Published:Updated:

பேரிகார்டுகள் வைக்க போலீஸுக்கு அனுமதி உள்ளதா? டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அருண் சின்னதுரை
பேரிகார்டுகள் வைக்க போலீஸுக்கு அனுமதி உள்ளதா? டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
பேரிகார்டுகள் வைக்க போலீஸுக்கு அனுமதி உள்ளதா? டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

என்.ஹெச் சாலையில் பேரிகார்டுகள் வைக்க காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பேரிகார்டுகள் என்பது சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மற்றும் விபத்துகளைத் தவிர்க்க உள்ளிட்ட பல காரணங்களுக்காகத்தான் வைக்கப்படுகிறது. ஆனால்,  தனியார் மால்கள் , சூப்பர் மார்கெட்டுகள் , பிரமாண்ட ஜவுளிக்கடைகள் போன்றவை, அவர்களது கடைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல சுய தேவைகளுக்காக பேரிகார்டுகளை உள்ளூர் காவல்துறையினரின் உதவியோடு அமைத்துக்கொள்கின்றன என்று மதுரையில்  புகார்கள் தொடர்ச்சியாக எழுந்துவந்தது.

இந்நிலையில், மதுரை மாட்டுத்தாவணி முதல் ஒத்தக்கடை பகுதி வரை சாலைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாததால் விபத்துக்கள் ஏற்படுவதாகக் கூறி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்த வழக்காக எடுத்து விசாரித்தது. அந்த வழக்கு விசாரணையின்போது, தமிழகத்தில் காரணமின்றி வைக்கப்பட்டிருக்கும் பேரிகார்டுகள் மற்றும் தேவையான இடங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாததே விபத்துக்கள் அதிகரிக்கக் காரணம் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விபத்துகளைக் குறைக்கும் நோக்கிலேயே தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, டிஜிபி, மதுரை, சென்னை, போக்குவரத்து ஆணையர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோரை இந்த வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்த்தும் தேசிய நெடுஞ்சாலைகளில் அடுக்கடுக்கான பேரிகார்டுகள் வைக்க காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து அவர்கள் பதில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.