புதுடெல்லி, ஆக.04,2011

சமச்சீர் கல்வி வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. ##~~##
அதேவேளையில், ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் மாணவர்கள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப்புத்தங்களை வழங்கிட தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் அரசு மற்றும் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர்களிடையே 6 வார காலமாக வாதம் நடைபெற்று வந்தது.
பெற்றோர்கள் தரப்பில் இன்று ஆஜரான வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா, "தமிழக அரசின் சட்டத் திருத்தம், சமச்சீர் கல்வியை முழுவதுமாக முடக்கக் கூடியது," என்று வாதிட்டார்.
மேலும், "தமிழக மாணவர்கள் 2 மாத காலமாக புத்தகங்கள் இன்று பள்ளிக்குச் சென்று தவித்து வருகின்றனர். ரூ.200 கோடி மதிப்பிலான புத்தகங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன.
கல்வித் தரத்தை உயர்த்துவதாக கூறி, மாணவர்களின் படிப்பை அரசு பாழ்படுத்தி வருகிறது. மாணவர்களின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு பாடநூல்களை உடனே வழங்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
இந்த வழக்கில் விசாரணை இன்று முடிந்த நிலையில், தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதேநேரத்தில், வரும் 10-ம் தேதிக்குள் மாணவர்கள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப்புத்தங்களை வழங்கிட தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.
முன்னதாக, தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை 1 முதல் 10-ம் வகுப்பு வரை நடப்பு கல்வி ஆண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
உயர் நீதிமன்றத்தின் இந்த் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது.
சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழுள்ள பாடத்திட்டங்கள் தரமற்றவை என்று குறிப்பிட்ட தமிழக அரசு, பழைய பாடத்திட்டமே இந்த ஆண்டு தொடர அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தது.
ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. இதன் தொடர்ச்சியாக, சமச்சீர் கல்வி தொடர்பான விசாரணை 6 வார காலமாக நடைபெற்றது.