Published:Updated:

ஒற்றை, இரட்டைப்படை வாகன நடைமுறை: நிறுத்த சொல்லும் டெல்லி நீதிமன்றம்!

விகடன் விமர்சனக்குழு
ஒற்றை, இரட்டைப்படை வாகன நடைமுறை: நிறுத்த சொல்லும் டெல்லி நீதிமன்றம்!
ஒற்றை, இரட்டைப்படை வாகன நடைமுறை: நிறுத்த சொல்லும் டெல்லி நீதிமன்றம்!

புதுடெல்லி: காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன நடைமுறை சோதனை முயற்சி திட்டத்தை ஒருவார காலத்திலேயே முடித்துக்கொள்ள முடியாதா? என டெல்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

ஒற்றை, இரட்டைப்படை வாகன நடைமுறை: நிறுத்த சொல்லும் டெல்லி நீதிமன்றம்!

டெல்லியில் அளவுக்கு அதிகமாக உள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லி மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக ஒற்றைப்படை எண்கள் கொண்ட கார்கள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்கள் இரட்டைப்படை தேதிகளிலும் சாலையில் செல்ல அனுமதிக்கும் திட்டத்தை 15 நாட்களுக்கு டெல்லி அரசு அறிமுகப்படுத்தியது.
 
சோதனை முயற்சியாக மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்ட இந்த திட்டம் கடந்த 1ம் தேதி முதல் தொடங்கியது. வருகிற 15-ம்தேதி வரை 15 நாட்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்திருந்தது. 

இந்நிலையில், டெல்லி அரசின் இந்த சோதனை முயற்சியை எதிர்த்து வழக்கறிஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை ஒரே வழக்காக டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வருகின்றது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான டெல்லி அரசின் வழக்கறிஞரிடம் நீதிபதிகள் சில கேள்விகளை முன்வைத்தனர்.

"ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன வரிசைமுறை தொடர்பாக டெல்லி அரசு அறிவித்த சோதனை முயற்சியிலான திட்டத்தை ஒருவாரம் மட்டுமே நடைமுறைப்படுத்த நாங்கள் அனுமதி அளித்திருந்தோம். இந்த திட்டத்தின் பலனாக, காற்று மாசின் அளவு குறைந்துள்ளதா? என்பதை அறிந்துகொள்ள உங்களுக்கு இந்த ஆறுநாட்கள் போதாதா? இந்த ஆறுநாட்களில் தேவையான புள்ளிவிபரங்களை அரசு திரட்டி இருக்க வேண்டும்.

காற்று மாசு குறைந்துள்ளதா இல்லையா? என்பது தொடர்பாக முடிவுசெய்ய இந்த ஆறுநாள் அவகாசம் போதுமானது என்றே நாங்கள் கருதுகிறோம். இந்த திட்டத்தால் அதிகமான பொதுமக்களுக்கு நடைமுறையில் பல சிரமங்கள் இருப்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அரசின் கொள்கைசார்ந்த முடிவுகளில் தலையிட இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. எனினும், பாதிக்கப்படும் மக்கள் நீதிமன்றத்தின் கதவை தட்டுவதையும் இந்த அரசு சிந்தித்து பார்க்க வேண்டும். போதுமான பொது போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலையில் இந்த ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன வரிசைமுறையை 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமா? என்பது தொடர்பாக அரசு சிந்தித்துப் பார்த்து, முடிவு செய்ய வேண்டும்" என அறிவுறுத்திய நீதிபதிகள், இவ்வழக்கின் மறுவிசாரணையை வருகிற 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.