Election bannerElection banner
Published:Updated:

பீமா கோரேகான் வழக்கின் தற்போதைய நிலை இதுதான்!

பீமா கோரேகான்
பீமா கோரேகான்

இந்த வழக்கின் அடுத்த கூடுகையைக் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது, மும்பை அமர்வு நீதிமன்றம். அதற்கு அவர்கள் குறிப்பிட்டிருக்கும் காரணமும் விநோதமாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட்டு வருகின்றனர்.

பீமா கோரேகான் கலவர விவகாரத்தில் எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் உட்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டு ஒருவருடம் கடந்துவிட்டது. இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 60 முறை நீதிமன்றம் கூடியுள்ளது. தற்போது இந்த வழக்கின் அடுத்த கூடுகையைக் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது, மும்பை அமர்வு நீதிமன்றம். அதற்கு அவர்கள் குறிப்பிட்டிருக்கும் காரணமும் விநோதமாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட்டு வருகின்றனர்.

பீமா கோரேகான்
பீமா கோரேகான்

பீமா கோராகான் வழக்கில் கடந்த வருடம் 7,500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஜூன் 2018 தொடங்கி தனது கைது நடவடிக்கையை ஆரம்பித்தனர், புனே போலீஸார். ரோனா வில்சன், சுதா பரத்வாஜ், சுதிர் தவாலே, மகேஷ் ராவத், சோமா சென் உள்ளிட்ட ஒன்பது செயற்பாட்டாளர்களும் நக்சல்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறிக் கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு எழுத்தாளர்கள் ஆனந்த டெல்டும்டே, கௌதம் நவலகா உதவியதாகக் கூறி அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். பிறகு உச்ச நீதிமன்றத்தை அணுகி இந்த வழக்கிலிருந்து இருவரும் வெளியேறினார்கள். இருந்தும் இன்று வரை புனே போலீஸார் இவர்கள் இருவரையும் இந்த விவகாரத்தில் மீண்டும் இணைக்க முயன்றுகொண்டிருக்கிறது.

’செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டதற்கான அடிப்படை ஆதாரங்கள், அவர்கள் லேப்டாப் மற்றும் இதர எலக்ட்ரானிக் கருவிகளில் இருந்த கடிதங்கள்தான். அந்தக் கடிதங்கள் வழியாகப் பிரதமரைக் கொல்வதற்குக்கூடத் திட்டம் தீட்டப்பட்டது’ என்று புனே போலீஸ் தொடர்ந்து கோர்ட் விசாரணையில் கூறிவருகிறது. இருந்தும், இதுவரை அது தொடர்பாக எந்தவிதமான ஆதாரமும் கைதுசெய்யப்பட்டவர்கள் தரப்புக்கோ அல்லது நீதிமன்றத்திலோ இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனந்த டெல்டும்டே உள்ளிட்டவர்கள் அந்த ஆதாரத்தைச் சிதைத்துவிடக் கூடும் என்று போலீஸார் காரணம் கூறிவந்தார்கள்.

பீமா கோரேகான்
பீமா கோரேகான்

இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த வாரம் மீண்டும் கூடிய நீதிமன்றம், "புனே போலீஸ் சொல்வதுபோல 23 ஹார்டு டிஸ்குகளிலும் இருக்கும் இந்த வழக்கு தொடர்பான அத்தனை ஆதாரங்களும், ஒவ்வொன்றாகப் பத்து முறை பதிவேற்றப்பட்ட நீதிமன்றத்துக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்புக்கும் தரவேண்டும். வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டுமே ஆதாரங்களைப் பிரதியெடுக்கும் பணியைச் செய்ய அனுமதி உண்டு” என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் இதனால் பெரும் கொந்தளிப்படைந்துள்ளனர். “ஒவ்வோர் ஆதாரமும் பிரதியெடுக்க 6 முதல் 7 மணிநேரம் வரை ஆகும். அதுவும் வாரத்தின் குறிப்பிட்ட இரண்டு நாள்களில் மட்டும்தான் அனுமதி உண்டு. இது, வழக்கை இன்னும் காலம்தாழ்த்தவே செய்யும். அவர்கள் கூறும் ஆதாரங்களில் ஒன்று மட்டுமே இதுவரை பெயரளவில் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோக்கில் போனால், பிரதிகளை எடுக்க இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகும். போலீஸார் வேண்டுமென்றே இதுநாள் வரை காலம் தாழ்த்தி வந்தார்கள். அவர்கள் செய்த தவற்றுக்கு நீதிபதிகள் நிரபராதிகளைத் தண்டிக்கலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமர்வு நீதிமன்றம் நீதிபதியின் உத்தரவில் மிக முக்கியமாக, “புனே போலீஸார் அரைகுறையானதொரு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளார்கள். பார்க்கப்போனால், நீதிமன்றம் இந்த வழக்கை கையில் எடுத்திருக்கவே கூடாது. ஆனால், நீதிமன்றம் இந்த வழக்கை கையிலெடுத்துவிட்டது. ஆகையால், காவல் துறை இனிமேலும் காலம் தாழ்த்தாமல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய நீதிமன்றங்களின் வரலாற்றில் நீதிபதியிடமிருந்தே இது போன்றதொரு விநோதமானதோர் அறிவிக்கை வருவது, இதுவே முதல்முறை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு