Published:Updated:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: `1,153 பேருக்கு சம்மன்; 813 பேர் ஆஜர்!’ - விசாரணை ஆணையம் தகவல்

அருணா ஜெகதீசன் - ஆணையத்தின் தலைவர்
அருணா ஜெகதீசன் - ஆணையத்தின் தலைவர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற 28 கட்ட விசாரணைகளில் 1,153 பேருக்கு சம்மன் அனுப்பட்டதாகவும், அவர்களில் 813 பேர் விசாரணைக்கு ஆஜரானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின், 27 கட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை கடந்த மே 14-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார் ஆணையத்தின் நீதிபதி அருணா ஜெகதீசன். அந்த அறிக்கையில், இந்தப் போராட்டம் குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளைத் திரும்பப் பெற பரிந்துரை செய்யப்பட்டது.

முதல்வர் ஸ்டாலினிடம் ஆணையத்தின் இடைக்கால விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த நீதிபதி
முதல்வர் ஸ்டாலினிடம் ஆணையத்தின் இடைக்கால விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த நீதிபதி

இதையடுத்து, 2018, மே 22-ம் தேதிக்கு முன்னர் இந்தப் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்குகள் உள்ளிட்ட சில வழக்குகளைத் தவிர ஏனைய வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும், காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்குக் காயங்களும், பலருக்கு மன உளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி அவர்களுக்கு நிவாரணம் வழங்கிடவும் ஆணையம் பரிந்துரைத்தது.

Vikatan

அதன் அடிப்படையில், தகுதியின் அடிப்படையில் பணியிடமும், போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.1 லட்சமும், இது தவிர ஒரு நபர் வேறு வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலேயே உயிரிழந்துவிட்டதால் வாழ்வாதாரம் இழந்து வாடும் அவரின் 72 வயது தாய்க்கு ரூ.2 லட்சமும் நிவாரணத்தொகையும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதையடுத்து, ஒருநபர் ஆணையத்தின் 28-வது கட்ட விசாரணை கடந்த 5-ம் தேதி தூத்துக்குடி கடற்கரைச் சாலையிலுள்ள முகாம் அலுவலகத்தில் தொடங்கி இன்று (15-ம் தேதி) நிறைவுபெற்றது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் வாரிசுக்கு  தகுதி அடிப்படையில் வழங்கப்பட்ட பணி நியமன ஆணை
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் வாரிசுக்கு தகுதி அடிப்படையில் வழங்கப்பட்ட பணி நியமன ஆணை

இந்த விசாரணையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இது தொடர்பாக ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தமிழக அரசிடம் ஒருநபர் ஆணையம், தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதற்கு ஆணையம் தரப்பிலிருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இடைக்கால அறிக்கையில் பரிந்துரைத்த கோரிக்கைகளை அவர் ஏற்று அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வேலையும், நிவாரணமும் வழங்கியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 28-வது கட்ட விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக, துப்பாக்கிச்சூடு நடந்த அன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 102 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களில் 95 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். மொத்தமாக 28 கட்ட விசாரணையையும் சேர்த்து இதுவரை 1,153 பேருக்கு ஆணையம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டதில் 813 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

செய்தியாளர் சந்திப்பில் ஆணையத்தின் நீதிபதி அருள்வடிவேல் சேகர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள்
செய்தியாளர் சந்திப்பில் ஆணையத்தின் நீதிபதி அருள்வடிவேல் சேகர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள்

இதில், 718 பேர் மனுதாரர் தரப்பு சாட்சியம், 94 பேர் காவல்துறை சார்பில் சாட்சியம் அளித்தவர்கள். ஒருவரை மட்டும் ஆணையம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பி விசாரித்துள்ளோம். இதுவரை மொத்தம் 1,150 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. இதில், 1,127 ஆவணங்கள் மனுதாரர் தரப்பிலிருந்தும், காவல்துறை சார்பில் 23 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சுமார் 300 நபர்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.

விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், விசாரணையை முடிக்க கால தாமதம் ஏற்பட்டுவருகிறது. இல்லையெனில் இதற்குள் விசாரணை முழுமையாக நடைபெற்று முழு அறிக்கையும் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டிருக்கும். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆணையத்தின் முன்பு ஆஜரான 95 காவலர்கள் இழப்பீடு கேட்டு அஃபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். அதில், தகுதியானவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு மனுவில் கூறப்பட்டுள்ள தகவலின் உண்மைத்தன்மை அடிப்படையில் தகுதியானவர்களுக்கு ஆணையம் தரப்பிலிருந்து பாகுபாடின்றி நிவாரணங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒருநபர் விசாரணை ஆணையத்தின் முகாம் அலுவலகம்
ஒருநபர் விசாரணை ஆணையத்தின் முகாம் அலுவலகம்

29-வது கட்ட விசாரணை, வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெறவிருக்கிறது. அதில், ஸ்டெர்லைட் குடியிருப்பில் தங்கியிருந்தவர்கள், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களை உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள், தடய அறிவியல் காவலர்கள், அன்றைய தினம் பணியிலிருந்த காவல் கண்காணிப்பாளர்கள், தென் மண்டல காவல்துறை தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு