சென்னை: சென்னை உயர் நீதிமன்றத் தலையீட்டால் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் உயிர் பிழைத்திருக்கிறது. ஆனாலும் உருக்குலைந்திருக்கிறது என்ற உண்மையை மறைப்பதற்கில்லை என்று கருணாநிதி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை உயர் நீதிமன்றத் தலையீட்டினால் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் உயிர் பிழைத்திருக்கிறது; எனினும் உருக்குலைந்திருக்கிறது என்ற உண்மையினை மறைப்பதற்கில்லை.
ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான அண்ணா நூற்றாண்டு நூலகம் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டு, திறக்கப்பட்டது என்பதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை. மேலும் அதனை குழந்தைகள் மருத்துவமனையாகவும், கல்யாண மண்டபமாகவும் மாற்றிட மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் நீதிமன்றக் கண்டனங்களாலும், தமிழறிஞர்கள், மாணவர்களின் எதிர்ப்பாலும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நூலகத்திற்குத் தேவையான புத்தகங்களை வாங்காமலும், உள்கட்டமைப்பு வசதிகளைப் பராமரிக்காமலும் தொடர்ந்து அ.தி.மு.க. அரசு புறக்கணித்து வருகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோன்மணி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா ஆகியோரடங்கிய முதன்மை அமர்வு விசாரித்தது.
29-10-2015 அன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு நூலகம் பராமரிக்கப்படுகிறதா என நீதிமன்ற ஆணையாளர்கள் 29-11-2015 மற்றும் 2-1-2016 ஆகிய நாட்களில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் 8-1-2016 அன்றும் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதாடினார்.
ஆணையாளர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட குறைகளையும், மனுதாரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குறிப்புரையையும், மூத்த வழக்கறிஞர் வில்சனின் வாதத்தையும் பதிவு செய்த தலைமை நீதிபதி; நீதிமன்ற உத்தரவினை முழுமையாகச் செயல்படுத்தி, நூலகத்தினை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டு அதற்காகத் தமிழக அரசிற்கு வரும் பிப்ரவரி 26-ம் தேதி வரை காலக்கெடு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சி தொடங்கியவுடனேயே பேரறிஞர் அண்ணா நினைவு நூலகத்தை ஜெயலலிதா எழும்பூரில் உள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றப்போவதாகவும், தற்போதுள்ள கட்டிடத்தில் குழந்தைகள் மருத்துவமனை தொடங்கப்போவதாகவும் அறிவித்தார். அதுகுறித்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு அப்போதே, “இப்படி ஒரு அருமையான, நவீன வசதி கொண்ட, நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்ட சிறந்த நூலகத்தை இடமாற்றம் செய்வது ஏன்?. மருத்துவமனை கட்டுவதென்றால் மெரினா கடற்கரையில் கட்டலாமே. அரசின் இந்த முடிவு உள்நோக்கம் கொண்டது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்ட பிறகு, வேறு வழியில்லாமல் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் தி.மு.க. அரசு தொடங்கிய இடத்திலேயே நடந்து வருகிறது. ஆனால் நூலகத்திற்குச் சென்று படிப்போர் முழுமையாகப் பயன்படுத்த முடியாத அளவிற்கு, முறையாக நடத்தாமல், ஏனோதானோவென்று அலட்சிய உணர்வோடும் பிடிவாதத்தோடும் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதால்தான், 8-1-2016 அன்று சென்னை உயர் நீதிமன்றம் இறுதி எச்சரிக்கையாக உத்தரவினைப் பிறப்பித்திருக்கிறது.
அறிஞர் அண்ணாவின் பெயரால் தி.மு.க. ஆட்சியில் நூலகம் ஒன்றை நான் கட்டித் திறந்து வைத்தேன் என்ற அடங்காத அழுக்காறு காரணமாக, ஜெயலலிதா எப்படியெல்லாம் சிறுமை எண்ணத்தோடு அதைச் சீர்குலைத்துச் சிதைத்திடத் தொடர்ந்து முயற்சித்து வருகிறார் என்பதையும்; உயர் நீதிமன்றம் மட்டும் தலையிடாது இருந்திருக்குமானால் அண்ணாவைப் பற்றிய நினைவோடு நாம் கண்ட கனவு எப்படி எல்லாம் சின்னாபின்னமாகப் போயிருக்கும் என்பதையும் எண்ணிப் பார்த்தால், நெஞ்சு பொறுக்குதில்லையே?" என்று கூறியுள்ளார்.