Published:Updated:

ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு: ``இரவோடு இரவாக 50,000 மக்களைக் கூண்டோடு அகற்ற முடியாது"- உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானியில் ரயில்வேக்குச் சொந்தமான நிலத்தில் 4,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்பவர்களை வெளியேற்றும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது.

ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு: ``இரவோடு இரவாக 50,000 மக்களைக் கூண்டோடு அகற்ற முடியாது"- உச்ச நீதிமன்றம்

உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானியில் ரயில்வேக்குச் சொந்தமான நிலத்தில் 4,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்பவர்களை வெளியேற்றும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது.

Published:Updated:
உச்ச நீதிமன்றம்

உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானியில் 29 ஏக்கர் ரயில்வே நிலத்தில் 4,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அந்த நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக உத்தரகாண்ட் அரசு குற்றம்சாட்டியிருந்தது. அதோடு, அந்த நிலத்தில் இருப்பவர்களை அப்புறப்படுத்த முயன்றதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் அரசுக்கெதிராகப் போராடத் தொடங்கினர். அந்தப் பகுதியில், மருத்துவமனைகள், 4 அரசுப் பள்ளிகள், 11 தனியார் பள்ளிகள், 10 மசூதிகள், 4 கோயில்கள் மற்றும் 2 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளும் இருக்கின்றன. அங்கிருக்கும் மக்கள் அரசுக்கு வரியும் செலுத்திவருகின்றனர்.

ஹல்த்வானி
ஹல்த்வானி
ட்விட்டர்

இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது. வழக்கை விசாரித்த உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம், ``ஜனவரி 9-ம் தேதிக்குள் அங்கு வாழும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அவர்கள் மறுத்தால், காவல்துறை, துணை ராணுவத்தின் உதவியுடன் அவர்களை அப்புறப்படுத்தலாம்" என டிசம்பர் 20-ம் தேதி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் அரசு அதிகாரிகள் அங்கு வசிப்பவர்களுக்கு நோட்டீஸ் அளித்திருக்கின்றனர். ஆனாலும், மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர்.

மேலும், உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``இரவோடு இரவாக 50,000 மக்களைக் கூண்டோடு அகற்ற முடியாது. இது மனிதநேயத்தோடு தொடர்புடைய விவகாரம். இந்த விஷயத்துக்கு சுமுகமான தீர்வு என்பது அவசியம். 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருப்பவர்களை போலீஸார், துணை ராணுவத்தின் உதவி மூலம் அகற்றுவதற்கு உத்தரவிட்ட உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சரியில்லை.

போராடும் மக்கள்
போராடும் மக்கள்
ட்விட்டர்

அந்தப் பகுதியில் ரயில்வே சார்பிலும், அரசு சார்பிலும் கட்டப்பட்டுவரும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் ரயில்வேதுறை, உத்தரகாண்ட் அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்கிறோம். இந்த வழக்கு அடுத்த மாதம் மீண்டும் விசாரிக்கப்படும்" என உத்தரவிட்டனர்.