Published:Updated:

`32 வருடப் பிரச்னை; அழகர் கோயில் மலை யாருக்குச் சொந்தம்?'- உச்ச நீதிமன்றம் அதிரடி

``கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அங்கு மரங்களை வெட்டக் கூடாது, எந்தக் கட்டுமானமும் தொடங்கக்கூடாது.''

அழகர் கோயில்
அழகர் கோயில்

அழகர் கோயில் அமைந்திருக்கும் மலை, வனத்துறைக்கு சொந்தமானது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழகர் கோயில்
அழகர் கோயில்

சில ஆண்டுகளுக்கு முன்னர், அழகர் கோயிலுக்கு அருகில் சில கட்டட வேலைகளைக் கோயில் நிர்வாகம் தொடங்கியபோது, அதைத் தடுத்து நிறுத்தியது வனத்துறை. அப்போது, ` மலை யாருக்குச் சொந்தம்' என்பதில் வனத்துறைக்கும் கோயில் நிர்வாகத்துக்கும் இடையே பிரச்னை எழுந்தது.

அதைத் தொடர்ந்து அழகர் கோயில் நிர்வாகம், திருப்பதி ஜீயர் மடத்தின் சார்பில் மதுரை நீதிமன்றத்தில் 1987-ல் வழக்குத் தொடர்ந்தது. கீழமை நீதிமன்றத்தில் வனத்துறைக்குச் சொந்தமானது என்று தீர்ப்பு வந்ததால், இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் நடந்தது. அதில், ` அழகர் மலை, அழகர் கோயிலுக்கு உரிமையானது' என்று 2014-ல் தீர்ப்பளிக்கப்பட்டது.

அழகர் கோயில்
அழகர் கோயில்

இந்த நிலையில், இத்தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஐந்து வருடங்கள் நடந்த இவ்வழக்கில், நீதியரசர்கள் நாகேஸ்வரராவ், ஹேமந்த்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'அழகர் கோயில் அமைந்திருக்கும் மலைப்பகுதி தமிழக வனத்துறைக்கு சொந்தமானது. ஏற்கெனவே உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.

அழகர் மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், அங்கு மரங்களை வெட்டக்கூடாது, எந்தக் கட்டுமானமும் தொடங்கக் கூடாது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சாலையை விரிவுபடுத்த, கோயில் நிர்வாகம் விரும்பினால் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளனர்.

அழகர் கோயில்
அழகர் கோயில்

சமீபகாலமாக, அழகர் கோயில் மலை அடிவாரப் பகுதிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவரும் நிலையில், இத்தீர்ப்பு வந்துள்ளது. `வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் கோயிலுக்கு வருபவர்களுக்கு வசதிகள் செய்துகொடுக்கத் தடை விதிக்கக்கூடாது' என்று மக்கள் கூறுகிறார்கள்.