அரசியல்
அலசல்
Published:Updated:

“சாட்சிகள் பொய் சொல்லலாம்... சாட்சியங்கள் பொய் சொல்லாது!”

யுவராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
யுவராஜ்

- ஆணவக் கொலையாளி யுவராஜுக்கு ஆயுள் முழுவதும் சிறை....

மூன்று ஏ-4 பேப்பர்களை செந்தில் கடையிலும், இரண்டு பேனாக்களை அருகிலிருந்த குமார் கடையிலும் வாங்கிக்கொண்டு அருண் நின்றபோது, மகேந்திரா ஜீப்பில் வந்த யுவராஜ் அவரையும் ஏற்றிக்கொண்டார். கோவை செல்லும் நான்குவழிச் சாலையில் ஒரு கி.மீ தூரம் சென்றதும், அருணிடமிருந்து பேப்பர், பேனாவை வாங்கி கோகுல்ராஜின் கண்களில் கட்டியிருந்த துணியை அகற்றி, தற்கொலைக் கடிதத்தை எழுதச் சொல்கிறார் எதிரி யுவராஜ்.

கோகுல்ராஜின் கண்களில் கட்டியிருந்த துணியைக் கழற்றி, அதை அவரின் கழுத்தில் சுற்றி நெரித்தார் யுவராஜ். அப்போது மயங்கி ரயில்பாதையில் விழுந்த கோகுல்ராஜை, தன் இடுப்பில் வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து கழுத்தில் பலமுறை குத்தி தலையைத் துண்டித்து யுவராஜ் கொலை செய்தார்.’’


- கடந்த 2015-ல் தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி-யின் இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகள் இவை. இந்த நிலையில்தான் மார்ச் 8-ம் தேதி, பிரதான குற்றவாளியான யுவராஜ் உள்ளிட்ட பத்து பேருக்கு, சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது மதுரையிலுள்ள பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றம்.

கோகுல்ராஜ்
கோகுல்ராஜ்

இந்தத் தீர்ப்பை பெற்றுத் தந்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பவானி பா.மோகன். அவரிடம் பேசியபோது இந்த வழக்கு கடந்துவந்த பாதையை விளக்கினார்... ‘‘சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த கோகுல்ராஜ், பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், 23.6.2015 அன்று காலை மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த தன் தோழியுடன் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்ற அமைப்பை நடத்திக்கொண்டிருந்த யுவராஜ், தன் ஆட்களுடன் கோயிலுக்கு வந்து இருவரையும் மிரட்டி விசாரித்திருக்கிறார். பின்பு அந்தப் பெண்ணிடம் முகவரி கேட்டு, தன் ஆட்கள் மூலம் அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்தார். கோகுல்ராஜின் கண்ணைக் கட்டி, நம்பர் பிளேட்டை மாற்றிய ஜீப்பில் அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கி சித்ரவதை செய்தார். பிறகு கொடூரமாகக் கழுத்தை வெட்டிக் கொலை செய்து, ரயில்வே ட்ராக்கில் போட்டு, கோகுல்ராஜ் தற்கொலை செய்துகொண்டதுபோல் கடிதம் தயார்செய்து, ஆதாரங்களை மறைத்துச் சென்றார்கள்.

மகனைக் காணாமல் கோகுல்ராஜின் தாய் சித்ரா தேடியபோது, சம்பந்தப்பட்ட பெண், கோகுல்ராஜை சிலர் ஜீப்பில் அழைத்துச்சென்றதைக் கூறியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து ‘கோகுல்ராஜைக் காணவில்லை’ என்று திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே, 24.6.2015 அன்று ‘மேன் மிஸ்ஸிங்’ வழக்கு பதியப்பட்டது. அதே நாளில் ரயில்வே பாதையில் கிடந்த கோகுல்ராஜின் உடலைப் பார்த்த ரயில்வே போலீஸார், சட்டையிலிருந்த ஐ.டி கார்டு மூலம் சித்ராவுக்குத் தகவல் சொன்னார்கள்.

“சாட்சிகள் பொய் சொல்லலாம்... சாட்சியங்கள் பொய் சொல்லாது!”

அதன் பின்பு வழக்கறிஞர் பார்த்திபன் இந்த வழக்கை முன்னெடுத்தார். வி.சி.க உள்ளிட்ட கட்சிகளும், அமைப்புகளும் போராட்டம் நடத்தின. உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு வல்லுநர்களைக்கொண்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டதில், கோகுல்ராஜ் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. யுவராஜ் தரப்பினர் கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்தது உறுதியானதால், டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தலைமையிலான டீம் வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளைக் கைதுசெய்தது. யுவராஜ் 100 நாள்களுக்கு மேலாகத் தலைமறைவாக இருந்தார். இடையில் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், டி.எஸ்.பி ஸ்டாலின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 17 பேர்மீது வழக்கு பதிவுசெய்தார். இவர்களுக்கு உதவிசெய்த ஜோதிமணி என்ற பெண் இறந்துவிட்டார். தலைமறைவாக இருந்த அமுதரசு என்பவரின் வழக்கு மட்டும் நாமக்கல் நீதிமன்றத்தில் தனியாக நடந்துவருகிறது.

பா.மோகன்
பா.மோகன்

நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் 72 சாட்சிகள் விசாரிக்கப்பட்டதில், பல முக்கியச் சாட்சிகள் பிறழ் சாட்சியாகிவிட்டன. அது சரியாகப்படாததால், உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு மீதி 15 பேர் மீதான வழக்கு மதுரைக்கு மாற்றப்பட்டது. இங்கும் ஆரம்பத்தில் நீதிபதிகள் இல்லாமல் தாமதமானது. மொத்தம் 106 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. 500 சான்று ஆவணங்கள் வழக்கில் சேர்க்கப்பட்டன. 74 சான்று பொருள்கள் மார்க் செய்யப்பட்டன’’ என்றவர், தற்போதைய தீர்ப்புக்கான அம்சங்களையும் விவரித்தார்...

‘‘சாட்சிகள் பொய் சொல்லலாம். சாட்சியங்கள் பொய் சொல்லாது. இந்த வழக்கில் எலெக்ட்ரானிக் சாட்சியங்கள் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டன. குறிப்பாக, கோயிலிலிருந்த சிசிடிவி பதிவுகள் வழக்குக்கு முக்கிய ஆதாரங்களாக அமைந்தன. சிசிடிவி ஃபுட்டேஜ்கள் ஃபாரன்சிக் ஆய்வுக்கு அனுப்பி உறுதிசெய்யப்பட்டு ரிப்போர்ட் பெறப்பட்டது. அதில் வரும் உருவங்களை நவீன தொழில்நுட்பம் மூலம் வரைந்து, கைதுசெய்யப்பட்டவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நிரூபித்தார்கள். டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டது பற்றி தனியார் சேனல் ஒன்று விவாதம் நடத்தியபோது, அப்போது தலைமறைவாக இருந்த யுவராஜ் அதில் ஆன்லைன் காணொலி மூலம் கலந்துகொண்டு, ‘ஆமாம், நான் மலைக்குப் போனேன். அங்கு கோகுல்ராஜ் - சுவாதி பேசிக்கொள்வதைப் பார்த்தேன், விசாரித்தேன். மொபைல் போனை அவர்களாகத்தான் கொடுத்தார்கள்’ என்று ஒப்புக்கொண்டார். இதுவும் முக்கிய ஆதாரமாக அமைந்தது.

சித்ரா
சித்ரா

கோகுல்ராஜ் பட்டியல் இனத்தவர் என்பதால், வன்மத்துடன் ஒன்பது மணி நேரம் சித்ரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார்கள். கொலை, வன்கொடுமை, கூட்டுச்சதி, ஆட்கடத்தல் ஆகிய பிரிவுகளில் சாகும்வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடங்கிய ஆரம்ப காலங்களில் பல இடையூறுகள் ஏற்பட்டன. நீதிபதிகள் வரிசையாக மாற்றப்பட்டார்கள். நாமக்கல்லிலிருந்து வழக்கு மதுரைக்கு மாற்றப்பட்ட பின்பு, விரைவாக நடந்தது. தற்போது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட ஐந்து பேருக்கும் தண்டனை கிடைக்க அப்பீல் செய்வோம்’’ என்றார்.

கண்ணீர் ததும்ப நின்றுகொண்டிருந்த கோகுல்ராஜின் தாய் சித்ரா நம்மிடம், ‘‘என் மகன் கொல்லப்பட்டதற்கு அப்புறம் எங்க குடும்பமே நிலைகுலைஞ்சு போச்சு. இந்தக் கொடுமையைச் செஞ்சவங்களுக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும்னு நெனைச்சேன். பரவாயில்லை, இப்ப கொடுத்ததே பெரிய தண்டனைதான்... விடுதலை செய்யப்பட்ட அஞ்சு பேருக்கும் தண்டனை கொடுக்கணும்’’ என்றார்.

தண்டனை பெற்று சிறைக்குச் செல்ல போலீஸ் வாகனத்தில் ஏறிய யுவராஜ், ‘‘இது ஜோடிக்கப்பட்ட வழக்கு. மேல்முறையீடு செய்து நீதி பெறுவேன்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

எப்போதும் நீதி மட்டுமே வெல்ல வேண்டும்!

*****

விஷ்ணுபிரியா
விஷ்ணுபிரியா

விஷ்ணுபிரியா வழக்கு என்னவாகும்?

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட டி.எஸ்.பி விஷ்ணுபிரியா, 2015 செப்டம்பர் 18-ம் தேதி திருச்செங்கோடு போலீஸ் குடியிருப்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். விஷ்ணுபிரியா வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்துவந்த நிலையில், “கோகுல்ராஜ் கொலை வழக்கில், உயரதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால்தான் விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டார்” என்று கீழக்கரை டி.எஸ்.பி மகேஸ்வரி குற்றம்சாட்டியதால் வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. ஆனால், சி.பி.ஐ போலீஸாரோ, ‘விஷ்ணுபிரியா தற்கொலையில் யாருடைய தூண்டுதலும் இல்லை’ என்று அறிவிக்கவே, வழக்கை முடித்துவைத்தது கோவை சிறப்பு நீதி மன்றம். தொடர்ந்து விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, மறுவிசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு வெளியாகியிருக்கும் நிலையில், மார்ச் 11-ம் தேதி விஷ்ணுபிரியாவின் தந்தை தாக்கல் செய்திருக்கும் மனுவும் விசாரணைக்கு வருகிறது.

ரவி
ரவி

இது குறித்து நம்மிடம் பேசிய விஷ்ணு பிரியாவின் தந்தை ரவி, “இந்தத் தீர்ப்புக்கு முக்கியக் காரணம் விஷ்ணுபிரியா சேகரித்த வீடியோ காட்சிகளும், நீதிபதி முன்பு அவர் அளித்த வாக்குமூலமும்தான். அவருக்கு மன அழுத்தம் ஏற்படக் காரணமும் அதுதான். விஷ்ணுபிரியா நீதியைக் காப்பாற்றப் போராடியபோது, எஸ்.பி செந்தில்குமார் அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். வாட்ஸ்அப்பில் அவர் பேசியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.