த நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற அன்றைய சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, `நான் பள்ளி, கல்லூரி நாள்களில் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறேன்; மேடைகளில் பேசியிருக்கிறேன். ஆனாலும், முதன்முறையாக நீதி மன்ற அறைக்குள் வழக்கறிஞராகச் சென்றபோது என்னால் பேச முடியவில்லை. நீதிமன்றச் சூழல் எனக்குப் புதிதாக இருந்தது. வழக்கறிஞருக்கே இப்படி யென்றால் வழக்குக்காக நீதிமன்றத்துக்குள் வரும் குழந்தைகளின் மனநிலை எவ்வளவு மிரட்சியடையும்’ என்று, இந்த நீதிமன்றங்களின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் புரியவைக்கும் விதமாகப் பேசினார்.

சென்னை குழந்தைகள் நீதிமன்றம் செயல்படும் விதம்

சென்னை குழந்தைகள் நீதிமன்றத்துக்குப் பாலியல் வழக்குகளுக்காக வரும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காத்திருக்க என்றே தனி அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு சோபா, மேஜை, பொம்மைகள், டி.வி, சமையலறை வசதிகளுடன் ஒரு சிறிய வீட்டைப் போல வடிவமைத்துள்ளனர். சுவரில் சிரிக்கும் பொம்மைகள் பாலர் பள்ளியை நினைவூட்டும். விசாரிக்கப்படும் குழந்தைகள் பார்வையாளர்களுக்கு அடையாளப்படுத்தப்பட மாட்டார்கள். அவர்கள் முகம் மற்றவர்களுக்குத் தெரியாத வகையில்  ஒரு பக்கம் மட்டும் தெரியும்படி கண்ணாடி வைக்கப்பட்டிருக்கும். விசாரணைக்கு உட்படுத்தப்படும் குழந்தை களுடன் அவர்களின் பெற்றோர் அல்லது தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள்  இருக்கலாம்.  

சட்டம் பெண் கையில்! - பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள்! - 17

நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் `வாதாடு கிறேன்' என்கிற பெயரில் ஏற்கெனவே ரணப்பட்ட ஒரு குழந்தையின் இதயத்தைக் குத்திக் குதறும் விதமாகக் கேள்விகளைத் தொடுக்கக் கூடாது. நீதிமன்றச் சீருடைகளை வழக்கறிஞர்கள் மட்டுமல்ல, நீதிபதியும் உடுத்த வேண்டியதில்லை. வாக்குமூலம் கொடுக்கும் குழந்தைகள் நீதிமன்ற அறைக்குள் வராமல் காத்திருப்பு அறையில் இருந்தபடியேயும் அவர்களின் சாட்சியம் அல்லது விளக்கத்தை அளிக்கலாம். அது வீடியோ மூலம் நேரடியாக நீதிமன்றத்தில் ஒளிபரப்பாகும். சென்னை குழந்தைகள் நீதிமன்றம் உட்பட அனைத்து குழந்தைகள் நீதிமன்றங்களும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநலனைக் கருத்தில்கொண்டு இப்படிச் செயல்படுகின்றன.

‘குழந்தைகள் நீதிமன்றக் காத்திருப்பு அறைக்குள் நுழைந்ததும், என் இளம் வயது நினைவுகளுக்கே சென்றுவிட்டேன்’ என்று அந்தச் சூழல் குறித்த தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ‘வீட்டில் இருக்கும் நபர்கள் என்ன தான் திறமையாகச் செயல்பட்டாலும் குடும்பத் தலைவர் ஏதேனும் ஒரு குறை சொல்லுவார். அப்படிக் குடும்பத் தலைவராக என்னுடைய கருத்தைக் கூற விரும்புகிறேன். குழந்தைகள் என்றால் குழந்தைகள் மட்டுமல்லர்; வளரிளம் குழந்தைகளும் அடங்குவர். அதனால் அந்த அறையில் அவர்கள் காத்திருக்கும்போது படிப்பதற்குப் புத்தகங்களும் இடம்பெற்றால் நன்றாக இருக்கும்’ என்று தனது கருத்தை `யுனைடெட் வே' தொண்டு நிறுவனத்திடம் கூறினார்.

பலனும் கைகூட வேண்டும்!

பாலியல் கொடுமையானது, பால்யம் மாறாத குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும்  வாழ்க்கை முழுவதும் சுமக்கும் வேதனை வடுவாகப் பதிந்திருக்கும். அவர்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச நிம்மதி, சம்பந்தப்பட்ட வழக்கில் கிடைக்கும் நீதியில்தான் உள்ளது. எனவேதான், குழந்தைகள் தொடர்பான பாலியல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களை மாவட்டம்தோறும் அமைக்க வேண்டும் என்று போக்ஸோ சட்டம் 2012-லேயே அறிவுறுத்தப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போது, குழந்தைகள்மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்ற வழக்குகளைத் துரிதமாக இந்தச் சட்டத்தின்கீழ் நடத்தி முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றங்
களுக்குத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுறுத்தியுள்ளார். சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் துரிதமாக!

 ஓவியம் : கோ.ராமமூர்த்தி