Published:Updated:

`பணியிடை நீக்கம் என ஆய்வாளர்களை ஏடிஜிபி மிரட்டுகிறார்!' - நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் முறையீடு

கலிலுல்லா.ச

வழக்கின் ஆவணங்களைக் கொடுத்தால் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என ஆய்வாளர்களை ஏடிஜிபி ஒருவர் மிரட்டுகிறார்

pon manickavel
pon manickavel

சிலை கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்தவில்லை எனக் கூறி தமிழக அரசிற்கு எதிராக சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

Madras HC
Madras HC

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதிட வேறொரு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல,``சிலை கடத்தல் வழக்கு விசாரணைக்காக கும்பகோணம் நீதிமன்றத்திற்குச் செல்லும் அதிகாரிகளுக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை” என்று பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்..

Vikatan

``சிலை கடத்தல் வழக்குகளின் முதற்கட்ட விசாரணையை சிறப்பு அதிகாரியின் குழு நடத்தக்கூடாது. அவர்களுக்கு வழக்கின் ஆவணங்களை கொடுத்தால் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என ஆய்வாளர்களை ஏடிஜிபி ஒருவர் மிரட்டுகிறார். இது நாடா? இல்லை காடா.? ஜனவரி முதல் தற்போது வரை சிலை கடத்தல் தொடர்பான புகார்களில் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை” எனச் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் வேதனை தெரிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து பதிலளிக்க கால அவகாசம் கோரிய அரசு தரப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் அரசு தரப்பு தவறாக நடந்துகொள்வது ஏன் எனக் கேள்வி எழுப்பினர்.

pon manickavel
pon manickavel

மேலும், நீதிமன்றம் உத்தரவிட்டும் சிறப்பு அதிகாரி குழுவுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அவர்களது அலுவலகத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுவர்களுக்குக் கூட அரசால் ஊதியம் வழங்க முடியாதா எனக் கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் உயர் காவல் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்றுதான் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து செப் 11-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.