
மும்பை: அமித்ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த சி.பி.ஐ. நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு சொராபுதீன்ஷேக் என்பவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இது போலி என்கவுண்டர் என்று சர்ச்சை கிளம்பியது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக துளசிராம் பிரஜாபதி என்பவர் சேர்க்கப்பட்டார். 2006 ஆம் ஆண்டில் போலீசார் நடத்திய என் கவுண்டரில் துளசிராம் பிரஜாபதியும் சுடப்பட்டார்.
இந்த என்கவுண்டர் தொடர்பாக அப்போது குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. குஜராத்தில் நடைபெற்ற துளசிராம் பிரஜாபதி என்கவுண்டர் வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமித்ஷா உள்ளிட்டவர்கள் கடந்த மாதம் (மே) 9 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்பத் உத்தரவிட்டிருந்தார். ஆனால், வழக்கு விசாரணையின் போது வழக்கில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அமித்ஷா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி உத்பத், வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருப்பதற்காக எப்போதும் இதுபோல் எந்தவித காரணமும் இல்லாமல் மனு தாக்கல் செய்யப்படுவதாக குறிப்பிட்டார். இந்த வழக்கின் மனு விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் அமித்ஷாவின் மனு மீது தீர்ப்பு வழக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் சி.பி.ஐ. நீதிபதி உத்பத், மும்பையில் இருந்து புனேவுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.