அயோத்தியா மண்டபம்:
கடந்த 1954-ம் ஆண்டு சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பின் மூலம் அயோத்தியா மண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபம் பொது மக்களின் நன்கொடைகள் மூலமாகவும், காணிக்கைகளின் மூலமாகவும் நிர்வகிக்கப்பட்டு இயங்கிவந்தது. இந்த நிர்வாகத்தில் நிதி முறைகேடு நடப்பதாக, அந்த அமைப்பிலிருந்த ஒருவர் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் அடிப்படியில் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு அயோத்தியா மண்டபத்தை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்துக் கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை நீண்டகாலமாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் தனி நீதிபதி வேலுமணி அமர்வுக்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தலாம் என்று கூறி, ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகையகப்படுத்திய அறநிலையத்துறை:
மேல்முறையீடு மனு மீதான வழக்கு விசாரணை, நீதிபதி துரைசாமி, தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பின் தரப்பு மற்றும் அரசு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தனர். அதோடு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எந்த இடைக்காலத் தடையும் பிறப்பிக்க முடியாது என்றும் கூறினார்கள். இதனைத் தொடர்ந்துதான், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அயோத்தியா மண்டபத்தில் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது அங்கு 50-க்கும் மேற்பட்டவர்கள் மண்டபத்தைப் பூட்டுப் போட்டு அதிகாரிகளை உள்ளே நுழையவிடாது தடுத்து நிறுத்தினர்.
பா.ஜ.க தலைவர்கள் சிலர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த அதிகாரிகள் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தாசில்தார் மூலம் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது. மேலும், அந்த மண்டபத்தின் நிர்வாகத்திற்காக அறநிலையத்துறை சார்பில் அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டார். இந்த சூழலில்தான் மேல் முறையீடு மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி கொண்ட அமர்வுக்கு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ரத்து செய்த நீதிமன்றம்:
இந்த விசாரணையின் போது, ``மாற்றுத் தீர்வு உள்ளது என்று சொல்லிப் பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த வழக்கைத் தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது. தனியார் அமைப்பு நடவடிக்கையில் அரசு தலையிட முடியாது" என்று நீதிபதி கூறினார். மேலும், அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படலாம் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். நேற்று நீதிமன்ற நேரம் முடியவே, இந்த வழக்கு விசாரணை இன்று தொடர்ந்தது. இன்று பேசிய நீதிபதி, ``இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை. மண்டபம் கையகப்படுத்துவது தொடர்பாக உரியக் காரணங்கள் சொல்லப்படவில்லை" என்றார்.
தொடர்ந்து பேசியவர், ``வழக்கு விசாரணையில் புகாரின் மீது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற விளக்கத்தை அளிக்கவில்லை. சரியான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. மண்டபத்தைக் கையகப்படுத்தும் உத்தரவை ரத்து செய்வதோடு, தனி நீதிபதியின் உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், அறநிலையத்துறை நிர்வாகி நியமித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை புதிய விசாரணை மேற்கொண்டு, அனைத்து தரப்பினரின் விளக்கங்களையும் கேட்டு, சட்டங்களுக்கு உட்பட்டு புதிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.