Published:Updated:

`வேகமெடுக்கும் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு!' - அக்டோபர் 5 முதல் தினசரி விசாரணை

2ஜி வழக்கு - டெல்லி உயர் நீதிமன்றம்
2ஜி வழக்கு - டெல்லி உயர் நீதிமன்றம்

`2ஜி மேல்முறையீட்டு வழக்கு அக்டோபர் 5-ம் தேதி முதல் தினசரி விசாரிக்கப்படும்’ என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தி.மு.க எம்.பி-க்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுவித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017 டிசம்பரில் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீண்டநாள்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்குகளைக் கடந்த ஆண்டு தினசரி விசாரணை அடிப்படையில் விசாரிக்கத் தொடங்கியது. ஆனால், கொரோனாவால் ஏற்பட்ட அசாதாரண சூழலால், இது தடைப்பட்டிருந்தது.

ஆ.ராசா
ஆ.ராசா

இந்தநிலையில், 2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கின் விசாரணை அக்டோபர் 12-ம் தேதி பட்டியலிடப்பட்டிருக்கும் நிலையில், சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையின் இந்த கோரிக்கைக்கு ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றக் காவலிலிருக்கும் வழக்குகளையே உயர் நீதிமன்றம் அவசர விசாரணைக்கு எடுக்கும் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர்கள் தரப்பு, இந்த வழக்கு விசாரணையை உடனடியாக எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் வாதிட்டனர்.

`சப் இன்ஸ்பெக்டர் டு 2ஜி வழக்கு வரை...!' - ஓய்வுபெற்றார் ஓ.பி.சைனி

சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேத்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை அமைப்புகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின், காணொலி வாயிலாக இந்த வழக்கு விசாரணையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என வாதிட்டார்.

கனிமொழி
கனிமொழி

நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, நவம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறவிருக்கிறார். அவர் ஓய்வுக்கு முன்பாக தீர்ப்பு வழங்கப்படும் நோக்கில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கிலும், பொதுநலன் கருதியும் வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, `2ஜி மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை அக்டோபர் 5-ம் தேதி முதல் தினசரி நடைபெறும்’ என்று உத்தரவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு