அரசியல்
சமூகம்
Published:Updated:

நிர்மலாதேவி விவகாரம்: கிடைத்தது ஜாமீன்... அழைத்துச்செல்ல ஆளில்லை!

நிர்மலாதேவி விவகாரம்: கிடைத்தது ஜாமீன்... அழைத்துச்செல்ல ஆளில்லை!
பிரீமியம் ஸ்டோரி
News
நிர்மலாதேவி விவகாரம்: கிடைத்தது ஜாமீன்... அழைத்துச்செல்ல ஆளில்லை!

நிர்மலாதேவி விவகாரம்: கிடைத்தது ஜாமீன்... அழைத்துச்செல்ல ஆளில்லை!

மாணவர்களைத் தவறாக வழிநடத்தியதாகக் கைதுசெய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலாதேவிக்கு, 11 மாத சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ஜாமீன் கிடைத்திருக்கிறது. ஜாமீன் கிடைத்தும்கூட சிறையிலிருந்து வெளியில் வரமுடியாத நிலையில் இருக்கிறார், நிர்மலாதேவி.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளுக்குத் தவறாக வழிகாட்டியதாக கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து, சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்ததாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களும் தங்களை ஜாமீனில் விடும்படி, கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வரை மன்றாடிப்பார்த்தனர். இறுதியில் உச்ச நீதிமன்றம் சென்ற பிறகுதான், அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.

நிர்மலாதேவி விவகாரம்: கிடைத்தது ஜாமீன்... அழைத்துச்செல்ல ஆளில்லை!

இந்த நிலையில், ‘நிர்மலாதேவியை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு இல்லை’ என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, அவரது ஜாமீன் மனு, நீதிபதிகள் அறையில் விசாரிக்கப் பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிர்மலாதேவி, இனிமேலும் சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் சாட்சியங்களை மிரட்டவோ, கலைக்கவோ வாய்ப்பில்லை. ஆகவே, அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. வழக்கு விசாரணைக்கு அவர் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும். விசாரணைக்கு இடையூறு ஏற்படும்விதமாக நடந்துகொள்ளக் கூடாது’’ என்று அறிவுறுத்தி, ஜாமீன் வழங்கியுள்ளார் நீதிபதி.

இதுகுறித்து நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனிடம் பேசினோம். “நிர்மலாதேவி வழக்கில் போலீஸாரின் விசாரணை முடிவடைந்துவிட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் எனக் கூறியிருந்தோம். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜாமீன் வழங்கினார். கொலை வழக்கில் சிறைக்குச் சென்றவர்களுக்குக் கூட விரைவாக ஜாமீன் கிடைத்துவிடுகிறது. ஆனால், நிர்மலாதேவியை அற்ப காரணங்களுக்காக 11 மாதங்களுக்கும் மேலாக சிறையில் வைத்திருந்தனர். நிர்மலாதேவியின் ரத்த சம்பந்தம் உள்ள உறவினர்கள் ஜாமீனுக்காகக் கையெழுத்திட வேண்டும். அப்படி யாரும் கையெழுத்திட முன்வரவில்லை. எனவே, ஜாமீன் பெற்றும்கூட சிறையிலிருந்து அவரை வெளியே கொண்டுவரத் தாமதமாகிறது. ஒருசில நாள்களில் நிர்மலாதேவியை வெளியே கொண்டுவந்துவிடுவேன். ஜாமீனில் இருக்கும்போது நிர்மலாதேவி ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது’’ என்றார்.

- அருண் சின்னதுரை, படம்: வி.சதீஷ்குமார்