Published:Updated:

திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் - அடிக்கல் நாட்டு விழா

தி.ஜெயப்பிரகாஷ்
திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் - அடிக்கல் நாட்டு விழா
திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் - அடிக்கல் நாட்டு விழா

திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் அமைக்கப்பட இருக்கிறது. அதற்கான பூமிபூஜையை உயர் நீதிமன்ற நீதியரசர் இந்திரா பானர்ஜி இன்று துவங்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்காக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்அலுவலக பெருந்திட்ட வளாக பகுதியில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதில், 33.74 கோடி மதிப்பீட்டில் 3 தளங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டப்பட இருக்கிறது. 


புதிதாக கட்டப்பட உள்ள நீதிமன்ற வளாகத்தின் தரைதளத்தில் மாவட்ட நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1,2,3,4 மற்றும் இரண்டாவது, மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவையும்,
முதல் தளத்தில் நான்காவது, ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், பயிற்சியர் மாவட்ட நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றங்கள், குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் 5, 6 ஆகியவை அமைக்கப்பட இருக்கிறது.

இரண்டாம் தளத்தில் 8 நீதிமன்ற அரங்குகள், நீதிபதியறை, சுருக்கெழுத்தர் அறை, பதிவறை, சேமிப்பு அறை, நீதிமன்ற அலுவலகங்கள், தலைமை எழுத்தர், சிரசுதாரர், காவலர் அமரும் இடங்கள், ஓய்வு அறை, வழக்குரைஞர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறானாளிகள் உள்பட ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் அமைக்கப்பட இருக்கின்றன.


மூன்றாவது தளத்தில் நீதிமன்ற நூலகம், ஆய்வுக் கூடம் மற்றும் இருபாலருக்கான கழிப்பறைகள் கட்டப்பட இருக்கின்றன.
மேலும் மக்கள் நீதிமன்றம், நீதிபதிகளுக்கான குளிர்சாதன வசதி அறைகள், மாற்றுத் தீர்வு மைய கட்டடம், செயலாளர் அறை, மாவட்ட சட்டப் பணிக்குழு அலுவலகம், மாவட்ட சட்ட பணிக்குழு தலைவர் அறை, காத்திருப்பு ஓய்வு அறை, தியான அறை,
அலுவலர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை ஆகியவைகளும் இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தில் அமைய இருக்கின்றன.

மேலும்  8 மின்தூக்கிகள், கண்காணிப்பு கேமரா, தீயணைப்பு வசதி, சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சூரிய மின்சக்தி வசதி, நவீன தொலைத் தொடர்பு வசதிகள்,பொது தகவல் வசதி போன்றவையும் இந்த நீதிமன்ற வளாகத்தில் வரவிருக்கின்றன.