Published:Updated:

சட்டம் உன் கையில்!

இல்லாமல் போன 25 ஆண்டு கால வாழ்க்கை !

பிரீமியம் ஸ்டோரி

சுதா ராமலிங்கம்

 ராணுவத்தில் பணியாற்றிய தன் கணவர், 'நாட்டுக்காக போரிட்டபோது உயிர் இழந்தார்' என்ற செய்தியைக் கேட்டபோது, அந்தோணியம்மாள் துடித்து அழுதார்; புரண்டார். அழுதாலும் புரண்டாலும் மாண்டவர் மீண்டு வந்து விடுவாரா? அதை அவர் உணர்ந்திருந்தாலும் இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் அவரை பயமுறுத்தியது!

சட்டம் உன் கையில்!
##~##

சில காலங்கள் உருண்டோட, தன் ஊருக்கு அருகில் வசித்து வந்த கணவரின் நண்பரும் ராணுவ வீரருமான ஆறுமுகத்திடம் சில டாக்குமென்டுகளைக் கொடுக்கச் சென்றார். அப்போது அவர் தன் இரண்டு குழந்தைகளின் மீது காட்டிய அன்பும் அக்கறையும் அந்தோணியம்மாளின் மனதைத் தொட்டது.

சில நாட்கள் கழித்து அந்தோணியம்மாளைப் பார்க்க வந்த ஆறுமுகம், ''உங்கள நான் கல்யாணம் பண்ணிக் கட்டுமா?'' என்று கேட்ட கேள்வியில் தன் வாழ்க்கையும் குழந்தைகளின் எதிர்காலமும் பிரகாசமானதாக நினைத்தவர்... சம்மதித்தார். கல்யாணத்தை, ரெஜிஸ்டரும் செய்தார்கள். 25 வருட காலம் வசந்தமாகப் போய்க் கொண்டிருந்தது!

தென்றல் மட்டுமே வீசும் வாழ்க்கை பெரும்பாலானவர்களுக்கு வாய்ப்பதில்லையே! ஆறுமுகம் இன்னொரு பெண்ணுடனும் காதலாகக் கசிந்துருகிக் கொண்டிருப்பது தெரிய வந்தபோது, பூகம்பம்! நாளரு சண்டையும் பொழுதொரு பஞ்சாயத்துமாகப் போக, வேறு வழியில்லாமல் விவாகரத்துக்கு அப்ளை செய்தார் ஆறுமுகம். அப்போதுதான் தெரிந்தது... அவர்கள் இருவரும் 25 வருடங்களுக்கு முன் செய்த திருமணமே செல்லாதது என்று. காரணம், வெவ்வேறு மதத்தை சேர்ந்த அவர்கள் இருவரும் இணைந்தபோது, தங்கள் திருமணத்தை 'ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட்’டில் பதிவு செய்து கொள்ளவில்லை என்பதுதான். கிறிஸ்தவரான அந்தோணியம்மாள், தன் மத வழக்கப்படி திருமணம் செய்திருந்தாலும், 'திருமணமே செல்லாது' என்கிற பிரச்னை ஏற்பட்டிருக்காது. அதையும் அவர் செய்யவில்லை. இதனால், எந்தச் சிக்கலும் இல்லாமல், 25 ஆண்டு பந்தம் அறுந்து போனது, ஆறுமுகத்துக்கு வசதியாக அமைந்தது. அந்தோணியம்மாளுக்கோ... இடியாக வலித்தது.

'இந்தத் திருமணமே செல்லாது' என்று கறாராகச் சொல்விட்ட போதிலும், இருவரும் இணைந்து 25 ஆண்டுகள் வாழ்ந்திருப்பதால், சட்டப்படி அந்தோணியம்மாளுக்கு ஆறுமுகம் ஜீவனாம்சம் தரவேண்டும் என்று உத்தரவிட்டது. அது அவருக்கு ஒரு ஆறுதலாக அமைந்ததது.

சட்டம் உன் கையில்!

'அப்படியென்றால்... எதுதான் முறையான, சட்டப்படியான திருமணம்?’ என்றுதானே கேட்கிறீர்கள்?

திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். இருவரும் நல்ல மனநிலையுடன் இருப்பது மிக அவசியம். திருமணம் நடக்கும்போது, அவர்களுக்கு இன்னொரு வாழ்க்கைத் துணை (கணவன்/மனைவி) இருக்கக் கூடாது (முஸ்லிம்களைத் தவிர).

இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு இந்துக்கள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும். தாலி கட்டி, இந்து மதச் சடங்குகள், சம்பிரதாயங்கள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்.

குடும்பத்தார், சுற்றம், நட்புகள் முன்னிலையில் வாழ்க்கை ஒப்பந்தம் வாசிக்கப்பட, மலர் மாலை மாற்றிக் கொள்ளும் சுயமரியாதைத் திருமணங்கள், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட திருமணங்களே. இதையும் பதிவு செய்யலாம். தம்பதியில் ஒருவர் இந்துவாகவோ... இன்னொருவர் வேறு மதத்தினராகவோ இருந்து சுயமரியாதை திருமணம் செய்து கொண்டால்... அந்தத் திருமணம் செல்லாது.

கிறிஸ்தவ திருமணச் சட்டப்படி, திருமணம் செய்துகொள்பவர்களில் ஒருவர் கட்டாயமாக கிறிஸ்தவராக இருக்க வேண்டும்.

இஸ்லாமிய திருமணச் சட்டப்படி, ஒருவர் முஸ்லிம் ஆகவோ, இன்னொருவர் உருவ வழிபாடு செய்யாத வேற்று மதத்தைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம்.

'மத சம்பிரதாயப்படி திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை’ என்பவர்கள், 'ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட்’டின் கீழ் திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு, சப்-ரெஜிஸ்டர் அலுவலகத்தில் 30 நாட்களுக்கு முன் 'நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளோம்’ என்று நோட்டீஸ் கொடுக்கப்பட வேண்டும். 'இந்தத் திருமணத்தில் எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்கிற ஒப்புதல் பெறுவதற்காக அந்த நோட்டீஸ், அங்கு 30 நாட்கள் ஒட்டி வைக்கப்பட்டிருக்கும். எந்த எதிர்ப்பும் வராதபட்சத்தில், 60 நாட்களுக்குள் ரெஜிஸ்தரார் முன்பு மாலை மாற்றி திருமணம் செய்து கொள்ளலாம். எதிர்ப்பு வந்தால், அதைத் தீர்த்த பின்பு... திருமணம் செய்து கொள்ளலாம்.

உங்கள் வீட்டிலும் நட்புகளிலும் சட்டப்படியான திருமணம்தான் நடக்கிறதா என்பதை இனிமேல் கவனிப்பீர்கள் அல்லவா?

'என் குழந்தை எனக்குத்தான்...' என போராடி, வெற்றி பெற்ற ஒரு தாயின் பாசப் போராட்டம்... அடுத்த இதழில்!

- ஆர்டர்... ஆர்டர்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு