``2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே, அவர்மீது மோசடி, ஏமாற்றுதல், நம்பிக்கை மீறல், நேர்மையின்மை, அவதூறு, ஏமாற்றுதல் போன்ற குற்றங்களுக்கான வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்" என குர்ஷிதுரேமான் எஸ்.ரஹ்மான் என்பவர் அலிகார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரின் மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, அவர், தீர்ப்பை எதிர்த்து கீழமை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அங்கும் அவரது மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் இரண்டு கீழ் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த 2-ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் பதக், ``அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கை, அவர்களின் கொள்கை, பார்வை, வாக்குறுதிகள் மற்றும் உறுதிமொழிகளின் அறிக்கை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதனால், நீதிமன்றத்தின் மூலம் அவற்றைச் செயல்படுத்த முடியாது. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், அரசியல் கட்சிகளை அமலாக்க அதிகாரிகளின் பிடியில் கொண்டு வருவதற்கு எந்தச் சட்டத்திலும் அபராதம் விதிக்கப்படவில்லை. எனவே, தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் அரசியல் கட்சிகளுக்கு அபராதம் விதிக்க முடியாது" என்று கூறி ரஹ்மானின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.