Published:Updated:

`நடிகை காணாமல் போனதாகப் புகார் வந்தால் கண்டுபிடிப்பீர்களா?’- போலீஸை எச்சரித்த நீதிபதிகள்

விகடன் விமர்சனக்குழு
`நடிகை காணாமல் போனதாகப் புகார் வந்தால் கண்டுபிடிப்பீர்களா?’-  போலீஸை எச்சரித்த நீதிபதிகள்
`நடிகை காணாமல் போனதாகப் புகார் வந்தால் கண்டுபிடிப்பீர்களா?’- போலீஸை எச்சரித்த நீதிபதிகள்

'நடிகைகள்  காணாமல் போனதாகப் புகார் வந்தால் மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? சாதாரண மக்கள் காணாமல் போனதாக வரும் புகார்மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை? என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

`நடிகை காணாமல் போனதாகப் புகார் வந்தால் கண்டுபிடிப்பீர்களா?’-  போலீஸை எச்சரித்த நீதிபதிகள்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி, தனது 19 வயது மகள் கவுசல்யா காணாமல் போனதாக திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  அந்தப் புகார்மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மகேஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணவில்லை. எங்கு சென்றார் என்ற தகவலும் இல்லை. இந்நிலையில், என் மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு, நீதபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மனு குறிந்த விவரங்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

அப்போது நீதிபதிகள், ``நான்கு மாதத்திற்கு முன் புகார் அளித்தும் காவல்துறைக்கு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள்? சாதாரண மக்கள் புகார் அளித்தால் காவல்துறை நடவடிக்கை இப்படித்தான் இருக்குமா? மாதம் ஆனால் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அதற்கான பணியை செய்ய வேண்டும்.  சம்பந்தப்பட்ட காவல்துறை, உறவினர்கள் அல்லது அவர்கள் வீட்டில் இப்படி யாரேனும் காணாமல் போய் இருந்தால் இப்படித்தான் சாதாரணமாக  எடுத்துக்கொள்வார்களா... எனக் கேள்வி எழுப்பினார். நான்கு மாதங்களாக இளம் பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. 

மேலும், திரைப்பட நடிகைகள் காணாமல்போனதாகப் புகார் வந்தால்  மட்டுமே காவல்துறை செயல்படுமா?” என்று கேள்வி எழுப்பினர். மாதா மாதம் சம்பளம் வாங்கும் அதிகாரிகள், உண்மையுடன் செயல் பட வேண்டும் எனவும், இல்லை என்றால் அதற்கான பலன்களை அவர்கள் அனுபவிப்பார்கள் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

இதனையடுத்து நீதிபதிகள், இந்தப் புகார் தொடர்பாக காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணையின் தற்போதைய நிலைதொடர்பான விவரங்களை அறிக்கையாக வரும் திங்கட்கிழமை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

Vikatan