Published:Updated:

மருமகளை வேலைக்காரி போல் நடத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்

மருமகளை வேலைக்காரி போல் நடத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்
மருமகளை வேலைக்காரி போல் நடத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்
மருமகளை வேலைக்காரி போல் நடத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு கீழ் கோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், மருமகளை வேலைக்காரி போல் நடத்தக் கூடாது என்று கூறியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்னைப் 1996 ஆம் ஆண்டு அமர்ஜீத் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில நாட்களிலேயே குர்னைப்பும், அவரது சகோதரர் மற்றும் பெற்றோரும் அமர்ஜீத் கவுரை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் 1998ஆம் ஆண்டு பூச்சி மருந்தை குடித்து அமர்ஜீத் கவுர் தற்கொலை செய்துக்கொண்டார்.

இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் குர்னைப், அவரது தாயார், சகோதரர் ஆகியோருக்கு கடந்த 2011ஆ-ம் ஆண்டு மாவட்ட கோர்ட் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து பஞ்சாப் ஐகோர்ட்டில் அவர்கள் மேல் முறையீடு செய்தனர்.

ஐகோர்ட்டில் வழக்கு நடைபெறும்போது குர்னைப்பின் தாயார் இறந்துவிட்டார். அவரது சகோதரரை வழக்கில் இருந்து விடுவித்த நீதிபதி, குர்னைப்புக்கு கீழ்கோர்ட் வழங்கிய 7 ஆண்டு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

அந்த தீர்ப்பை எதிர்த்து குர்னைப் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா, கீழ் கோர்ட் குர்னைப்புக்கு வழங்கிய 7 ஆண்டு சிறை தண்டனையை உறுதிப்படுத்தினர்.

இது தொடர்பாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், "ஒரு மருமகளை குடும்பத்தின் உறுப்பினராக கருதி, அன்புடனும் அரவணைப்புடனும் கணவரது குடும்பத்தார் நடத்த வேண்டும். அந்த குடும்பத்தில் மருமகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். அவளை வெளி நபரைப் போலவோ, வேலைக்காரியைப் போலவோ நடத்தக் கூடாது.

புகுந்த வீட்டில் இருந்து எந்நேரம் வெளியேற்றப்பட்டு விடுவோமோ? என்ற எண்ணம் ஒரு மருமகளுக்கு ஏற்படாதபடி அவளை நடத்த வேண்டும். புகுந்த வீட்டில் மருமகளுக்கு அளிக்கப்படும் மரியாதைத்தான் திருமணத்தின் புனிதத்தையும், உரிமையையும் நிலை நாட்டுகிறது. இதுவே, நாகரீகமடைந்த ஒரு சமுதாயத்தின் அடையாளமாக திகழ்ந்து, மணமகளின் கனவுகளை நிறைவேற்ற துணை நிற்கிறது.

ஆனால், சில வேளைகளில் கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களால் மருமகள் வேலைக்காரியைப் போல் கொடுமைப்படுத்துவதால், வரதட்சனை மற்றும் மாமியார் கொடுமை தொடர்பான தற்கொலைகள் பெருகக் காரணமாகி விடுகிறது.

##~~##
இந்த வழக்கை பொருத்தமட்டில், ஆரம்பத்தில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, பின்னர் தற்கொலைக்கு தூண்டியதற்காக மட்டும்தான் கீழ் கோர்ட் தண்டனை வழங்கியுள்ளது.
எனவே, கீழ் கோர்ட் வழங்கிய 7 ஆண்டு சிறை தண்டனையை நாங்களும் உறுதி செய்து தீர்ப்பளிக்கிறோம்" என்று குறிப்பிட்டனர்.