விஷமாகிப் போன வெளிநாட்டு மாப்பிள்ளை !
சுதா ராமலிங்கம்
ஓவியம்: பாரதிராஜா
முன்குறிப்பு: இந்தக் கட்டுரையில் வரும் பெண்ணின் நலன் கருதி, சம்பந்தப்பட்ட அனைவரின் பெயர்கள் மற்றும் ஊர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

##~## |
மருத்துவக் கல்லூரி மாணவி கவிதா... அன்பானவள், அறிவானவள், அதிர்ந்து பேசத் தெரியாதவள். அம்மா, அப்பா இருவரும் டாக்டர்கள். இங்கே மருத்துவக் கல்வியை முடித்த கவிதா, வெளிநாட்டில் உயர்கல்வியையும் முடிக்க, வரன் தேடினார்கள். ''அசைவம் சாப்பிடாதவரா பாருங்க'' என்பதுதான் கவிதாவின் ஒரே வேண்டுகோள்.
வந்தது, இங்கிலாந்தில் டாக்டராக பிராக்டீஸ் செய்யும் வரன்... 'எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர். குறிப்பாக... நான்-வெஜ் சாப்பிடாதவர்' என்றபடி. கவிதாவுக்கும் காமேஷ§க்கும் சுபமுகூர்த்த நாளில் திருமணம், ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷனும் முடிந்தது!
பிரமாண்ட திருமணச் செலவு, 200 சவரன் நகை, பத்து லட்சம் பணம் என்று புகுந்த வீட்டில் நுழைந்த கவிதாவுக்கு காத்திருந்த முதல் ஷாக்... மொத்தக் குடும்பமும் நான்-வெஜ் பிரியர்கள்! ''கல்யாணம்னா ஆயிரம் பொய் சொல்லலாம். ஒண்ணுதானே சொல்லியிருக்கோம்'' என்று விநோத விளக்கம் கிடைத்தது. கலங்கினாலும், கணவரின் அன்பு எல்லா ஏமாற்றங்களையும் ஈடுசெய்யும் என்று வாழ்க்கையைத் தொடங்கியவளுக்கு, காமேஷின் பாராமுகமே பரிசாகக் கிடைத்தது. விடுமுறை முடிந்து இங்கிலாந்து கிளம்பியபோது, தன்னையும் விரைவில் அழைத்துக் கொள்ளும்படி கவிதா அழ, 'பார்க்கலாம்’ என்றபடி ஃப்ளைட் ஏறினான்!
ஆரம்பித்தது புகுந்த வீட்டினரின் அதகளம். முதல் கட்டமாக அவளுக்குப் போட்ட நகைகள், பணம் அத்தனையும் கைப்பற்றினர். செல் போனை பறித்துக் கொண்டாள் நாத்தனார். அதனால் பெற்றோரிடம்கூட பேச முடியவில்லை. காமேஷ§ம் கவிதாவைத் தொடர்பு கொள்வதில்லை. ஆனால், அம்மாவிடம் மட்டும் ரெகுலராக தொலைபேசினான். ஒரு நாள் கெஞ்சிக் கூத்தாடி தானும் காமேஷிடம் பேசினாள். அழுதழுது, அம்மா வீட்டுக்குச் செல்ல அனுமதி வாங்கி, ஆசையுடன் சென்றாள். போன இடத்தில் தவறி விழுந்து எலும்பு முறிய, ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனாள். புகுந்த வீட்டிலிருந்து யாரும் எட்டிப் பார்க்கவில்லை. கலக்கமடைந்து, கால்கட்டு பிரிக்கும் முன்பே காமேஷ் வீட்டுக்கு அனுப்பினர் பெற்றோர்.
அடுத்து, ''தீபாவளிக்கு சீராக வெள்ளிப் பாத்திரங்கள் வேண்டும்’' என்று அதிரடி கோரிக்கை வர, ஆசையுடன் வாங்கிக் கொண்டு வந்தனர் கவிதாவின் பெற்றோர். சீரை மட்டும் வாங்கிக் கொண்டு வாசலோடு திருப்பி அனுப்பினார் மாமியார். 'பெண்ணுக்காக எந்த அவமானத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டும்' என்பதுதானே நம் பெற்றோரின் குணமும் மனமுமாக இங்கே வளர்த்தெடுக்கப் பட்டிருக்கிறது!
துயரங்களுடனே நாட்கள் நகர, ஒருவழியாக அவளுக்கு விசா கிடைத்து லண்டனில் இறங்கிய போது, கவிதாவை அழைக்க கணவன் வரவில்லை. தானே வீடு போய் சேர்ந்தவளுக்கு, முதல் நாளிலி ருந்தே ஆரம்பித்தன கொடுமைகள். தினம் அடி, உதை, சிகரெட்டால் உடல் முழுக்க சூடு, விஷமான கெட்ட வார்த்தைகள், வெளியுலகத் தொடர்பிலிருந்து துண்டிப்பு, வீட்டுச்சிறை.. என சினிமாவில் மட்டுமே பார்த்த 'சைக்கோ' கொடுமைகளைத் தானே அனுபவிக்க நேர்ந்தபோது, அதிர்ந்து அழுதாள். அந்தக் கதறலை, அவளுடைய பெற்றோருக்கு போன் மூலம் கேட்க வைத்தான் கொடூரன் காமேஷ். பெற்ற மனம் பொறுக்குமா...? அடுத்த நாளே லண்டன் வந்திறங்கினர் பெற்றோர். ஆனால், வீட்டுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை காமேஷ். இறுதியாக, 'நான் இப்படியெல்லாம் கஷ்டப்படுறேன், என்னைக் காப்பாத்துங்க’ என்று எழுதி ஜன்னல் வழியாக கவிதா எறிந்த காகிதத்தோடு, அந்நாட்டின் காவல்துறைக்குப் போக, கைது செய்யப்பட்ட காமேஷ§க்கு, சிறைத் தண்டனையும் கிடைத்தது.
சென்னைக்குத் திரும்பிய கவிதா தொடர்ந்த விவாகரத்து வழக்கில் காமேஷ் தரப்பிலிருந்து யாருமே ஆஜராகாததால், சீக்கிரமே விடிவு கிடைக்க... இன்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் கவிதா.
படித்த குடும்பம், பண்பான டாக்டர் தொழில், வெளிநாட்டில் வேலை என்றெல்லாம் நம்பி, அதே போல அனைத்துத் தகுதிகளும் கொண்ட கவிதாவுக்கே இப்படியரு கொடுமை என்றால்... விவரம் அறியாத மற்றவர்களின் நிலை?
அப்படி ஒரு பெண்ணின் பரிதாபக் கதையை அடுத்து பார்ப்போம்!
- ஆர்டர்... ஆர்டர்...