Published:Updated:

பீமா கோரேகான் வழக்கும் ஆனந்த் டெல்டும்டே கைதும்: துக்க நாளாக மாறிய அம்பேத்கர் பிறந்தநாள்!

அம்பேத்கர் வீடு
அம்பேத்கர் வீடு

சட்டமேதை அம்பேத்கரின் 129-வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நேரத்தில், அம்பேத்கரின் குடும்பம் கடுமையான சோதனையிலும் வேதனையிலும் ஆழ்ந்திருந்தது.

இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்தவரும் சுதந்திர இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சருமான டாக்டர் அம்பேத்கரின் 129-வது பிறந்த நாள் ஏப்ரல் 14-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என எல்லோரும் அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மரியாதை செய்த பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ``சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சி என்றுமே உரிய மரியாதையை அளித்ததில்லை. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றிவருகிறது” என்று பெருமையுடன் கூறினார். ஆனால், `அம்பேத்கர் கண்ட கனவு எது? தன் பிறந்த நாளில் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட வேண்டும், சிறை செல்ல வேண்டும் என்பதுதான் அம்பேத்கர் கண்ட கனவு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’ என்று மத்திய ஆட்சியாளர்களைப் பார்த்து கொந்தளிக்கிறார்கள் ஒரு சாரர்.

இழைக்கப்பட்ட அநீதிகள்; மறுக்கப்பட்ட உரிமைகள் தாண்டி ஆளுமையாய் மாறிய அம்பேத்கர்! #AmbedkarJayanti

நாடு முழுவதும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தப்பட்ட நேரத்தில், அம்பேத்கரின் வீட்டில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. பேரன் பிரகாஷ் அம்பேத்கர், பேத்தி ரமா உள்ளிட்ட அம்பேத்கரின் குடும்பத்தினர் மும்பையில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அலுவலகம் முன்பாக பெரும் சோகத்துடன் நின்றனர். அம்பேத்கரின் பேத்தி ரமாவின் கணவரும் புகழ்பெற்ற அம்பேத்கரிய சிந்தனையாளரும் ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் நிறுவனங்களில் பேராசிரியராகப் பணியாற்றியவரும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்டும்டேவின் கைதுதான் அவர்களின் சோகத்துக்குக் காரணம். 2018-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பீகா கோரேகான் என்ற இடத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு ஆனந்த் டெல்டும்டேவின் பேச்சுதான் காரணம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் என்.ஐ.ஏ-வால் ஆனந்த் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சரணடைய வந்த ஆனந்த் டெல்டும்டே
சரணடைய வந்த ஆனந்த் டெல்டும்டே

அம்பேத்கர் குடும்பத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டிருப்பது அம்பேத்கரியவாதிகள், ஜனநாயக சிந்தனையாளர்கள், முற்போக்காளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்த் டெல்டும்டேவுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்தது. அதனால், ஏப்ரல் 14-ம் தேதி மும்பையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் அவர் சரணடையப்போகிறார் என்று செய்திகள் பரபரப்பைக் கிளப்பின. #DontArrestAnand என்ற ஹேஷ்டாக் சமூகவலைதளங்களில் டிரெண்டானது. ஏப்ரல் 14-ம் தேதி மும்பையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆனந்த் டெல்டும்டே சரணடைந்தார். பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டார்.

யார் இந்த ஆனந்த் டெல்டும்டே?

அம்பேத்கரிய சிந்தனையாளராகப் பரவலாக அறியப்பட்ட ஆனந்த் டெல்டும்டே, மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள ரஜூர் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். விஷ்வேஸ்வரா தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் எம்.பி.ஏ படித்த இவர், பிஹெச்.டி ஆய்வுப்பட்டம் முடித்தவர். மத்திய அரசின் `பாரத் பெட்ரோலியம்’, ‘பெட்ரோலியம் இந்தியா லிமிடெட்’ நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை வகித்தவர். பிறகு கரக்பூர் ஐ.ஐ.டி-யிலும் கோவா மேலாண்மை கல்வி நிறுவனத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார். இதுவரை 26 புத்தகங்கள் எழுதியுள்ள அவர், `எகனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி’, `அவுட்லுக்’, `தெஹல்கா’, `செமினார்’ உள்ளிட்ட பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்தார். எகனாமிக் அண்டு பொலிட்டிகல் வீக்லியில் ‘மார்ஜின் ஸ்பீக்’ என்ற தலைப்பிலான விருந்தினர் பத்தியில் சமூக நலன்கள், சமூக நல்லிணக்கம் போன்றவற்றில் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக அவர் விமர்சித்துவந்தார்.

ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த்

சர்வதேச அளவிலான அறிவுஜீவிகள் மத்தியில் மதிக்கத்தக்க சிந்தனையாளராக விளங்கும் ஆனந்த் டெல்டும்டேவின் வாழ்க்கையில், 2018-ம் ஆண்டு சோதனைக் காலம் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்கு மாவோயிஸ்ட்கள் சதித் திட்டம் தீட்டியதாகவும், அதில், ஆனந்த் டெல்டும்டேவுக்குத் தொடர்பு இருப்பதாக மகாராஷ்டிரா காவல்துறை குற்றம்சாட்டியது. தனக்கு எதிரான எஃப்.ஐ.ஆரை ரத்துசெய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தை ஆனந்த் நாடினார். கடந்த ஜனவரி 14-ம் தேதி எஃப்.ஐ.ஆரை ரத்துசெய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், அவர் முன்ஜாமீன் கேட்டு மனு செய்வதற்கு நான்கு வார கால அவகாசம் அளித்தது. பிப்ரவரி 1-ம் தேதி ஆனந்த்தின் முன்ஜாமீன் மனுவை புனே நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இப்போது உச்ச நீதிமன்றமும் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

பீமா கோரேகான் வழக்கு

அது என்ன பீமா கோரேகான் வழக்கு? மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேயிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள பீகா கோரேகான் என்ற இடத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு போர் நடைபெற்றது. தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட மஹர் சாதியினர் பிரிட்டிஷ் படையில் இடம்பெற்றிருந்தனர். உயர்சாதியினர் என்று கருதப்பட்ட பேஷ்வாவின் ஆட்சி மராட்டியத்தில் நடைபெற்றது. மஹர் சாதியினர் ஊருக்குள் நுழைந்தால் இடுப்பில் விளக்குமாறு கட்டிக்கொள்ள வேண்டும், பொது நீர்நிலைகளில் தண்ணீர் எடுக்கக் கூடாது எனப் பல தீண்டாமை வன்கொடுமைகளை அந்த மக்கள் அனுபவித்தனர். அதனால், பேஷ்வாக்களுக்கு எதிராக பிரிட்டிஷ் படையில் மஹர்கள் சேர்ந்தனர்.

ஆனந்த் டெல்டும்டே
ஆனந்த் டெல்டும்டே
Prem Davinci

பீமா கோரேகானில் பேஷ்வா படையினருக்கும் மஹர் சாதியினர் இடம்பெற்றிருந்த பிரிட்டிஷ்படையினருக்கும் இடையே போர் நடைபெற்றது. அதில் பிரிட்டிஷ் படை வெற்றிபெற்றது. 1818-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அந்தப் போர் நிறைவடைந்தது. பேஷ்வாக்களை வெற்றிகொண்டதைக் குறிக்கும் வகையில், போர் நிகழ்ந்த இடத்தில் ஒரு நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு ஒவ்வோர் ஆண்டும் பட்டியல் சமூகத்தினர் லட்சக்கணக்கில் பீமா கோரேகானில் கூடுவது வழக்கம். அப்படி, 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி லட்சக்கணக்கில் மக்கள்கூடியபோது, இவர்கள் மீது வகுப்புவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அது வன்முறையாக வெடித்தது. அதில் ஒருவர் கொல்லப்பட்டார். அந்த வன்முறையைக் கண்டித்து மகாராஷ்டிராவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. ஒட்டுமொத்த மாநிலமும் ஸ்தம்பித்துப்போனது. 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி புனேயில் ஷானிவர் வாடா என்ற பகுதியில் நடைபெற்ற ஒரு விழாவில் ஆனந்த் டெல்டும்டே பேசினார். அந்தப் பேச்சுதான் பீமா கோரேகான் வன்முறையைத் தூண்டிவிட்டது என்று ஆனந்த் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது.

Vikatan

உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்துவிட்ட நிலையில், ஏப்ரல் 14-ம் தேதி ஆனந்த் டெல்டும்டே கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருடன், எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி பத்திரிகையின் ஆசிரியரான கௌதம் நவ்லகாவும் கைதுசெய்யப்பட்டுள்ளார். என்.ஐ.ஏ முன்பாக சரண் அடைவதற்கு முந்தைய நாள், `இந்திய மக்களுக்கு திறந்த மடல்’ என்று ஒரு கடிதம் எழுதினார் ஆனந்த் டெல்டும்டே. அதில், தான் அனுபவித்த துயரங்களை அவர் வேதனையுடன் விவரித்துள்ளார். ``2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவா இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் ஆசிரியர்கள் குடியிருப்பு வளாகத்தில் என் வீட்டை போலீஸார் சோதனை செய்தனர். அதிலிருந்து என் உலகம் முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. நான் கனவில்கூட நினைத்துப்பார்க்காத மிக மோசமான விஷயங்கள் நடக்கத் தொடங்கின. அவற்றை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. ஒரு நாள் என் நிறுவனத்தின் இயக்குநரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு. சில மணி நேரத்துக்கு முன்பாகத்தான் மும்பைக்கு வந்திருந்தேன். `வளாகத்தைச் சோதனையிட்டு காவல்துறையினர் உங்களைத் தேடுகிறார்கள்' என்று இயக்குநர் தெரிவித்தார்.

கௌதம் நவ்லகா
கௌதம் நவ்லகா

செக்யூரிட்டியிடமிருந்து அவர்கள் வலுக்கட்டாயமாக ஒரு டூப்ளிகேட் சாவியை வாங்கி, எங்கள் வீட்டைத் திறந்து வீட்டை வீடியோ பதிவுசெய்து மீண்டும் பூட்டினர். கடுமையான உபா (UAPA) சட்டத்தின் விதிகளின்படி நான் சிறையில் அடைக்கப்படுகிறேன். இங்கு தேசத்தை அழிப்பவர்கள் தேசபக்தர்களாகவும், தன்னலமற்ற சேவகர்கள் தேசவிரோதிகளாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளனர். என் இந்தியா பாழடைந்துவருவதைக் காணும்போது, இதுபோன்ற ஒரு மோசமான தருணத்தில் பலவீனமான நம்பிக்கையுடன்தான் உங்களுக்கு எழுதுகிறேன். நான் என்.ஐ.ஏ காவலுக்கு செல்லவிருக்கிறேன். இனி உங்களுடன் எப்போது பேச முடியும் என்று தெரியவில்லை. இருப்பினும் உங்கள் முறை வருவதற்கு முன்பு நீங்கள் பேசுவீர்கள் என்று ஆவலுடன் நம்புகிறேன்” என்று எழுதியிருக்கிறார்.

ஏற்கெனவே இதே வழக்கில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கவிஞர் வரவர ராவ், தானேவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் ஃபெரெய்ரா, ஃபரிதாபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெர்னன் கோன்சல்வ்ஸ் ஆகியோர் சுமார் ஒன்றரை ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உபா சட்டத்தில் அவ்வளவு எளிதாக ஜாமீன் கிடைத்துவிடாது.

அடுத்த கட்டுரைக்கு