Published:Updated:

வீடியோ கான்ஃபரன்ஸ் வசதி இல்லாத 40% சிறைகள்; தமிழகத்தின் நிலை?! ஐ.ஜே.ஆர் 2020 அறிக்கை சொல்வதென்ன?

ஆய்வறிக்கை
ஆய்வறிக்கை

நாட்டின் 36 மாநிலங்களில், 10 மாநிலங்களில் மட்டுமே அனைத்துc சிறைகளிலும் வீடியோ கான்ஃபரன்ஸிங் வசதிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு, டிசம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இன்றைய சூழலில் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. வைரஸ் தொற்று குறைவு மற்றும் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததால், அதில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் நோக்கில் இந்தியாவிலுள்ள நீதிமன்றங்கள் அனைத்திலும் வீடியோ கான்ஃபரன்ஸிங் (Video Conferencing) மூலம் விர்ச்சுவலாக வழக்கு விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்கப்பட்டுவருகிறது.

கோவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்கும் அதேவேளையில், குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு மாற்றாக, வீடியோ கான்ஃபரன்ஸிங்கை அனுமதிக்கும் குற்றவியல் நடைமுறை தற்போதுதான் அமலுக்கு வந்திருக்கிறது.

வீடியோ கான்ஃபரன்ஸிங்
வீடியோ கான்ஃபரன்ஸிங்

உலக நாடுகளைப்போலவே, இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் சமூக விலகலைக் கடைபிடிப்பதற்காக வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. கோவிட்-19, அவசரகாலத்தைச் சமாளிக்க இந்தியாவின் நீதி அமைப்புகளுக்கு முழுத்திறன் இல்லை என்று இந்திய நீதி அறிக்கை 2020 (India Justice Report - 2020) தெரிவித்திருக்கிறது.

கடந்த மார்ச் மாதம், கோவிட்-19 காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்குக்கு முன்பு இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகச் சொல்கிறது ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருக்கும் டாடா டிரஸ்ட். காவல்துறை, நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் சட்ட உதவித் துறைகளின் துணைகொண்டு, 18 பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்கள், ஏழு சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 53 காரணிகளின் அடிப்படையில் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளின் செயல்பாடுகள் மதிப்பிடப்பட்டிருக்கின்றன.

அந்த அறிக்கையில், `இந்தியச் சிறைகளில் வீடியோ கான்ஃபரன்ஸிங் வசதிகள் போதிய அளவில் இல்லை. தொற்றுநோய் காரணமாக இத்தகைய தொழில்நுட்பங்களை அதிக அளவில் நம்பியிருக்க வேண்டிய நேரத்தில், 36 மாநிலங்களில் 10 மாநிலங்களில் மட்டுமே அனைத்துச் சிறைகளிலும் வீடியோ கான்ஃபரன்ஸிங் வசதிகள் உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், 18 பெரிய மாநிலங்களில், நீதி வழங்குவதில் சிறந்த மாநிலமாக மகாராஷ்டிராவும், நீதியை வழங்குவதில் மோசமான மாநிலமாக உத்தரப்பிரதேசமும் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பணியாளர்களிடையே சாதி வேறுபாடு அதிகமாகக் காணப்படும் மாநிலங்கள் பட்டியலில் கர்நாடகா முதலிடத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. ​​ஜம்மு-காஷ்மீரில் காவல் படையில் பரிந்துரைக்கப்பட்ட 33% பெண்களின் பங்கு என்ற இலக்கை அடைய 428 ஆண்டுகள் வரை ஆகும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பதற்றமான சூழல் மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாக உலக அளவில் அமைதி வீழ்ச்சியடைந்திருக்கும் நேரத்தில், உலகளாவிய அமைதிக் குறியீட்டில் 2020 (Global Peace Index 2020) பட்டியலிடப்பட்ட 163 நாடுகளில் இந்தியா 25-வது இடத்தில் இருக்கிறது. பூட்டான் 19-வது இடத்திலும், நேபாளம் 73-வது இடத்திலும், இலங்கை 77 வது இடத்திலும், வங்கதேசம் 97-வது இடத்திலும் இருக்கின்றன.

இந்திய நீதி அறிக்கை 2020-ன் (ஐ.ஜே.ஆர் 2020) படி, ஹரியானா மற்றும் உத்தரகாண்ட் இரண்டு மாநிலங்களில் மட்டுமே அனைத்துச் சிறைகளிலும் வீடியோ கான்ஃபரன்ஸிங் வசதிகள் இருக்கின்றன. இதுவே, கர்நாடகாவில் 31 சதவிகிதம், மேற்கு வங்கத்தில் 32 சதவிகிதம், ராஜஸ்தானில் 38 சதவிகிதம் மற்றும் கேரளாவில் 42 சதவிகித சிறைகளில் வீடியோ கான்ஃபரன்ஸிங் வசதிகள் உள்ளன. பெரிய மாநிலங்களைப் பொறுத்தவரை ஒன்பது சதவிகிதத்துடன் தமிழகம் இந்தப் பட்டியலில் மோசமான இடத்தில் இருப்பதாகச் சொல்கிறது ஐ.ஜே.ஆர் 2020 அறிக்கை.

வீடியோ கான்ஃபரன்ஸிங்
வீடியோ கான்ஃபரன்ஸிங்

அருணாச்சலப்பிரதேசம், கோவா, இமாச்சலப்பிரதேசம், அஸ்ஸாம், சண்டிகர், தாத்ரா & நாகர் ஹவேலி, டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலுள்ள சிறைகளில் வீடியோ கான்ஃபரன்ஸிங் வசதிகள் இருக்கின்றன. லட்சத்தீவுகள், மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சிறைகளில் வீடியோ கான்ஃபரன்ஸிங் வசதிகள் ஏதும் இல்லை.

ஆன்லைன் போர்ட்டல்

தனிநபர் புகார்களைப் பதிவு செய்தல் மற்றும் கண்காணித்தல், மாயமான வாகனங்கள், இழந்த சொத்துகளைப் பற்றிய புகாரளித்தல், சரிபார்ப்புகள் மற்றும் அனுமதிகளுக்கு விண்ணப்பித்தல் போன்ற ஒன்பது அடிப்படைச் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக்கொண்ட ஆன்லைன் போர்ட்டல் இணையதளங்கள் பல மாநிலங்களில் பயனாளர்கள் பயன்படுத்த லகுவாக இல்லை என்கிறது இந்த அறிக்கை. பீகாரைத் தவிர மற்ற மாநிலங்களில் இந்த இணையதளங்கள் இருந்தாலும், அவற்றில் பல சரிவர இயங்கவில்லை; உள்ளூர் மொழிகளில் வசதிகள் இல்லை.

அரசின் இது போன்ற இணைய சேவைகளின் முழுமை, ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் உள்ளூர் மொழிகளிலும் கிடைத்தல் அடிப்படையில் பஞ்சாப் மற்றும் இமாச்சலப்பிரதேச மாநில இணையதளங்கள் 10 புள்ளிகளில் ஒன்பது புள்ளிகளைப் பெற்றிருக்கின்றன.

2020, ஜூன் முதல் அக்டோபர் வரை ஐந்து மாதங்களுக்கு மேலாக மீண்டும் மீண்டும் முயன்றபோதிலும், ​​அருணாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், மிசோரம், சிக்கிம், திரிபுரா மற்றும் லட்சத்தீவு ஆகிய ஆறு மாநில இணையதளங்கள் இயங்கவில்லை என்கிறது அறிக்கை.

மேலும், சட்ட உதவி அமைப்புகளில் மனித வளப் பற்றாக்குறை, சட்ட உதவி கிடைப்பது பற்றிய குறைந்த விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு இல்லாமை ஆகியவை பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவியை அணுகுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு