
வெளுத்துவாங்கும் பசும்பொன் பாண்டியன்...
பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில், கீழ் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. உயர் நீதிமன்றக் கிளையில் மார்ச் 4-ம் தேதி நிர்மலாதேவி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “நிர்மலாதேவிக்கு ஜாமீன் கொடுக்க நினைத்தால், அது உயர் நீதிமன்றத்தின் விருப்பம்” என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியது, இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நிர்மலாதேவிக்காக ஏற்கெனவே இரண்டு வழக்கறிஞர்கள் ஆஜராகி வந்த நிலையில், சமீபகாலமாகப் பசும்பொன் பாண்டியன் ஆஜராகத் தொடங்கிய பின்புதான் வழக்கில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. அவரிடம் பேசினோம்.

‘‘நிர்மலாதேவி வழக்கில் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?’’
‘‘என்னுடைய கட்சிக்காரப் பெண் ஒருவர், வழக்கு ஒன்றில் மதுரை பெண்கள் சிறையில் இருந்தபோது, நிர்மலாதேவியுடன் பேசியிருக்கிறார். அப்போதுதான் நிர்மலாதேவி யாருக்காகவோ கருவியாகச் செயல்பட்டிருக்கிறார்; கடைசியில் அனைத்துப் பழிகளையும் அவரே சுமக்கிறார்; சிறைக்குள் வைத்துப் பலவிதங்களில் மிரட்டப்படுகிறார் என்பது எல்லாம் தெரிந்தது. மேலும், தனக்கு வாதாட நம்பகமான வழக்கறிஞர் வேண்டும் என்று என் கட்சிக்காரரிடம் கூறியிருக்கிறார். அப்போது, என் கட்சிக்காரர் என்னைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதற்குப் பின்பு நான் சிறைக்குச் சென்று பார்த்தேன். நடந்த விஷயங்களைக் கேட்டறிந்தேன். நிர்மலாதேவி உட்பட மூன்று பேருடன் இந்த வழக்கை முடிக்க போலீஸ் முயற்சி செய்கிறது. இந்த விவகாரத்துக்குப் பின்னால் உள்ள முக்கியப் புள்ளிகள் மறைக்கப்பட்டிருக் கிறார்கள். இதை அம்பலப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து ஆஜராக முடிவெடுத்தேன்.’’
‘‘அமைச்சர் ஒருவரால் பாதிக்கப்பட்டதாலும், அ.தி.மு.க அரசை விமர்சிக்க வேண்டும் என்கிற விளம்பரத்துக்காகவும்தான் இந்த வழக்கில் ஆஜராகி வருகிறீர்கள் என்று சொல்லப்படுகிறதே?’’
‘‘என் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதை சட்டப்படி சந்தித்துவருகிறேன். அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. நிர்மலாதேவி கேட்டுக்கொண்டதால்தான் அவர் வழக்கில் ஆஜராகிறேன். அவரை ஜாமீனில் வெளியே கொண்டுவந்தால் பல உண்மைகள் வெளிவரும். ஆனால், ஜாமீன் அவருக்கு மறுக்கப்பட்டு வருகிறது. இதே வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், கருப்பசாமிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதுபோல் விரைவில் இவருக்கும் ஜாமீன் கிடைக்கும். அவர் குற்றமே செய்திருந்தாலும், விசாரணைக் கைதியாக இருக்கும் அவரை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசவிடாமல் வாயைப் பொத்தியுள்ளது காவல்துறை. யாருக்காக இவ்வளவும் செய்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. ‘கொலைகாரர்களுக்கே ஜாமீன் வழங்கும்போது, நிர்மலாதேவிக்கு ஏன் ஜாமீன் வழங்கவில்லை’ என்று இதுதொடர்பான மற்றொரு வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். நிர்மலாதேவி வழக்கின் பின்னணியிலுள்ள பெரிய மனிதர்கள் யார் என்பதைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதற்காக, எந்த நெருக்கடி வந்தாலும் சந்திப்பது என்று இந்த வழக்கில் ஆஜராகி வருகிறேன்.’’

‘‘அந்த முக்கியப் புள்ளிகள் யார் என்று நிர்மலாதேவி உங்களிடம் கூறியுள்ளாரா?’’
“எல்லாவற்றையும் கூறியுள்ளார். இப்போதைக்கு அதை வெளியே சொல்வது சரியாக இருக்காது. அவருக்கு ஜாமீன் கிடைக்கட்டும். யார், யார் அந்தப் பெரிய மனிதர்கள் என்பதை தோலுரித்துக் காட்டுவோம். தேர்தல் நேரத்தில் இதுவே முக்கியப் பிரசாரமாக இருக்கும்’’
‘‘ஜெ.தீபா கட்சி தொடங்கியபோது உடன் இருந்தீர்கள். அ.தி.மு.க-வுக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்தீர்கள். பிறகு ஏன் அங்கிருந்து வந்தீர்கள்?’’
‘‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தில் கட்சியை வழி நடத்துகிறேன் என்று ஜெ.தீபா வந்தபோது, அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டு அவருடன் சென்றேன். கட்சி சின்னத்துக்காக நான்தான் வழக்கு தாக்கல் செய்தேன். காரணம், அவரிடம் அப்போது அ.தி.மு.க உறுப்பினர் அட்டைகூட இல்லை. ஆனால், அவரிடம் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசை இருந்ததே தவிர, களத்தில் இறங்கி மக்களுக்குப் பாடுபடக்கூடிய சிந்தனை இல்லை. அதனால், விலகிவிட்டேன்.’’
- செ.சல்மான்.
படம்: வி.சதீஷ்குமார்
யார் இந்த பசும்பொன் பாண்டியன்?
அ.தி.மு.க-வில் தொழிற்சங்க அணியில் மாநில நிர்வாகியாகப் பொறுப்பு வகித்தவர், அதன் பின்பு அமைச்சர் செல்லூர்ராஜு அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசினார் என்ற புகாரில் சிறைக்குச் சென்றார். தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்திலிருந்து வெளியே வந்தவர், ஜெயலலிதா மறைவுக்குப்பின்பு ஜெ.தீபா கட்சி தொடங்க சில வேலைகளைப் பார்த்தார். பின்பு அங்கிருந்து விலகி, அண்ணா திராவிடர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைக் கடந்த வருடம் தொடங்கினார்.