
- மிரட்டியதால் ஆஜராகவில்லையா நிர்மலாதேவி?
நீதிமன்ற விசாரணையின்போது ஆஜராகாததால், பேராசிரியை நிர்மலாதேவி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ``நிர்மலாதேவி, நீதிமன்றத்தில் ஆஜாராகக் கூடாது என மிரட்டப்பட்டிருக்கிறார்’’ என்று அவரின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் புகார் கிளப்பியிருக்கிறார்.

வி.வி.ஐ.பி-க்கள் சிலரின் வக்கிர ஆசையை நிறைவேற்றுவதற்காக தன் கல்லூரி மாணவிகள் சிலரிடம் நைச்சியமாகப் பேசிய விவகாரத்தில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், மூவர்மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல்செய்தது. கைதுசெய்யப்பட்ட மூவரும் பத்து மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிமன்றத்துக்கு அமைதியாக வந்துகொண்டிருந்த நிர்மலாதேவி, திடீரென ஒருமுறை மனநலம் பாதித்தவர்போல் நடந்துகொண்டார். ஒருமுறை நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். சமீபத்தில் மொட்டை அடித்துக்கொண்டு வந்தார்.
நவம்பர் 18-ம் தேதி நீதிமன்றத்தில் நிர்மலாதேவி ஆஜராக வேண்டும். ஆனால், அன்றைய தினம் அவர் ஆஜராவில்லை. இதனால், நிர்மலாதேவிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தார் நீதிபதி. நவம்பர் 25-ம் தேதி நிர்மலாதேவியைக் கைதுசெய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரை மகளிர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில்தான், “நிர்மலாதேவி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரத்தின் பின்னணியில் அரசியல் உள்ளது. சிறையில் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக் கிறது” என்று புகார் கிளப்பியிருக்கிறார் நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன்.

அவரிடம் பேசினோம். “பேராசிரியர் நிர்மலாதேவியை சிறையிலேயே தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான் சிலரின் திட்டம். ஜாமீனில் வெளியே வந்த அவரை, ‘வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது’ என மிரட்டியிருக் கிறார்கள். இடையில் நிர்மலாதேவி என்னிடம் பேசும்போது, ‘வெளியே வந்தால் ஆசிட் அடிப்போம்; பிள்ளைகளைக் கடத்திவிடுவோம் என்று சிலர் மிரட்டுகிறார்கள்’ என்று கூறினார். அப்போது அவரிடம், ‘காலையில் சீக்கிரமாக வந்து நீதிமன்றத்தில் ஆஜராகிவிடுங்கள். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறினேன்.
அதன் பிறகு அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அதற்குள் கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டார்கள். எத்தனையோ குற்ற வழக்குகளில் ஆஜராகாதவர்களுக்கு அடுத்த முறை ஆஜராக நீதிமன்றங்கள் வாய்ப்பு கொடுத் துள்ளன. ஆனால், ஒரு வாய்தாவுக்கு வராததற்கே பெண் என்றும் பார்க்காமல் நிர்மலா தேவியை ரிமாண்ட் செய்துள்ளது நீதிமன்றம். நிர்மலாதேவி வெளியே இருந்தால், சிலரைப் பற்றிய உண்மைகளை அவர் வெளியே சொல்லி விடுவார் என்று அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ஓர் அமைச்சர் இருக்கிறார். விரைவில் அந்த அமைச்சர்மீது புகார் கொடுக்க உள்ளோம்” என்றார்.
சீக்கிரம் சொல்லுங்கப்பா... யார் அந்த அமைச்சர்?