Published:Updated:

தீர்ப்பையடுத்து வீட்டைவிட்டு வெளியேறிய கணவர்... உள்ளே நுழைந்த கனகதுர்கா!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, போலீஸ் பாதுகாப்பில் இருந்துவரும் கனகதுர்கா, தன் கணவரின் வீட்டிலேயே வாழலாம் என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மகளிர் அமைப்புகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 

தீர்ப்பையடுத்து வீட்டைவிட்டு வெளியேறிய கணவர்... உள்ளே நுழைந்த கனகதுர்கா!
தீர்ப்பையடுத்து வீட்டைவிட்டு வெளியேறிய கணவர்... உள்ளே நுழைந்த கனகதுர்கா!

பரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, போலீஸ் பாதுகாப்பில் இருந்துவரும் கனகதுர்கா, தன் கணவரின் வீட்டிலேயே வாழலாம் என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மகளிர் அமைப்புகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 

``சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம்" எனக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 -ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனையடுத்து, அந்த மாநிலஅரசு அனைத்து வயதுடைய பெண்களையும் கோயிலுக்குச் செல்ல அனுமதி அளித்தது. கேரள அரசின் இந்த நடவடிக்கையைத் தேவசம் போர்டு மற்றும் பி.ஜே.பி பிரமுகர்கள் உட்பட அரசியல் கட்சிகள் பல கடுமையாக எதிர்த்தன. அவர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி கனகதுர்கா, பிந்து என்ற இருபெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பாதுகாப்புடன் அனுப்பிவைத்தது கேளர அரசு. கனகதுர்கா மற்றும் பிந்து இருவரும் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தது நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், அவர்கள் இருவரையும் எதிர்த்து போராட்டமும் வெடித்தது. அதோடு, அவர்களை எதிர்த்துத் தாக்குதல் நடத்த முயற்சிகளும் நடந்தன. இதனையடுத்து, கனகதுர்கா வீட்டுக்குக்கூடச் செல்ல முடியாமல், போலீஸ் பாதுகாப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில், பதற்றம் தணிந்து தனது மாமியார் சுமதி வீட்டுக்குச் சென்ற கனக துர்காவை, அவருடைய மாமியார் மற்றும் கணவர் வீட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி வீட்டைவிட்டு விரட்டினர்.  

அதுமட்டுமன்றி, `கோயிலுக்குள் நுழைந்து பாவம் செய்துவிட்டாய். எனவே, பகிரங்கமாகப் பொது இடத்தில் மன்னிப்புக் கேட்டால் மட்டுமே அனுமதி' என்று சொல்லி வீட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்தனர். அதன்பிறகு, `எந்த நிலையிலும் நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன்' என்று கனக துர்கா கூறியிருந்தார். அதோடு, கனக துர்காவை அவருடைய  மாமியார் அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்பட்டது. அந்தத் தாக்குதலில் காயமடைந்த கனகதுர்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, உடன் அவருடைய மாமியாரும், தாமும் தாக்கப்பட்டதாகக் கூறி அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக, கணவர் வீட்டுக்குள் நுழைவதற்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் கனகதுர்கா வழக்குத் தொடர்ந்திருந்தார். அதே போன்று, அவருடைய மாமியாரும், தனது மருமகள் வீட்டுக்குள் நுழையத் தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த நிலையில், குடும்ப வன்முறைச் சட்டத்தின்கீழ் பதிவுச் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நேற்று அதிரடி தீர்ப்பையொன்றை அளித்தது. அதில், ``கனகதுர்கா அவருடைய கணவரின் வீட்டில் வசிப்பதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளது" என்று உத்தரவிட்டிருந்தது.

மேலும், ``நீதிமன்றத் தீர்ப்பை மீறி கனகதுர்காவின் மாமியாரோ அல்லது கணவரோ தடுத்தால் அவர்கள்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து, கனகதுர்காவின் கணவர் கிருஷ்ணமுன்னி குழந்தை மற்றும் தனது அம்மாவுடன் வீட்டைவிட்டு வெளியேறி வீட்டுச் சாவியை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதைத் தொடர்ந்து கனக துர்கா போலீஸ் பாதுகாப்புடன் அவருடைய கணவரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு மற்ற வழக்குகளுக்கு முன் உதாரணம் என்று மகளிர் அமைப்புகள் பாராட்டத் தொடங்கியுள்ளன. அது மட்டுமன்றி, பலத்த எதிர்ப்பு, உரிமைக்கான போராட்டம் எனப் பலவகையில் சவால்களைச் சந்தித்த, கனக துர்காவைப் பலரும் தற்போது பாராட்டிவருகின்றனர். 

இந்த நிலையில் கனகதுர்காவை அவருடைய மாமியார் தாக்கிய வழக்கின் விசாரணை வரும் 11-ம் தேதி நீதிமன்றத்தில் வர உள்ளது. அந்த வழக்கிலும் என்ன தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.