மத்தியப் பிரதேச மாநிலத்தில், மதச் சுதந்திர சட்டம் 2021-ம் ஆண்டு, பிரிவு 10-ன் அடிப்படையில், ``கலப்புத் திருமணம் செய்துகொள்பவர்கள் 60 நாள்களுக்கு முன்பாக மதமாற்றத்துக்கான நோக்கத்தை மாவட்ட ஆட்சியரிடம் அறிவிக்க வேண்டும். அதன் பிறகே சட்டப்படி திருமணம் செய்துகொள்ள முடியும். இதை மீறுவோருக்கு ரூ.50,000 அபராதம், 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை" வழங்கப்படும் என மாநில அரசால் சட்டமியற்றப்பட்டிருக்கிறது.

இந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் ஏராளமானோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம், இந்த மனுக்களைக் கடந்த ஆண்டு, நவம்பர் 14-ம் தேதி விசாரித்தது. அப்போது, "விருப்பப்படி கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் முன்கூட்டியே அதற்கான நோக்கத்தை அறிவிக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினர் மீது மதச் சுதந்திர சட்டம் 2021-ம் ஆண்டு பிரிவு 10-ன் கீழ் மாநில அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது" என இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து மத்தியப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மத்தியப் பிரதேச அரசின் சார்பில் ஆஜரான சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ``சட்டவிரோத மதமாற்றத்துக்குத் திருமணம் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இதைக் கண்ணை மூடிக்கொண்டு அனுமதிக்க முடியாது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும்" எனக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், ``அனைத்து மதமாற்றங்களையும் சட்டவிரோதம் எனக் கூறமுடியாது. மாநில அரசின் சட்டப் பிரிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்களுக்கு, மாநில அரசு மூன்று வாரங்களுக்குள் பத்தி வாரியாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு அடுத்த 21 நாள்களுக்குள் மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும்" எனக் கூறி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.