Published:Updated:

28 ஆண்டுகள்... ஒற்றைக் கையெழுத்து... எழுவர் விடுதலையில் என்ன நடந்தது?

28 ஆண்டுகள்... ஒற்றைக் கையெழுத்து... எழுவர் விடுதலையில் என்ன நடந்தது?
28 ஆண்டுகள்... ஒற்றைக் கையெழுத்து... எழுவர் விடுதலையில் என்ன நடந்தது?

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று ஆயுள் சிறைவாசிகளாக 28 ஆண்டுகள் காலத்தைக் கழித்திருக்கும் எழுவர் விடுதலை இதற்கு மேல் அலைகழிக்க முடியாத இடத்தை எட்டிவிட்டது. ஒவ்வொருவரும் யாரையாவது கைகாட்டி நீதியை தட்டிக் கழிக்கும் அவலச்சூழல் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. விடுவிக்க முடியாததற்கான காரணமாக மத்திய, மாநில அரசுகள் இதுவரை சொல்லி வந்த சட்டத்திற்கு புறம்பான எல்லா சாக்குபோக்குகளும் சட்டத்தாலேயே எதிர்கொள்ளப்பட்டு நிவர்த்தி செய்தாயிற்று. காகிதங்களில் இப்போது எந்த களங்கமும் இல்லை. இதயங்கள் நேர்மையற்று இருப்பதால் மட்டுமே எழுவரின் விடுதலை அதன் இறுதிக் கட்டத்திலும் இழுபறியில் தவிக்கிறது. 

28 ஆண்டுகள்... ஒற்றைக் கையெழுத்து... எழுவர் விடுதலையில் என்ன நடந்தது?

மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது, விடுவிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்புரைத்தது, மத்திய அரசின் அழுத்தங்களுக்கு இடையில் தமிழக அமைச்சரவை விடுதலை தீர்மானத்தை நிறைவேற்றியது என எல்லாத் தடைகளையும் 28 ஆண்டுகளாக ஒவ்வொரு அடியாக நடந்தே கடந்து இப்போது ஆளுநரின் ஒற்றைக் கையெழுத்து வேண்டி அவரது அலமாரியில் உறங்கிக் கொண்டிருக்கின்றன எழுவருக்கான நீதியும் எதிர்காலமும். 

எழுவர் விடுதலை குறித்து பேச்சு வந்தாலே, ’அவர்கள் கொலைகாரர்கள். ஒரு போதும் அவர்களை விடுவிக்கக் கூடாது’ என குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிடுகின்றன. குற்றவாளிகளுக்கும் மனித உரிமைகள் உண்டு என்று வரையறுக்கப்பட்ட பண்பட்ட உலகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை மறந்துவிட்டு, கொலைக்குக் கொலையே தீர்வு, கொடூரத்திற்கு அதைவிட பெரிய கொடூரமே உகந்தது என்று பிதற்றுகின்றனர். பெரிய சதிகளில் சாமானியர்கள் சிக்கிக் கொள்ளும் ராஜீவ் கொலை போன்ற அரச சூழ்ச்சிகளின் இருண்ட பகுதிகள் குறித்த முக்கியமான உண்மைகளை அதனாலேயே அவ்வபோது எடுத்துரைக்க வேண்டியிருக்கிறது. 

28 ஆண்டுகள் திறக்கவே திறக்காத கோப்புகள், கட்டவிழ்க்கப்பட்ட கட்டுக்கதைகள், புதைக்கப்பட்ட உண்மைகளுமாக சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய மர்மமான இவ்வழக்கு ஊடக வெளிச்சத்திற்கு வருவதே அரிதானது. மறந்து கொண்டே இருக்கும் மக்களின் இயல்பை நினைவூட்டுதல் மூலமாக தான் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் இந்த இறுதிக் கட்டத்திலும் ஒரு சிறிய நினைவூட்டல்.

28 ஆண்டுகள்... ஒற்றைக் கையெழுத்து... எழுவர் விடுதலையில் என்ன நடந்தது?

 
ராஜீவ் கொலை வழக்கு என்பது அது தொடங்கிய காலத்திலிருந்தே குளறுபடிகளால் நிறைந்திருக்கிறது. இப்படியொரு குற்றத்திற்கான ஊற்று எந்த மூளையிலிருந்து கிளம்பியது என்பது தொடங்கி, தாணு வெடிக்கச் செய்த பெல்ட் பாமை தயாரித்தவர்கள் யார் என்பது வரை எந்த உண்மையுமே துப்பறியப்படவில்லை. உயர்மட்ட பாதுகாப்பு குழுவின் கண்காணிப்பில் வலம் வரும் ஒரு முன்னாள் பிரதமரை வெடிகுண்டு வைத்துக் கொல்வது என்பது சாமானியர்களால் சாத்தியப்படுத்தக் கூடிய அவ்வளவு எளிதான செயலா என்பதை முதலில் யோசிக்க வேண்டும். நிச்சயமாக இதற்கான சூழ்ச்சி செல்வமும் செல்வாக்கும் பொருந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஆதரவில்லாமல் தீட்டப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. ராஜீவ் கொலையில் வெளிநாட்டு சதி குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன் 1997 இல் சமர்ப்பித்த அறிக்கையே இதற்கு சான்று. 

’இவர்களை எல்லாம் விசாரிக்க வேண்டும்’ என அந்த ஆணையம் சந்திராசாமி, சுப்ரமணியசாமி போன்ற அதிகாரம் கொண்ட பலரது பெயரை அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் சி.பி.ஐ-யால் இவர்கள் யாருமே விசாரிக்கப்படவில்லை. சர்வதேசங்களையும் உலுக்கிய குற்றமான ராஜீவ் கொலையை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் பல முக்கியத் தகவல்கள் அடங்கிய பக்கங்கள் சிறுபிள்ளை விளையாட்டைப் போல தொலைக்கப்பட்டன. விசாரணை வளையத்திற்குள் வராமலேயே சந்திராசாமி உயிரிழந்துவிட்டார். மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான அர்ஜூன் சிங் 1999 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் அத்வானிக்கு சிபிஐ விசாரணை குறித்து பல சந்தேகங்களை எழுப்பி எழுதிய கடிதமும் இதற்கு சான்றாகிறது. 

28 ஆண்டுகள்... ஒற்றைக் கையெழுத்து... எழுவர் விடுதலையில் என்ன நடந்தது?

தனது கடிதத்தில் அவர், சிறப்புப் புலனாய்வுப் பிரிவால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 26 பேரைக் கடந்து பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்புக் குழுமம் (எம்.டி.எம்.ஏ) பிற கோணங்களில் விசாரணையை நடத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அதாவது இலங்கையின் பங்கு, விடுதலைப் புலிகளின் தொடர்பு, சீக்கிய பயங்கரவாதிகளின் தொடர்பு, வெளிநாட்டு அமைப்புகளின் தொடர்பு ஆகியவற்றோடு ஆயுதங்கள் எங்கேயிருந்து எவ்வாறு வாங்கப்பட்டன, பணப் பரிவர்த்தனை எவ்வாறு நடந்தது என பல முக்கியமானக் கேள்விகளை இருபது ஆண்டுகளுக்கு முன்னரே அவர் எழுப்பியுள்ளார். ஆனால் இவற்றை எல்லாம் ரகசியமாக கோப்புகளில் பதுக்கிக் கொண்ட சி.பி.ஐ முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் போன்ற சாமானியர்களை பலியாக்கி விசாரணையை முடித்துக் கொண்டது. ஒரு சர்வதேச சதிக்கு தமிழர்கள் பலியாக்கப்பட்டதைக் கண்டித்து பல்வேறு தமிழ்/திராவிட அமைப்புகளும் மக்களும் தொடக்கம் முதலே போராடி வந்த போதும் சி.பி,ஐ இவ்விசாரணையை எழுவரைத் தாண்டி இம்மியளவு கூட நகர்த்திக் கொண்டு போகவில்லை.   
  
இவ்வழக்கின் முன்னாள் விசாரணை அதிகாரியான தியாகராஜன் பேரறிவாளனின் வாக்குமூலத்தில் செய்த தவறு குறித்து உச்சநீதிமன்றத்திலேயே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். விசாரணைக் குழுவின் தலைமை அதிகாரியான ரஹோத்தமன் தாணு அணிந்திருந்த பெல்ட் வெடிகுண்டை தயாரித்தவர் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை என தனது, ’ராஜீவ் கொலை வழக்கு’ நூலில் பதிவு செய்துள்ளார். ராஜீவ் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியது விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் என சிபிஐ கோப்பை இழுத்து மூடிவிட்ட நிலையில்,  ஊடகவியலாளர் ஃபராஸ் அகமது புலனாய்வு செய்து எழுதிய ’ராஜீவ்காந்தி படுகொலை - ஓர் உள்வேலையா?’ என்ற நூலில், ’’ராஜீவ் கொலையால் பலனடைந்தது விடுதலைப் புலிகள் அல்ல. மாறாக அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாசா மற்றும் இந்தியாவில் பிரதமராக பதவியேற்கவிருந்த நரசிம்மராவ் போன்றவர்களுக்கு பின்னணியில் இருந்தவர்களில் யாரோ தான்’’ என வலுவான ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில் முன் வைக்கிறார்.  

28 ஆண்டுகள்... ஒற்றைக் கையெழுத்து... எழுவர் விடுதலையில் என்ன நடந்தது?

ஆனால் இத்தகைய ஆய்வுகள், வாதங்கள், கோணங்கள் அனைத்தையும் புறக்கணித்து 28 ஆண்டுகள் கொடூரமான தண்டனையை அனுபவித்துவிட்டவர்களை மீண்டும் மீண்டும் வதைக்க நினைப்பது என்ன மாதிரியான உளவியல்? உண்மையான குற்றவாளிகள் சிக்கவில்லை அதனால் கிடைத்தவர்கள் குற்றவாளியக்கப்பட்டனர். இந்திய அரசு மற்றும் நீதி அமைப்புகள் இழைத்த மன்னிக்க முடியாத குற்றமாக இது நீடிக்கையில், ’’மாநில அரசு ஏழு பேரையும் விடுதலை செய்யலாம்’’ என உச்சநீதிமன்றம் இவ்வழக்கை முடித்து வைத்து ஆறுமாத காலம் கடந்துவிட்ட நிலையிலும் கள்ள மவுனம் காப்பதும் இழுத்தடிப்பதும் அலைகழிப்பதும் அநீதியின் உச்சம். 

எழுவரையும் விடுதலை செய்யவே கூடாது என்பவர்கள் - தண்டனையையே அனுபவிக்காத சஞ்சய் தத் மாதிரி - ஏழு பேரும் எளிதாக விடுதலை செய்யப்படுவதைப் போல கற்பனை செய்து கொண்டு பேசுகின்றனர். அப்படியானோர் தமது ஆயுட்காலத்தின் 28 ஆண்டுகளை எப்படியெல்லாம் வாழ்ந்து கடந்து வந்தோம் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒருவேளை அந்த நெடுங்காலத்தின் நீள அகலங்கள் புரியலாம். 

28 ஆண்டுகள்... ஒற்றைக் கையெழுத்து... எழுவர் விடுதலையில் என்ன நடந்தது?

ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வதேரா இருவரும் ஏழு பேரையும் மன்னித்துவிட்டோம் என்றும் அவர்களை விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை எனவும் கூறிவிட்டனர். ஆனால் ஒவ்வொரு முறையும் விடுதலை பற்றிய வாதங்கள் எழும் போதெல்லாம் ராஜீவ் படுகொலையின் போது குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வைத்து விடுதலைக்கு எதிராக பேச வைப்பது வழக்கமாக நடக்கிறது. இதன் பின்னணியில் காவல்துறையின் தூண்டுதல் இருப்பது இவ்வழக்கை நுணுக்கமாக கவனித்து வருகிறவர்களுக்கு தெரியும். ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களைப் போல மும்பை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினர், ’சஞ்சய் தத்தை விடுவிக்கக் கூடாது’ எனக் கேட்பார்களானால் அதை அரசுகளோ நீதிமன்றங்களோ பொதுச் சமூகமோ பொருட்படுத்துமா? தண்டனையை அனுபவித்து முடித்துவிட்ட பின்னர் ஒருவரை விடுதலை செய்யக் கூடாது என வலியுறுத்த பாதிக்கப்பட்டவருக்கு எந்த உரிமையையும் சட்டம் வழங்கவில்லை. ஒவ்வொரு பாதிக்கப்பட்டவரும் இவ்வாறே கோரிக்கை வைக்கத் தொடங்கினால் நிலைமை என்னவாகும்?    

28 ஆண்டுகள்... ஒற்றைக் கையெழுத்து... எழுவர் விடுதலையில் என்ன நடந்தது?

தமிழகத்தைக் கடந்து இவ்வழக்கை பொது மக்கள் தளத்திலோ அறிவுத் தளத்திலோ பெரிதளவில் யாரும் ஆராய்வதில்லை. ’ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் தமிழர்கள் ஏழு பேர்’ என்ற அளவிலேயே பொது புத்தியில் பதிந்திருப்பதால் ஒவ்வொரு முறை விடுதலை குறித்து பேச்சு எழும் போதெல்லாம் ’விடக் கூடாது’ என வெறி காட்டுகின்றனர். எந்த தண்டனைக்கும் கால வரையறை உண்டு, எல்லை உண்டு. ஒரு மனிதன் தனது தவறுகளில் இருந்து மீண்டெழுந்து நல்வாழ்க்கை வாழும் வாய்ப்பைத் தரும் உயரிய நோக்கமே தண்டனைகளின் ஆதாரம். ஒரு பண்பட்ட சமூகம் மனிதர்களை நேர்செய்யும் ஊக்கத்தை கொண்டிருக்குமே தவிர இப்படி அணுஅணுவாக சித்ரவதை  செய்துக் கொல்லத் துடிக்காது. 

ராஜீவ் கொலைக் கைதிகள் ஏழு பேரும் ஆயுள் சிறைவாசிகள். மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த உச்சநீதிமன்றம், கோட்சேவுக்கு வழங்கியதைப் போல - சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்பது போன்ற - எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. ஆனால் அப்போதைய காங்கிரஸ் அரசு தேசத் தந்தை என்றழைக்கப்படும் காந்தியையே சுட்டுக் கொன்ற கோட்சேவிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை உடைத்து அவருக்கு விடுதலையை வழங்கியது. ஆனால் ’ராஜீவ் காந்தியை கொன்றவர்களுக்கு மன்னிப்பே கிடையாது’ என்ற மத்திய அரசின் நிலைப்பாடு கோட்ஷே யார், இந்த எழுவரும் யார் என்ற சமூகப் பின்னணியை ஒப்பிட வைக்கிறது. 

28 ஆண்டுகள்... ஒற்றைக் கையெழுத்து... எழுவர் விடுதலையில் என்ன நடந்தது?

ஆயுள் சிறைவாசிகளின் தண்டனைக் குறைப்புக்கான விதிமுறையானது குற்றத்தின் தன்மையைப் பார்க்காமல் அவர்களின் நன்னடத்தையை கருத்தில் கொள்வது மட்டுமே. இந்த 28 ஆண்டுகளில் இந்த எழுவரும் எவ்வித நடத்தை மீறலிலும் ஈடுபடவில்லை. குறிப்பாக பேரறிவாளன் சிறையில் பல சான்றிதழ் படிப்புகளை முடித்ததோடு சிறைக் கைதிகளுக்கு கல்வி கற்பிப்பது, சிறை நூலகத்தை பராமரிப்பது போன்ற நற்செயல்களிலும் ஈடுபட்டு சிறை அதிகாரிகளிடம் நன்மதிப்பை பெற்றிருக்கிறார். இச்சூழலில் நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட மும்பை குண்டு வெடிப்பு வழக்குக் குற்றவாளி சஞ்சய் தத்திற்கு கிடைத்த ’நன்னடத்தை’ விடுதலை இவர்களுக்கு வழங்கப்படாதது மீண்டும் இவ்விரு தரப்பினரின் சாதியப் பின்னணியை ஒப்பிட வைக்கிறது. ஆக, நமது அரசுகளுக்கு குற்றத்தின் தன்மை ஒரு பொருட்டல்ல. ஒருவர் யாராக, என்ன சாதி மற்றும் சமூக பின்னணியில் பிறக்கிறார் என்பதை வைத்துதான் அவருக்கான தண்டனையும் விடுதலையும் நிர்ணயிக்கப்படுகிறது என எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!

28 ஆண்டுகள்... ஒற்றைக் கையெழுத்து... எழுவர் விடுதலையில் என்ன நடந்தது?

ஏழு பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு 161 சட்டப்பிரிவின் கீழ் முழு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்த நிலையில் தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்து ஆறு மாத காலம் கடந்துவிட்டது. ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து அணுவும் அசையவில்லை. நீதி அமைப்பு விடுதலை செய்யலாம் என உத்தரவிட்ட நிலையில் அரசு நிர்வாகங்கள் தயக்கம் காட்டுவது இவ்வழக்கின் இருண்டப் பக்கங்களின் மீது மீண்டும் கவனத்தைத் திருப்புகிறது. 

28 ஆண்டுகள்... ஒற்றைக் கையெழுத்து... எழுவர் விடுதலையில் என்ன நடந்தது?

28 ஆண்டுகள் போராட்டத்தைக் கடந்து இப்போது ஆளுநரின் ஒற்றைக் கையெழுத்து முட்டுக்கட்டையாக நிற்கிறது. மாநில அரசின் அதிகாரத்தைப் பொறுத்தவரை அமைச்சரவை கூடி முடிவு செய்த விஷயத்தில் ஆளுநரின் ஒப்புதல் என்பது ஒரு சடங்குதான். ஆனால் கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டிய சடங்கு என்பதால் பொறுமை காக்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஆளுநர் அமைச்சரவையை விடவும் அதிகாரம் கொண்டவராக தன்னை கருதிக் கொண்டு இழுத்தடிக்கிறார். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரு முறை விடுதலையை அறிவித்தார். அப்போதெல்லாம் மத்திய அரசு தடையாகவே இருந்தது. வழக்கு நிலுவையில் இருப்பதாக அதற்கு காரணமும் சொன்னது. தற்போது வழக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டதால் மத்திய அரசு தட்டிக் கழிக்க வேறு சாக்குகள் இல்லை. அதனால் ஆளுநரை வைத்து அமைதி ஆட்டம் ஆடுகிறது. 

28 ஆண்டுகள்... ஒற்றைக் கையெழுத்து... எழுவர் விடுதலையில் என்ன நடந்தது?

ஏழு பேர் விடுதலையைப் பொறுத்தவரை இது நிஜமாகவே இறுதிக் கட்டம். பேரறிவாளன் தன் சக்தி அனைத்தையும் திரட்டி துவண்டுவிடாமல் சட்டப் போராட்டத்தைத் தொடர்கிறார். அவரின் அசாத்தியமான மன உறுதி மலைக்க வைக்கிறது. அரசு மற்றும் நீதிமன்றத்தின் எல்லா கதவுகளையும் தட்டி ஓய்ந்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் ஆளுநரின் அமைதியைக் கலைக்கும் வழி தெரியாமல் நீதி கேட்டு ஊர் ஊராகச் சென்று மக்களை சந்திக்கிறார். கடந்த ஜனவரி 24 ஆம் தேதி தொடங்கிய மக்கள் சந்திப்பு கூட்டங்களில் ’’ஆளுநர் தனது மவுனத்தைக் கலைத்து ஏழு பேர் விடுதலைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்’’ என வலியுறுத்தி வருகிறார். 

71 வயதாகிறது அவருக்கு. அற்புதம்மாளுக்கு எப்போதேனும் அவரது வயது நினைவில் வந்திருக்குமா தெரியவில்லை. தன் மகன் விடுதலை என்ற ஒற்றை இலக்கிற்கு முன்னர் இத்தனை ஆண்டுகளில் அனுபவித்த எத்தகைய பாடுகளும் அவரது மனவுறுதியைக் குலைக்கவில்லை. அற்புதம்மாளுக்கு இணையான வேறொருவர் பெண்மணி சமகாலத்திலோ வரலாற்றிலோ இல்லை என உறுதியாகக் கூறலாம். கடந்த ஒன்றரை மாத காலத்தில் 22 மாவட்டங்களை அவர் சுற்றி வந்திருக்கிறார்.   மார்ச் 9 ஆம் தேதியோடு உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து ஆறு மாத காலம் முடிவடைவதை வலியுறுத்தும் விதமாக மனிதச் சங்கிலி போராட்டத்தை அவர் அறிவித்திருக்கிறார். 

எழுவர் விடுதலை என்பது தமிழகத்தின் உணர்வோடு கலந்தது. எந்த குறுக்கு வழிக்கும் போகாமல் நேர்மையான சட்டப் போராட்டத்தின் வழியாக மட்டுமே - இதற்கு மேல் நகர முடியாத இடத்திற்கு - இந்த வழக்கைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் பேரறிவாளன். சூழ்ந்திருந்த அத்தனை சூழ்ச்சிகளையும் தகர்த்து விடுதலையை தவிர வேறு மாற்றில்லை என்ற கட்டத்திற்கு வந்தாயிற்று.  ஆளுநர் கையெழுத்துப் போடாமல் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அது மக்களின் வெறுப்பை மென்மேலும் சம்பாதித்துக் கொள்கிறது.