``போதுமான காரணமின்றி நீண்ட காலமாக துணையுடன் உடலுறவு கொள்ள மறுக்கப்படுவது மனரீதியான கொடுமைக்குச் சமம்’’ என அலகாபாத் உயர் நீதிமன்றம், ஒரு வழக்கின் விசாரணையில் தெரிவித்துள்ளது.
கடந்த 1979-ம் ஆண்டில் திருமணமான தம்பதியினர், குடும்பத்தினரின் கானா சடங்கிற்குப் பின்னர் 7 வருட ங்கள் கழித்து ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர். ஆனால், அவரின் தேவையையும், கடமையையும் நீண்டகாலமாகவே அவரின் மனைவி தட்டிக் கழித்து வந்துள்ளார்.

அதோடு தன்னுடைய பெற்றோர் வீட்டில் சென்று தங்கி இருக்கிறார். பலமுறை கணவர் சென்று சமாதானம் செய்ய முயற்சி செய்த பின்னும், தன்னுடைய ஆசைக்கு இணங்க மறுத்துள்ளார். நீண்ட காலமாகவே எந்தவித காரணமுமின்றி தன்னுடைய கணவருடனான உறவைத் தவிர்த்து வந்திருக்கிறார் அப்பெண்.
தன் மனைவிக்கு இழப்பீடாக 22,000 ரூபாய் வழங்கப்பட்ட பின்னர், இவர்கள் இருவரின் சம்மதத்தோடு பஞ்சாயத்துத் தலைமையில் 1994 ஜூலை மாதம் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் அப்பெண் வேறொருவரைத் திருமணம் செய்திருக்கிறார்.
அதன்பின், அந்த நபர் குடும்ப நீதிமன்றத்தை அணுகி, மனரீதியான கொடுமை மற்றும் பிரிவு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி விவாகரத்துக்குப் பதிவு செய்திருக்கிறார். ஆனால் இவருக்கு விவாகரத்திற்கு மறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்தவர், குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை சுனீத் குமார் மற்றும் ராஜேந்திர குமார் அடங்கிய நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்தது.

தீர்ப்பில், ``சந்தேகத்திற்கு இடமின்றி, போதுமான காரணமின்றி, நீண்ட காலமாகத் தன் துணையுடன் உறவு கொள்ள அனுமதிக்காமல் இருப்பது மனக் கொடுமைக்குச் சமம்.
நீண்ட காலமாக இவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். அப்பெண் திருமண பந்தத்தை மதிக்கவில்லை. திருமண பொறுப்பையும் ஏற்க மறுக்கிறார். வாழ்க்கைத் துணையுடன் மீண்டும் வாழக்கையைத் தொடங்குவதற்குத் துணை நிர்ப்பந்திக்கப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இவர்களின் திருமண உறவில் முழு முறிவு ஏற்பட்டுள்ளது’’ எனக் குறிப்பிட்டு அவருக்கு விவாகரத்து ஆணை வழங்கப்பட்டுள்ளது .