கொலிஜியம்:
இந்தியாவில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் கொலிஜியம் பரிந்துரையின்படி நடைபெற்று வருகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் குழு புதிய நீதிபதிகளைத் தேர்வு செய்வது, இடம் மாற்றம் செய்வது போன்ற பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பும். இந்த பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்டத் துறை அமைச்சகம் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று அதற்கான அறிவிப்பை வெளியிடும்.

கொலிஜியத்தின் பரிந்துரைகளை நிராகரிக்கும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது. ஆனால், சுயேச்சையாக புதிய நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது. இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்த, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் கொண்டுவரப்பட்டது. ஆனால், கடந்த 2015-ம் ஆண்டு இந்த ஆணையத்தையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
நீதிபதிகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்களே!
கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "கடந்த 1993-ம் ஆண்டு வரை இந்தியாவில் அனைத்து நீதிபதிகளும், சட்டத்துறை அமைச்சகமும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் ஆலோசனை நடத்தி நியமிக்கப்பட்டு வந்தார்கள். அந்த சமயத்தில் நாம் மிகச் சிறப்பான நீதிபதிகளைக் கொண்டிருந்தோம். இந்த விஷயத்தில் அரசியலமைப்பு மிகவும் தெளிவாக உள்ளது. நீதிபதிகளை ஜனாதிபதிதான் நியமிக்க வேண்டும். கொலிஜியம் முறையில் நீதிபதிகளின் நியமனத்தை நாட்டு மக்கள் விரும்பவில்லை என்பது எனக்குத் தெரியும். நீதிபதிகளை நியமிப்பது அரசின் வேலை" என்றார்.

மேலும், "நீதிபதிகள் தங்கள் சகோதரர்களை நீதிபதிகளாக நியமிப்பது இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் நடக்கவில்லை. நீதிபதிகளின் முதன்மை பணி நீதியை வழங்குவது. ஆனால், கொலிஜியம் குழுவில் உள்ள நீதிபதிகளின் பணிகள் பாதிக்கப்படுகிறது. மற்ற நீதிபதிகளைத் தேர்வு செய்யும் நடைமுறையில் தலையிடாமல் இருந்தால் நீதிபதிகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். அதேவேளையில் அவர்கள் நிர்வாகத்தில் தலையிட்டால் அவர்களும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள்" என்று விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
நடைமுறை சரியானதாக இல்லை!
இந்த மாதம் தொடக்கத்தில் நீதித்துறை சீர்திருத்தம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "கொலிஜியம் அமைப்பில் உள்ள நீதிபதிகள் தங்களுக்குத் தெரிந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாகப் பரிந்துரைக்கிறார்கள். தங்களுக்குத் தெரிந்த நீதிபதிகளுக்குப் பதவி உயர்வு அளிக்கப் பரிந்துரைக்கிறார்கள். அடிப்படையிலேயே இந்த நடைமுறையைச் சரியானதாக இல்லை. தகுதியானவர்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படுவதில்லை" என்றார்.

தொடர்ந்து பேசியவர், " தங்களுக்குத் தெரியாதவர்களை அவர்கள் பரிந்துரை செய்வதில்லை. தகுதியானவர்கள்தான் நீதிபதியாக நியமிக்கப்படவேண்டும். கொலிஜியத்துக்கு தெரிந்தவர்கள் கிடையாது. நான் நீதித்துறையையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கவில்லை. தற்போது நடைமுறையில் உள்ள கொலிஜியம் அமைப்பில் எனக்குத் திருப்தி கிடையாது. அந்த நடைமுறை சரியானதாக இல்லை. நாம் ஒரு சிறந்த அமைப்பை உருவாக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்" என்று பேசியிருந்தார்.
அரசு எல்லை மீறிச் செல்கிறது:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது. பரிந்துரை செய்து ஒரு வருடம் கடந்த நிலையில் அரசு காலம் தாழ்த்தி வருவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஏ.எஸ்.ஓகா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், "கொலிஜியம் பரிந்துரைத்த சில பெயர்கள் ஒன்றரை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.
கொலிஜியம் சீனியாரிட்டி அடிப்படையில் பெயர்களைப் பரிந்துரை செய்கிறது. அரசு ஒரு சிலரை மட்டும் தேர்வு செய்வது சீனியாரிட்டி நடைமுறையைப் பாதிக்கிறது. அரசின் காலதாமதம் எல்லை மீறிச் செல்கிறது. சில உயர் நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிபதி பரிந்துரை கூட முடிவெடுக்கப்படாமல் இருக்கிறன. இந்த விஷயத்தில், நீதித்துறை முடிவெடுக்க வேண்டிய சூழலுக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள்" என்று பேசியிருந்தார்கள்.
இந்த சூழலில் வழக்கறிஞர்கள் சந்தோஷ் கோவிந்தராவ் மற்றும் மிலிந்த் மனோகர் சதாயே ஆகியோர் மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கொலிஜியம் மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பதவிகளுக்கு பத்து பேர் கொண்ட பட்டியலை அனுப்பியிருந்த நிலையில் இரண்டு பேருக்கு மட்டும் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. நிராகரிக்கப்பட்ட எட்டு பேரில் மூத்த வழக்கறிஞர் சவுரவ் கிர்பால், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.கிர்பாலின் மகனும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.