அலசல்
Published:Updated:

நரோடா படுகொலைகள்... நடுரோட்டில் பாலியல் வன்கொடுமை... 67 பேர் விடுதலையும் சர்ச்சைகளும்!

அமித் ஷா, மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
அமித் ஷா, மோடி

அப்போது, பிரதமருக்கு அருகில் நின்ற முதல்வர் மோடிக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் கோபத்துடன் கோஷமிட்டனர்.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த மிகக் கொடூரமான ஒன்பது வன்முறைச் சம்பவங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவது நரோடா பாட்டியாவில் நிகழ்ந்த படுகொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும். அந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பா.ஜ.க-வின் முக்கியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் மாயா கோட்னானி உள்ளிட்ட 67 பேரை, குற்றமற்றவர்கள் என்று தற்போது விடுதலை செய்திருக்கிறது சிறப்பு நீதிமன்றம். இந்தத் தீர்ப்பு பல தரப்பினராலும் விமர்சிக்கப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவார், “67 பேர் விடுதலை - அரசியல் சாசனத்தின் கொலை” என்று விமர்சித்திருக்கிறார்.

நரோடா படுகொலைகள்
நரோடா படுகொலைகள்

மோசமான வன்முறை!

சுதந்திர இந்தியாவில், தேசத்தை உலுக்கிய மிக மோசமான வன்முறைகளில் முக்கியமானவை, 21 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் நிகழ்ந்த கொடூரச் சம்பவங்கள். அப்போது, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தார். 2002-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் தேதி கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 58 கரசேவகர்கள் உயிரிழந்தனர். அதற்கு மறுநாள், அகமதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் நரோடா பாட்டியா பகுதியில் பயங்கரமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

அதாவது, பிப்ரவரி 28-ம் தேதி காலை ஒன்பது மணியளவில் பா.ஜ.க., பஜ்ரங் தள் நிர்வாகிகள் தலைமையில் நரோடா பாட்டியாவுக்குள் புகுந்த சுமார் 5,000 பேர் கொண்ட வன்முறைக் கும்பல், அங்கு வெறியாட்டம் போட்டது. முதலில் அங்கிருந்த நூராணி மசூதியை, எல்.பி.ஜி சிலிண்டரை வெடிக்கச் செய்து அவர்கள் தகர்த்தனர். அதே பாணியில், அங்கிருந்த முஸ்லிம்களின் வீடுகளை எல்.பி.ஜி சிலிண்டர்களை வெடிக்கச் செய்து தகர்த்தனர். தங்கள் கண்களில் பட்டவர்களையெல்லாம் அவர்கள் கத்தியால் குத்தினர். தனியாகவும் கூட்டாகவும் சேர்ந்து முஸ்லிம் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். நடுத்தெருவில் எந்த அச்சமுமின்றி, ‘மிகவும் சுதந்திரமாக’ கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் அவர்கள் ஈடுபட்டனர். பிறகு, அந்தப் பெண்களைக் குத்திக் கொன்று, தீவைத்து எரித்தனர். பலரை உயிருடன் எரித்துக் கொன்றனர். ஒரு கி.மீ தொலைவில் காவல் நிலையம் இருந்தும், ஒரு காவலர்கூட அங்கு எட்டிப் பார்க்கவில்லை. ஆகையால், இந்த வன்முறை வெறியாட்டத்தை எந்தத் தங்குதடையும் இல்லாமல் பத்து மணி நேரம் நடத்தினார்கள். எல்லாம் முடிந்த பிறகு, 36 பெண்கள், 35 குழந்தைகள் 26 ஆண்கள் என மொத்தம் 97 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. பாதிக்கப் பட்ட அனைவரும் முஸ்லிம்கள். இத்தகைய கொடூரங்கள் குஜராத்தின் பல பகுதிகளில் அன்று நடந்தேறின.

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

மோடியின் அமைச்சருக்குச் சிறை!

பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க ஏப்ரல் 4-ம் தேதி குஜராத்துக்குச் சென்றார் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய். நேராக அவர் சென்ற இடம் நரோடா பாட்டியா. அந்த மக்களின் துயரக் கதைகளைக் கேட்டு கண்ணீர் சிந்திய பிரதமர், “நான் மிகவும் வெட்கப்படுகிறேன்” என்று வருத்தப்பட்டார். மேலும், “நான் வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டியிருக்கிறது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு நான் வெளிநாடுகளுக்குச் செல்வேன்?” என்றும் வாஜ்பாய் வேதனைப்பட்டார். அப்போது, பிரதமருக்கு அருகில் நின்ற முதல்வர் மோடிக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் கோபத்துடன் கோஷமிட்டனர்.

நரோடா பாட்டியா படுகொலைகள் வழக்கில் முக்கியக் குற்றவாளியாக இடம்பெற்றவர், முதல்வர் மோடியின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் அமைச்சராக இருந்த டாக்டர் மாயா கோட்னானி. இந்த வழக்கில் மாயா கோட்னானி உட்பட 32 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து 2012-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது சிறப்பு நீதிமன்றம். அந்தத் தீர்ப்பில், “மக்கள் பிரதிநிதியான மாயா கோட்னானி, வன்முறையைத் தடுக்க முயலாமல், முஸ்லிம்களுக்கு எதிராக பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கியுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார்” என்று கடுமையாகக் கண்டித்தது நீதிமன்றம். கூடவே, பாபு பஜ்ரங்கிக்கு சாகும்வரை சிறைத் தண்டனையும், எட்டு குற்றவாளிகளுக்கு 31 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 22 குற்றவாளிகளுக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது சிறப்பு நீதிமன்றம்.

டாக்டர் மாயா கோட்னானி
டாக்டர் மாயா கோட்னானி

சாட்சி சொன்ன அமித் ஷா!

அதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மாயா கோட்னானி உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். “குற்றம் நிகழ்ந்த இடத்துக்கு நான் செல்லவே இல்லை’ என்று மாயா கோட்னானி தரப்பு வாதிட்டது. அதை நிரூபிப்பதற்காக, பா.ஜ.க தலைவர் அமித் ஷாவே நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறினார். “வன்முறை நிகழ்ந்த தினத்தன்று காலை 8:30 மணியளவில் சட்டமன்றத்திலும், பிறகு 11:30 மணிக்கு சோலா மருத்துவமனையிலும் கோட்னானியைப் பார்த்தேன்” என்று அமித் ஷா சாட்சியம் அளித்தார். அதன் பிறகு, நரோடா பாட்டியா படுகொலை வழக்கில், ‘குற்றமற்றவர்’ என்று கூறி மாயா கோட்னானியை குஜராத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

மாறிய தீர்ப்பு!

ஆனாலும், நரோடா பாட்டியாவுக்கு அருகிலுள்ள நரோடா காம் பகுதியில் 11 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு முடிவுக்கு வராமல் இருந்தது. சிறப்பு நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த அந்த வழக்கில், கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி உட்பட 67 பேர் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பு வெளியான நாளில், நீதிமன்றத்துக்கு வெளியே காத்திருந்த இந்துத்துவா அமைப்பினரும், மாயா கோட்னானி உள்ளிட்டோரின் உறவினர்களும் தீர்ப்பைக் கேட்டு உற்சாகத்தில் துள்ளிக் குதித்து, ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘பாரத் மாதா கீ ஜே’ என்று கோஷமிட்டனர்.

பழைய இந்தியாவில் குற்றம்புரிந்த பா.ஜ.க ஆதரவாளர்கள், புதிய இந்தியாவில் விடுதலையாகிறார்கள்!