Published:Updated:

அருவிகளில் தண்ணீர் குறைந்தது! களை இழந்த குற்றால சாரல் திருவிழா!

பி.ஆண்டனிராஜ்
அருவிகளில் தண்ணீர் குறைந்தது! களை இழந்த குற்றால சாரல் திருவிழா!
அருவிகளில் தண்ணீர் குறைந்தது! களை இழந்த குற்றால சாரல் திருவிழா!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் குற்றால அருவிகளில் நீர் வரத்து வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால் அரசின் சார்பாக நடத்தப்பட்டு வரும் சாரல் திருவிழா களை இழந்து காணப்படுகிறது.

தென் மேற்குப் பருவமழை பொய்த்ததால் நெல்லை மாவட்டத்தில் வறட்சி நிலவுகிறது. இதனால், ஜூன் மாதத்தில் தொடங்கிய குற்றால சீசனும் வெகு விரைவாகவே முடிவடையும் நிலையை எட்டியது. மெயின் அருவியில் பாறையை ஒட்டியபடி தண்ணீர் வழிந்து கொண்டு இருக்கிறது. பழைய குற்றாலம் உள்ளிட்ட பிற அருவிகள் வறண்டுவிட்ட நிலையில் ஐந்தருவியின் இரு பிரிவுகளில் மட்டுமே குறைவான அளவுக்குத் தண்ணீர் விழுகிறது. 

தமிழக அரசின் சார்பாக 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை சாரல் திருவிழா நடக்கிறது. தினந்தோறும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான போட்டிகள் என உற்சாகத்துடன் நடைபெறும் இந்த விழா, இந்த ஆண்டு கூட்டம் இல்லாததால் களை இழந்து இருக்கிறது. மந்தகதியில் சீசன் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் கணிசமாகக் குறைந்து விட்டது. 

இந்த ஆண்டு சீசன் அமோகமாக இருக்கும் என நினைத்த வியாபாரிகள், குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தற்காலிகக் கடைகளைக் கூடுதல் தொகைக்கு குத்தகைக்கு எடுத்து இருந்தனர். ஆனால், தொடங்கிய வேகத்தில் சீசன் முடிவடையும் நிலைக்குச் சென்று விட்டதால், பெரும் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். சாரல் திருவிழாவைச் சிறப்பிக்கும் வகையில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் கிராமியக் கலைநிகழ்ச்சிகள், இசைக் கச்சேரி, பட்டிமன்றம், நடன நிகழ்ச்சிகள் எனப் பல்சுவை நிகழ்ச்சிகளுக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், எதிர்பார்த்த அளவுக்குப் பயணிகளின் கூட்டம் இல்லாமல் போனது அதிகாரிகளையும் கவலை அடையச் செய்துள்ளது.