'கடந்த ஆண்டை விட, அதிகமான வழக்குகள் இந்த ஆண்டு முடிக்கப்பட உள்ளதாக, மாவட்ட மக்கள் நீதிமன்ற நீதிபதி சந்தோஷம் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றமங்களில், 32 ஆயிரம் வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ளன. அவற்றை விரைந்து முடிக்கும் வகையில், லோக் அதாலத் நடத்தப்பட்டுவருகிறது. இதன் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 1589 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, 4 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து மாநிலத் தலைநகரங்கள், மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் எங்கெல்லாம் நீதிமன்றங்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் சட்ட உதவிக் குழுக்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு குழுவிலும், ஆலோசனை மையங்கள் செயல்படுகின்றன. இவை தவிர, மாவட்டங்களில் நீதிமன்றங்கள் இல்லாத ஊர்களிலும் 'சமரச மையங்கள்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை முடிக்க உதவுவதற்கும், வழக்குகளில் விரைவில் நிவாரணம் பெறுவதற்கும் லோக் அதாலத்துகள் (மக்கள் நீதிமன்றங்கள்) என்ற அமைப்பை சட்டப் பணிகள் ஆணையம், உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் 1986 முதல் நடத்திவருகிறது. சட்டப் பிரச்னை எழாத வழக்குகளை, நீதிமன்றங்களிலிருந்து பிரித்தெடுத்து விவரங்கள் சேகரித்து, சம்பந்தப்பட்ட தரப்பினர் இருவரின் வழக்குரைஞர்களின் சம்மதத்துடன், மக்கள் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இரு தரப்பினரையும் வைத்து, அவர்கள் ஒரு உடன்பாடுக்கு வருவதற்கு உதவிசெய்து, வழக்கு உடனடியாக முடிக்கப்படுகிறது. இது, உடன்பாட்டுத் தீர்வு என்பதால், இதற்கு மேல் முறையீடு கிடையாது. கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, உள்ளிட்ட அனைத்து நீதி மன்றங்களிலும் இன்று லோக் அதாலத் நடைபெற்றது. நாகர்கோவிலில் ஐந்து பெஞ்சுகள் அமைக்கப்பட்டு, வழக்குகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதில், ஏராளமான பொது மக்கள், தங்களது வழக்குகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் கலந்துகொண்டனர்'' என்று தெரிவித்தார்.