Published:Updated:

`அரசு அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா பறக்கின்றனர்?' - கொந்தளித்த நீதிபதிகள்

`அரசு அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா பறக்கின்றனர்?' - கொந்தளித்த நீதிபதிகள்
`அரசு அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா பறக்கின்றனர்?' - கொந்தளித்த நீதிபதிகள்

`சாலையில் வைக்கப்பட்டுள்ள விதியை மீறிய பேனர்களை அகற்றாமல்,  அரசு அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா பறந்து செல்கிறார்கள்' என சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 


கோவை ஆர்.எஸ் புரத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சிக்காக அமைச்சர் வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோரை வரவேற்க கடந்த ஒரு வாரமாக விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டன. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையிட்டார். இதை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல் குமார் அமர்வு, `விதிகளை மீறிய பேனர்களை அகற்ற கடந்த 8 வருடங்களுக்கு முன்பே நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறபித்துள்ளது அதை அரசு இதுவரை அமல்படுத்தவில்லை' எனக் கடும் கண்டனம் தெரிவித்தனர். `விதி மீறிய பேனர் விவகாரத்தில்,  ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் அரசு செயல்படுமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  `விதிகள் மீறி வைக்கப்படும் பேனர்கள் குறித்து வழக்குகள், அது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் அதிகரித்துக் கொண்டேசெல்கிறது. இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது' என வினவினர்.

''நீதிமன்றம் கேள்வி எழுப்பினால், கேட்டுச் சொல்வதாகத் தெரிவிப்பதற்கு எதற்கு அரசு வழக்கறிஞர்கள் ஊதியம் பெற வேண்டும். விதிமீறல் பேனர்கள் தொடர்பாக வழக்குகளில் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் கால அவகாசம் வாங்கிக் கொண்டே இருந்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இருக்கிறது. அந்த நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தைத் தூண்டுகிறது அரசு'' என நீதிபதிகள் எச்சரித்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம்தான் தண்டனை. ஆனால், நீதிபதிகள் நேரடியாக நடவடிக்கை எடுக்க அளவில்லா அதிகாரம் இருக்கிறது. விதி மீறல் பேனர்களை ஒரு வாரமாக அகற்றவில்லை என்றால், அரசு அதிகாரிகள் சாலையில் செல்கிறார்களா அல்லது ஹெலிகாப்டர் பறக்கிறார்களா என்று கேட்ட நீதிபதிகள், டிராபிக் ராமசாமி வழக்கு மனுவாகத் தாக்கல்செய்ய உத்தரவிட்டனர்.