Published:Updated:

சட்டம் உன் கையில் !

குழந்தை...அம்மாவுக்கு சொந்தமா...அப்பாவுக்கு சொந்தமா ?

ஓவியம்: பாரதிராஜா
சுதா ராமலிங்கம்

'கல்லறையில்கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேன்...

நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே...’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- இப்படி கவிதையால் காதல் வளர்த்தார்கள் அரசு அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்த பானுவும் சண்முகமும்! ஐந்து வருடக் காதல், இரு குடும்பத்தின் ஆசீர்வாதத்தோடு திருமண உறவாக மாற...  தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தார்கள் இருவரும். பெங்களூருவில் தொடங்கிய சந்தோஷ இல்லறத்தில் இனிமை சேர்த்தது... குழந்தை குமுதாவின் வரவு. அவள் சிரிப்பிலும் சந்தோஷத்திலும் உருண்டது வாழ்க்கை அவர்களுக்கு.

திடீரென அம்மாவுக்கு உடல்நிலை மிக மோசமாக, அம்மாவைப் பார்ப்பதற்காக சென்னை வந்தார் பானு. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால், அருகில் இருந்து கவனித்துக் கொள்ள முடிவு செய்து, கணவரிடம் சூழலை விளக்கிச் சொல்லி, அலுவலகத்துக்கும் மூன்று மாதங்கள் விடுப்புச் சொல்லி, சென்னையிலேயே தங்கி விட்டார் பானு.

சட்டம் உன் கையில் !
##~##

அவ்வப்போது சென்னைக்கு வந்து பார்த்துச் சென்று கொண்டு இருந்த கணவர், தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாக வருவதை நிறுத்திக் கொண்டாலும், தினமும் போன் மூலம் கணவரின் நலம் தெரிந்து கொண்டதில் அது பெரிய குறையாகத் தெரியவில்லை. சமயங்களில் சண்முகத்தின் பேச்சில் ஏதோ இடறுவது போல் தோன்றினாலும், 'நாம தூரத்தில் இருக்கோம்... அதனால்தான் இப்படித் தோணுது’ என்று தன்னைத்தானே சமாதானமும் செய்து கொண்டார்.

அம்மா முற்றிலும் குணமான பின்பு, பெங்களூரு திரும்பியவருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. சண்முகத்தின் குணத்தில் ஏகப்பட்ட மாறுபாடுகள். அலுவலகத்துக்கு லீவு போட்டுவிட்டு குடித்துக் கும்மாளம் போடும் அளவுக்கு நிலைமை முற்றியிருந்தது.

தவறான நண்பர்களின் சேர்க்கை, கையில் மிதம் மிஞ்சி இருந்த பணம் இவையெல்லாம்... குடி, பெண்கள் சகவாசம் என விகாரமான பாதையில் சண்முகத்தை நடைபோட வைத்

திருந்தது. 'மாற்ற முடியும்' என்ற நம்பிக்கையோடு போராடி தோற்றுத்தான் போனார் பானு.

தினம் தினம் அடி, உதை, விஷ வார்த்தைகள் என வாழ்க்கை இருண்டு போனது. உச்சகட்டமாக, 'நீ என்னை விட்டுப் போனாத்தான் நிம்மதியா இருப்பேன்’ என்று விவாகரத்து நோட்டீஸை நீட்டினார் சண்முகம். காதல் மனைவியாக அழுதார்... துடித்தார் பானு. ஆனால், சண்முகம் எதன் பொருட்டும் மாறுவதாக இல்லை. வேறு வழியில்லாமல் விவாகரத்து பெற்று, வேறு ஊருக்கு மாறுதல் வாங்கி வந்து, வாழ்க்கையைத் தன் குழந்தையுடன் அழகாக்கி, அர்த்தப்படுத்திக் கொண்டார் பானு.

விவாகரத்து செய்துகொண்ட பெண், இந்தச் சமுதாயத்தில் தனித்து வாழும் சூழல் எத்தனை சிரமமானது என்பதை அவர் உணரத் தொடங்கியிருந்த வேளையில், 'புயல் அடித்தால் கலங்காதே... நான் பூக்கள் நீட்டுகிறேன்’ என காதலுடன் அவரிடம் வந்தார் ஒரு ஆண். அது விரைவிலேயே மனம் கலந்த மறுமணமாக பூத்தது! பத்து வயதைத் தொடும் நிலையிலிருந்த குழந்தையும் புதியவருடன் அன்பாக ஒட்டிக் கொண்டது.

முன்னாள் மனைவி இன்னொரு திருமணம் செய்துகொண்டதைப் பொறுக்க முடியாமல், ''இரண்டாம் திருமணத்தாலும், அந்த 'ஸ்டெப் ஃபாதராலும்’ குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும்’' என்று வழக்குத் தொடர்ந்தார் சண்முகம்.

இதன் தீர்ப்பைப் பார்க்கும் முன்... விவாகரத்து பெறும் தம்பதியின் குழந்தைகள் யாருடன் வாழ வேண்டும் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்ப்போம்.

'5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அம்மாவின் கஸ்டடியில்தான் இருக்க வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தைதான் இயற்கையான பாதுகாவலர் (Natural guardian)’ என்று சட்டம் சொல்கிறது.

ஆனால், 'சட்டத்தை மட்டும் கருத்தில் கொள்ளாது, குழந்தைகளின் நலனை மட்டும்தான் பிரதான நோக்கமாகக் கருதி தீர்ப்பு வழங்க வேண்டும்' என்று வலியுறுத்துகிறது உச்ச நீதிமன்றம்.

'குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் பொருளாதார ரீதியான நலனை மட்டும் முக்கியமானதாகக் கருதாமல், குழந்தையின் உடல்நலம், மனநலம், எதிர்கால நலன் மற்றும் அதன் மன விருப்பம் இவற்றை முதன்மையான காரணிகளாகக் கொண்டு தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்' என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் உறுதியான கருத்து.

பானு - சண்முகம் வழக்கில்... 10 வயது குழந்தை குமுதாவிடம், 'நீ யாரிடம் இருக்க விரும்புகிறாய்?’ என்று நீதிபதி கேட்டபோது 'அம்மாவிடமும் புது அப்பாவிடமும்தான்!’ என்று திடமாகச் சொன்னது குழந்தை.

'அவர் என் சொந்த அப்பா இல்லை என்று தெரியும், இருந்தாலும் அவரை எனக்குப் பிடிக்கும்’ என்று யாரும் சொல்லித் தராமல் குழந்தை சொன்னது. இதையும் கோர்ட் காதில் வாங்கிக் கொண்டது.

இறுதியாக, சட்ட விதிகளை ஒதுக்கித் தள்ளிய நீதிமன்றம், 'குழந்தையின் விருப்பத்தின் பேரிலும், குழந்தையை யாரிடம் இருந்தால் உடல்ரீதியாக, மனரீதியாக, பொருளாதார ரீதியாக பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டும் அதன் அம்மாவிடமே குழந்தை வளரட்டும்!’ என்று சொன்னபோது பானுவின் கண்களில் வழிந்த நீரில் தாய்மை பொங்கியது; அந்தக் குழந்தை அதன் வளர்ப்புத் தந்தையின் கையை இறுகப்பற்றி நடந்தது... நிம்மதியாக நடக்கிறது இன்றும்!

- ஆர்டர்... ஆர்டர்...