Published:Updated:

அயோத்தி வழக்கு... உச்சநீதிமன்ற தீர்ப்பின் சாரம்சங்கள் என்னென்ன?

"சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தை மூன்று பகுதியாகப் பிரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது. இதனால், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் திருப்தியடைப் போவதில்லை, அமைதியும் ஏற்படப்போவதில்லை."

பாபர் மசூதி, அயோத்தி வழக்கு
பாபர் மசூதி, அயோத்தி வழக்கு

பல ஆண்டுகளாக நிலவி வந்த அயோத்தி பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், முஸ்லீம்கள் வழிபடுவதற்கு மாற்று இடமாக அயோத்திக்குள்ளேயே 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள நீதிமன்றம், பாபர் மசூதி இருந்த பகுதி மூன்றாக பிரிக்கப்பட்டது செல்லாது எனவும் தீர்ப்பளித்துள்ளது.

அயோத்தி நிலம்! - 1528 முதல் 2019 தீர்ப்புவரை நடந்தது என்ன? #AyodhyaVerdict

உச்சநீதிமன்றத்தில் ஆக.6, 2019-ல் தொடங்கப்பட்ட அயோத்தி வழக்கின் வாதம், 40 நாள்கள் தொடர்ச்சியாக நடைபெற்று அக்.16-ம் தேதி முடிவுற்றது. நேற்று வழங்கப்பட்டுள்ள 1045 பக்கங்கள் கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் வேறு என்னென்ன சாரம்சங்கள் உள்ளன? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. அயோத்தி வழக்கு அசையாச் சொத்து சம்பந்தப்பட்டது. இவ்வழக்கில், ஆதாரத்தின் அடிப்படையில் மட்டுமே அணுக முடியுமே தவிர, நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளிக்க முடியாது. பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தின் வெளிபுறத்தில், 1857-ல் மதில்சுவர் எழுப்பப்பட்ட போதும் அங்கு இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். பாபர் மசூதியின் வெளிபுறம் இந்துக்கள் கட்டுப்பாட்டிலும், உள்புறம் முஸ்லீம்களின் கட்டுப்பாட்டிலும் இருந்துள்ளதை ஆதாரப்பூர்வமாக அறிய முடிகிறது.

பாபர் மசூதி உள்ளே
பாபர் மசூதி உள்ளே
Sunil Bajpai

2. 1857-ல் அவுத் மாகாணம் பிரிட்டிஷ் அரசால் கைப்பற்றப்படுவதற்கு முன்னதாக, பாபர் மசூதிக்குள்ளே இந்துக்கள் வழிபட்டதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால், 1528-ல் தொடங்கி 1857 வரையில், இம்மசூதி தங்கள் முழு கட்டுப்பாட்டிற்குள் இருந்ததற்கான ஆதாரங்களை முஸ்லீம்களால் சமர்ப்பிக்க முடியவில்லை. டிசம்பர் 16, 1949-ல் இங்கு வெள்ளிக்கிழமை தொழுகை நடந்ததற்கான சான்றுகள் உள்ளன. டிசம்பர் 22-23 தேதிகளில் மசூதியை சிதைக்கும் விதமாக இந்து சிலைகள் உள்ளே நிறுவப்பட்டன. இது முஸ்லீம்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பதற்காகவே நிகழ்த்தப்பட்டது. இதற்கு பின்னர், 1898 சி.ஆர்.பி.சி. பிரிவு 145-ன் படி மசூதிக்குள் வைக்கப்பட்ட இந்து சிலைகளை வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 450 வருடமாக கட்டப்பட்டிருந்த மசூதிக்குள் வழிபடும் உரிமை முஸ்லீம்களிடம் இருந்து தவறாக பறிக்கப்பட்டுள்ளது.

3. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தை மூன்று பகுதியாகப் பிரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது. இதனால், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் திருப்தியடைப் போவதில்லை, அமைதியும் ஏற்படப்போவதில்லை.

பாபர் நுழையாத பாபர் மசூதி: அயோத்தியில் என்ன நடந்தது? பாகம் 1

4. பாபர் மசூதி இருந்த இடத்தில், ராமர் பிறந்து வாழ்ந்தார் என்று இந்துக்கள் நம்புவதை விவாதப் பொருளாக்க முடியாது. இந்த நம்பிக்கையில் நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல. 1528-ல் பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்னர், இந்த இடத்தில் இஸ்லாமிய கட்டடக்கலை அல்லாத வேறொரு கட்டடம் இருந்ததற்கான சான்றுகளை இந்திய தொல்லியல்துறை அளித்துள்ளது. அதேவேளையில், மசூதிக்கு அடியில் உள்ள கட்டட அமைப்பு கோயில் என்றும் தொல்லியல் துறை கூறவில்லை. இந்த அறிக்கையை முற்றிலுமாக புறந்தள்ள முடியாது.

5. 1857-ல் பிரிட்டீஷ் அரசாங்கம் வருவதற்கு முன்னதாக வரையில், மசூதிக்குள் இந்துக்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். ராமன், சீதாவை வணங்கியதற்கான சான்றுகள் உள்ளது.

அயோத்தி
அயோத்தி
ANI

6. முஸ்லீம்களின் வழிபாட்டு உரிமை டிசம்பர் 22-23, 1949-ல் பறிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 6, 1992-ல் மசூதியே இடித்து தகர்க்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அவர்களின் வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

7. முஸ்லீம்களுக்கு உரிய நிவாரணம் அளித்திடும் வகையில், 5 ஏக்கர் நிலம் அளிக்கப்பட வேண்டும். இதில் அவர்கள் தங்கள் மத வழிபாட்டை நிறைவேற்றும் விதிமாக மசூதி கட்டிக் கொள்ளலாம். அயோத்தியில் ஏற்கனவே கையகப்படுத்தியுள்ள நிலத்தில் இருந்து மத்திய அரசோ, அல்லது மாநில அரசோ ஐந்து ஏக்கர் நிலத்தை சன்னி வஃக்பு வாரியத்துக்கு வழங்க வேண்டும்.

பல்பீராக பாபர் மசூதியை இடித்தார்... இன்று அமீராக மசூதிகளைக் கட்டுகிறார்!

8. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அடுத்த மூன்று மாதத்திற்குள் கமிட்டியோ, அல்லது அறக்கட்டளையோ நிறுவ வேண்டும். இந்த அமைப்பின் கீழ்தான், நிலத்தின் நிர்வாகமும், அயோத்தியில் இந்துக்கள் கோயில் கட்டும்பணியும் நடைபெற வேண்டும். இந்த அமைப்பின் உறுப்பினராக, நிர்மோகி அகாரா அங்கம் வகிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

9. மூன்று மாத காலத்திற்குள், தங்களுக்கு ஒதுக்கப்படும் 5 ஏக்கர் நிலத்தில் முஸ்லீம்கள் மசூதியை கட்டிக் கொள்ளலாம். இந்த இடம் சன்னி வக்ஃபு வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

10. இத்துடன், அயோத்தி வழக்கு தொடர்பாக நிலுவையிலுள்ள மற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

`அயோத்தி தீர்ப்பு'- அடுத்து என்ன நடக்கும்?

வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் பராசரன், ராஜிவ் தவான் ஆகியோரின் பணிகளை வெகுவாக பாராட்டியுள்ள உச்சநீதிமன்றம், இத்தீர்ப்பை பொதுமக்கள் ஏற்று அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.